Thursday, May 15, 2014

Bajaj Discover 125M Features in tamil

பஜாஜ் டிஸ்கவர் வரிசையில் ஏற்கெனவே  ஏகப்பட்ட மாடல்கள் இருக்கின்றன. பஜாஜ் இந்த வரிசை பைக்குகளில் அவ்வப்போது இன்ஜின், ஸ்டைல், கிராஃபிக்ஸ் என ஏதாவது அப்டேட்களைச் செய்துகொண்டே இருக்கும். 100 சிசி செக்மென்டில் வெளிவந்த டிஸ்கவர் 100M பைக்குக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, 125 செக்மென்ட்டிலும் மைலேஜ் வாடிக்கையாளர்களைக் கவர, டிஸ்கவர் 125M என்ற மாடலைக் கொண்டுவந்துள்ளது பஜாஜ்.



கம்யூட்டர் பைக் வாங்கும் வாடிக்கையாளர்களை, எல்லா செக்மென்ட்டிலும் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்பதால், மைலேஜ் விஷயத்திலும் தெளிவாக இருக்கிறது பஜாஜ். ஏற்கெனவே, டிஸ்கவர் 125 சிசி மாடலில் ST, T ஆகிய மாடல்கள் இருக்க... இன்ஜினில் சின்ன மாறுதல்கள் செய்து 'M’ என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறது பஜாஜ்.  M என்றால், மைலேஜ் என்று அர்த்தமாம். சரி, கம்யூட்டர் பைக் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யுமா இந்த பைக்?

ஏற்கெனவே விற்பனையில் உள்ள டிஸ்கவர் 125 பைக்குகளுக்கும் இதற்கும் பெரிதாக வித்தியாசங்கள் இல்லை. ஆனால், பாடி கிராஃபிக்ஸ் மற்றும் ஸ்டிக்கர் வேலைப்பாடுகள் புதுசு. தனித்துவமான 10 ஸ்போக் அலாய் வீல்களும், சைலன்ஸர், இன்ஜின் ஆகியவற்றில் பூசப்பட்டுள்ள கறுப்பு வண்ணமும் மிளிர்கிறது. ஹெட்லைட்டின் மீது கவிந்திருக்கும் வைஸர் கவர்ச்சியாக இருக்கிறது. இதன் மறைவில் உள்ள மீட்டர் கன்ஸோல் பேனல், அழகாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அனலாக் ஸ்பீடோ, ஓடோ மீட்டரும்... பெட்ரோல் மீட்டரும் உள்ளன. நீளமான பேனலில் நியூட்ரல், ஹெட்லைட், இண்டிகேட்டர் சிக்னல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சீட்டில் அமர்ந்தால், உயரமான இடத்தில் அமர்ந்திருப்பதுபோன்று இருக்கிறது. டேங்க், கால்களை அணைத்து வைத்துக்கொள்ள வசதியாக இருக்கிறது. ரியர் வியூ கண்ணாடிகள் பின்னால் வரும் வாகனங்களைத் தெளிவாகக் காட்டுகின்றன. ஹேண்டில்பார், பிடித்து ஓட்டுவதற்கு வசதியாக இருக்கிறது. ஃபுட்ரெஸ்ட் - கால்களை வைக்க வசதியாக இருந்தாலும், கியர்பாக்ஸில் கால் படுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதனால், இன்ஜின் சூடு கால்களைப் பதம்பார்க்கிறது. ஷூ அணிபவர்களுக்குப் பிரச்னை இல்லை. சைடு பேனலில் இருக்கும் 125M லோகோ மட்டுமே வித்தியாசம் எனலாம். மற்றபடி டெயில் லைட், கிளியர் லென்ஸ் இண்டிகேட்டர் போன்றவை டிஸ்கவர் மாடல்களில் இருப்பதுதான்.


டிஸ்கவர் 125 மாடல்களில் இருக்கும் அதே 124.6 சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு, DTS-i இன்ஜின்தான் என்றாலும், மைலேஜுக்காக பவரில் சில மாறுதல்கள் செய்திருக்கிறது பஜாஜ். 8,000 ஆர்பிஎம்-ல் 11.3 bhp சக்தியையும் 6,000 ஆர்பிஎம்-ல் 1.10 kgm டார்க்கையும் அளிக்கிறது இந்த இன்ஜின். இது, டிஸ்கவர் 125T மாடலைவிட 1 bhp  சக்தி குறைவு. அதேபோல், 125 ST மாடலைவிட 1.5bhp சக்தி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. மைலேஜுக்காக சக்தியை அட்ஜஸ்ட் செய்திருக்கிறார்கள் என்பது புரிகிறது. இதன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ், மைலேஜுக்காகவே டிஸைன் செய்யப்பட்டுள்ளதைப் போலவே இருக்கிறது. கியர் மாற்றுவது ஸ்மூத்தாக இருந்தாலும், வலுவாக மிதிக்க வேண்டியது அவசியம். டிஸ்கவர் வாகனங்களுக்கு உரித்தான இன்ஜின் சத்ததுடன், ஸ்மூத்தாகவே இயங்குகிறது 125M இன்ஜின்.

உயரமான ஓட்டுதல் பொசிஷனுடன் வடிவமைக்கப்பட்டுள்ள டிஸ்கவர் 125M, அன்றாடப் பயன்பாட்டுக்கான வாகனமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நகரம், நெடுஞ்சாலை ஆகிய இரண்டிலும் ஓட்டுவதற்கு ஏற்ப இருந்தாலும், நீளமான வீல்பேஸ் காரணமாக சிட்டி டிராஃபிக்கில் வளைத்து நெளித்து ஓட்டுவது சிரமமே. பிரேக், கையாளுமை சிறப்பாக இருந்தாலும், டயர்களில் போதுமான கிரிப் இல்லை. பெயருக்கு ஏற்றபடி, நகருக்குள் லிட்டருக்கு 55.6 கி.மீ, நெடுஞ்சாலையில் 57.8 கி.மீ மைலேஜ் அளிக்கிறது டிஸ்கவர் 125M.

100 சிசி செக்மென்ட்டில் இருப்பவர்கள், மைலேஜை சமரசம் செய்துகொள்ளாமல், அடுத்த கட்டத்துக்குச் செல்ல ஏற்ற பைக், டிஸ்கவர் 125M.

Thursday, May 1, 2014

black money recovery is possible?

''நாங்கள் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் 100 நாட்களில் வெளிநாடுகளில் பதுக்கிவைத்துள்ள கறுப்புப்பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவோம். அந்தப் பணத்தை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவோம்'' என்று சொல்லி யிருக்கிறார் பா.ஜ.க.வின் தலைவர் ராஜ்நாத் சிங். இந்த அறிவிப்பை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றாலும், இது நடைமுறையில் எந்த அளவுக்கு சாத்தியம் என்பது முக்கியமான விஷயம்.
 
வெளிநாடுகளில் கறுப்புப்பணம் பதுக்கிவைத்திருப்போர் பட்டியலில் சீனா மற்றும் மெக்சிகோ நாடுகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள நிலையில், இந்தியா எட்டாம் இடத்தில் உள்ளது. பலவகையில் இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்படும் பெரும்பான்மை கறுப்புப்பணம் வங்கிகளிலும், வரிச் சொர்க்கம் (Tax Heaven)என்று கூறப்படும் நாடுகளிலும் முடக்கி வைக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் பெரும்பான்மை பணம் பின்நாட்களில் வரும் அரசியல் மற்றும் வியாபாரத் தேவையை மனத்தில்கொண்டு தேக்கி வைக்கப்பட்டு இருக்கிறது.இத்தகைய கறுப்புப்பணம் அரசியல்வாதிகள் மற்றும் சில பெரும் தொழிலதிபர்களது லஞ்சம் மற்றும் ஊழல் வகையைச் சேர்ந்தது என்பதால் இந்தப் பணத்தை மீட்டுக்கொண்டுவருவோம் என்று யாராவது சொன்னாலே, மக்கள் ஆதரிக்கத் தயாராக இருக்கிறார்கள்.
 
இரண்டு சாத்தியங்கள்! 

இந்தப் பணத்தை மீட்டுக்கொண்டு வருவது இரண்டுவிதங்களில் சாத்தியம். ஒன்று, கறுப்புப் பணத்தைத் தீவிர அரசாங்க நடவடிக்கை மூலம் பிறநாடுகளுடன் உள்ள ரகசிய ஒப்பந்த அடிப்படையில் பெற்று, அதற்கான முயற்சிகளைச் செய்து அதை மீட்பது.



 இதன்படி, அரசாங்கம் மற்ற நாடுகளுக்கிடையே உள்ள இருநாட்டு ஒப்பந்தங்களின்படி, தகவல் பெறும் உரிமையை நிலைநாட்டி போதிய தகவல்களைப் பெற்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு கறுப்புப்பணத்தை நமது நாட்டுக்கு மீட்டுக்கொண்டுவருவது. இந்தக் குற்றத்துக்குண்டானவர்களைச் சட்டத்தின் முன்நிறுத்தி அதற்கான தண்டனையைப் பெற வைப்பது.
 
இரண்டாவது, கொண்டு சென்றவர் தாமாகவே முன்வந்து இந்தியாவுக்குள் மீண்டும் கொண்டுவர திட்டங்களை அறிவிப்பது. இதன்படி, இந்தியாவில் கடந்த முப்பது ஆண்டுகளில் மூன்றுமுறைக்குக் குறையாமல் 'தாமாக முன்வந்து வரி செலுத்தும்’ திட்டங்களை (Voluntary Disclosure of Income Scheme (VDIS) வருமான வரித்துறை அறிமுகம் செய்தது.
 
டைசியாக 1997-ல் அறிமுகம் செய்த திட்டத்தில் சுமார் 3,50,000 வரிதாரர்கள் சுமார் ரூ.7,800 கோடி கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டுவந்து அதற்கான வரியைச் செலுத்தினர். ஆனால், இவை அனைத்தும் உள்நாட்டில் இருக்கும் கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டுவர அறிவிக்கப்பட்ட திட்டங்கள். வெளிநாட்டில் இருக்கும் கறுப்புப்பணத்தைக் கொண்டுவர இதுவரை எந்த வகையிலும் முயற்சி செய்தபாடில்லை.
 
ஆனால், பல வெளிநாடுகள் இத்தகைய திட்டத்தை நடைமுறைப்படுத்தி வெற்றிகண்டுள்ளன. வெளிநாட்டில் இருக்கும் சொத்துக்களை அறிவித்து வரி மற்றும் அபராதம் செலுத்தி சிறைத் தண்டனையிலிருந்து விடுபடும் திட்டத்தை முதன்முதலில் அறிவித்தது ஜெர்மனிதான். அதன்பின் இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, போர்ச்சுகல், இஸ்ரேல், கிரீஸ், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் இத்தகைய திட்டத்தை அறிமுகம் செய்து கறுப்புப்பணத்தைத் தமது நாட்டுக்குக் கொண்டுவரும்படி செய்துள்ளன.
 
அமெரிக்காவின் அதிபராக ஒபாமா பதவியேற்றபின் 2009 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் OVDI (Offshore Voluntary Disclosure Initiative) ñŸÁ‹ OVDP (Offshore Voluntary Disclosure Programme) என்னும் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். இந்தப் பொதுமன்னிப்புத் திட்டத்தில்(Amnesty) அமெரிக்கக் குடிமக்கள் சுமார் 33,000 பேர் 5 பில்லியன் டாலர் அளவுக்கு வரி மற்றும் அபராதத்தைச் செலுத்தியுள்ளனர். இந்தத் திட்டத்தை மூன்றாவது முறையாக கடந்த ஆண்டும் அமெரிக்க அரசாங்கம் அறிமுகம் செய்ததைப் பார்க்கும்போது இதன் முக்கியத்துவமும் வெற்றியின் அளவும் புரிகிறது.வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் இத்தகைய பொது மன்னிப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வெற்றி அடைந்திருக்கும்நிலையில், இந்தியாவும் இந்த முயற்சி குறித்து தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் இந்தியாவைவிட்டு வெளியே எடுத்துச் செல்லப்பட்ட கறுப்புப்பணம் இந்திய மண்ணுக்குள் வர வாய்ப்பாக இருக்கும்.இவர்களைத் தண்டனையிலிருந்து மன்னிப்பது நேர்மையாக வரி செலுத்துவோரை நிச்சயம் ஏளனப் படுத்துவதாக இருக்கும். ஆனால், தண்டிக்கும் விஷயத்தில் நாம் உறுதியாக இருந்தால், கறுப்புப்பணம் நம் நாட்டுக்குள் வராமலே போய்விடும். அந்நிய செலாவணி தொடர்பான சொத்துகள் இந்தியாவுக்குள் வரி மற்றும் அபராதத்தோடு வர வாய்ப்பு இருக்குமானால் அதைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.இந்திய வரிதாரர்கள் வெளிநாட்டில் உள்ள சொத்துகள் மற்றும் வெளிநாட்டு வருமானம் குறித்து விவரம் தெரிவிக்க வேண்டும் என்று வருமான வரிச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப் பட்டுள்ளது ஒரு நல்ல முயற்சியே.
 
இனி எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், நூறு நாட்களில் கறுப்புப்பணம் மீட்டுக் கொண்டு வரப்படும் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. என்றாலும், அதற்கான முனைப்பு இருப்பது வரவேற்கத்தக்கது. இது வெறும் தேர்தல் பேச்சாக மட்டும் இல்லாமல், சீரிய முயற்சியின் மூலம் கறுப்புப்பணத்தின் ஒரு பகுதியாவது இந்தியாவுக்கு வரும்பட்சத்தில் மின் உற்பத்தி, கட்டமைப்பு (Infrastructure), சுகாதாரம், கல்வி போன்ற முக்கியத் திட்டங்களுக்கு வெகுவாகப் பயன்படும் என்பதில் சந்தேகமே இல்லை.

தங்க நகை வாங்கும்போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!


Monday, April 28, 2014

தங்க நகை வாங்கும்போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

அட்சயதிருதியை அன்று ஒரு கிராம் நகையாவது வாங்கிவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள் நம்மவர்கள். அப்படி  நகை வாங்கும்போது அவசியம் கவனிக்க வேண்டியவை என்னென்ன 
 
1. ஹால்மார்க் நகைகள்! 

நீங்கள் வாங்கும் நகைகள் ஹால் மார்க் முத்திரை கொண்ட நகைகளா என்று பார்த்து வாங்குவது அவசியம். நம்பர் 1 நகை, தரம் நிறைந்தது என விளம்பரத்தில் சொல்லப்பட்டாலும் ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகள் தான் தரமானவை. அதிலும் ஐந்து முத்திரை (முக்கோண சிம்பல், 916, டெஸ்ட் செய்த லேப், வருடம், கடை எண்) உள்ள ஹால்மார்க் நகைகளே தரமானவை. இதை பலரும் கவனிக்காமல் மூன்று முத்திரை கொண்ட ஹால்மார்க் நகைகளை வாங்கிவிடுகின்றனர். மேலும், வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை உண்டு.

2.கல் நகைகள்!
தங்க நகைகளை வாங்கும்போது கல் வைத்த நகைகளை வாங்கு கிறீர்கள் எனில், அவை எத்தனை கிராம் உள்ளன, அதற்கான விலை எவ்வளவு, மொத்த விலையில் கற்கள் போக தங்கத்தின் விலை சரியாக உள்ளதா என்று பார்த்து வாங்குங்கள். பிற்காலத்தில் அந்த நகைகளை தந்து புது நகை வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ கல் நகைகளுக்கு மதிப்பு குறைத்தே கணக்கிடப்படும். ஆகவே, கல் நகைகளை வாங்கும்போது கவனத்தோடு இருக்கவேண்டியது அவசியம்.

3. டிசைன்! 

சிலர் நகை வாங்கவேண்டும் என்றதுமே நல்ல டிசைனாக இருக்க வேண்டும் என்று நினைக்க தொடங்கிவிடுவார்கள். அப்படி டிசைன் நகைகளை வாங்கும்போது அதற்கு சேதாரம் அதிகமாகும், அப்போது அதற்கான சேதாரம் எவ்வளவு, அது நகையின் டிசைனுக்கு தகுந்த சேதாரம்தானா என்று பார்த்து அதற்குபின் வாங்குங்கள். பார்க்க நன்றாக உள்ளது என நீங்கள் வாங்கும் சிறிய அளவிலான நகைகளின் ஆயுள் பெரும்பாலும் குறைவாகவே இருக்கும். மேலும், நீங்கள் ஏதாவது ஒரு நகையை அட்சயதிருதியை அன்று வாங்க வேண்டுமே என்ற காரணத்துக்காக 2 கிராமுக்கு கீழ் நகை வாங்கும்போது தரம் குறைந்த நகைகளை வாங்கும் வாய்ப்பு அதிகம். அதனால், நகை வாங்கும்போது இரண்டு கிராமுக்கு மேல் உள்ள நகையாகப் பார்த்து வாங்குவது நல்லது.


4.தரம்! 
 
நகை வாங்கும்போது சரியான தரத்தில் நகைகளை வாங்குவது முக்கியம். அதோடு ஒவ்வொரு நகை வாங்கும்போதும் அதற்கு என்ன தரக் குறியீடு எனப் பார்த்து வாங்க வேண்டும். தங்கம் என்றால் 916 நகைகள், வைர நகைகள் வாங்கும்போது தரச் சான்றிதழ் பார்த்து வாங்கவேண்டும். குறிப்பாக, வைரம் வாங்கும்போது கட்டாயம் தரச் சான்றிதழை கேட்டு பெற வேண்டும்.

5.சேதாரம்! 

சேதாரம் என்கிற விஷயம் கடைக்கு கடை மாறுபடும். நீங்கள் எந்த நகை வாங்குவதாக இருந்தாலும் சேதாரம் எவ்வளவு என்பதை நன்கு விசாரித்து அறிந்தபிறகே வாங்குங்கள். இதில் குழப்பமான பல கணக்குகள் இருப்பதால், உஷாராக இருப்பது அவசியம்!

அட்சயதிருதியை அன்று தங்க நகை வாங்க நினைப்பவர்கள் இந்த விஷயங்கள் அனைத்தையும் கவனத்தில் கொள்ளலாமே!

தங்க நகைச் சீட்டு லாபமா?


தங்கத்தின் விலை ஏறினாலும் இறங்கினாலும் தங்கம் வாங்கும் ஆர்வம் மக்களிடம் குறைந்ததாகத் தெரியவில்லை. எப்படியாவது அடுத்த வருஷத்துக்குள் இரண்டு வளையல் அல்லது ஒரு செயினையாவது வாங்கிவிடவேண்டும் என்று துடிக்கிறார்கள் நம் வீட்டில் உள்ள பெண்கள். ஆனால், தங்கத்தின் விலை இப்போது அதிகமாக இருப்பதால், மொத்தமாக பணம் தந்து வாங்கக்கூடிய நிலையில் பலரும் இல்லை. மக்களின் இந்த  நிலையை சரியாக புரிந்துகொண்ட நகைக் கடைகள் நகைச் சீட்டு போன்ற எளிய திட்டங்கள் மூலம் லட்சக்கணக்கான மக்களை தங்கள் பக்கம் சுண்டி இழுக்கின்றன.
 
இன்றைய நிலையில் சிறிய, பெரிய நகைக் கடைகள் என்கிற வித்தியாசம் இல்லாமல் எல்லா கடைகளும் நகைச் சீட்டுகளை நடத்தி வருகின்றன. இந்த நகைச் சீட்டு திட்டங்களோடு கவர்ச்சிகரமான இலவசங்களையும் அளித்து வருகின்றன.

ரொக்கமாக பணம் தந்து தங்கநகை வாங்க முடியாதவர்களுக்கு இந்த சீட்டு திட்டங்களே பெரும் வரப்பிரசாதமாக உள்ளன. ஒவ்வொரு மாதமும் கொஞ்சம் கொஞ்சமாக பணம் செலுத்துவதன் மூலம் குறைந்தளவு வருமானம் உள்ளவர்களும் இந்த நகைச் சீட்டுத் திட்டங்கள் மூலம் சில பவுன் நகைகளையாவது வாங்க முடிகிறது.  

நகைச் சீட்டு கட்டுவதில் இப்படி பல சாதகமான விஷயங்கள் இருந்தாலும், இதில் சேர்ந்து நகை வாங்குவதால் லாபமா அல்லது நஷ்டமா என்கிற கேள்வியை யாரும் கேட்பதே இல்லை.

நகைச் சீட்டில் சேரும்போது என்னென்ன விஷயங்களை அவசியம் கவனிக்க வேண்டும் என்று இப்போது பார்ப்போம்.

 
இன்றைக்கு பலவிதமான நகைச் சீட்டுத் திட்டங்களை நகைக் கடைகள் நடத்தி வருகின்றன. ஒவ்வொரு மாதமும் நம்முடைய பட்ஜெட்டுக்குத் தோதான அளவில் பணத்தைக் கட்டி, ஆண்டு முடிவில் தங்கநகை பெறலாம் என்பது ஒருவகை. இப்படி வாங்கும் நகைக்கு செய்கூலி, சேதாரம் பெரும்பாலும் கிடையாது. சில கடைகளில் 1 சதவிகிதம் வாட் வரியையும் தள்ளுபடி செய்கிறார்கள். சில கடைகளில் நீங்கள் செலுத்தும் ஒரு மாத தவணை தொகைக்கு இணையான மாத தவணை தொகையைப் போனஸாக வழங்குகிறார்கள். செலுத்திய தொகையோடு போனஸ் தொகையும்  சேர்த்து தங்கநகை வாங்கிக்கொள்ளலாம். ஆனால், இந்தத் திட்டத்தில் செய்கூலி சேதாரம் உண்டு.
 
சில கடைகளில் குலுக்கல் திட்டமும் வைத்திருக்கிறார்கள். சில கடைகள் கடந்த ஆண்டு திடீரென தங்கம் விலை இறங்கியபோது ஒரு புதிய திட்டத்தை அறிவித்தன. மாதாமாதம் கட்டிய தொகைக்கு ஈடான தங்கம், கிராம் கணக்கில் வரவு வைக்கப்பட்டு சீட்டு முதிர்வின்போது மொத்தம் சேர்ந்துள்ள கிராம் அளவுக்கு தங்க நகையை சேதாரம் இல்லாமல் வாங்கிக் கொள்ளலாம் அல்லது கட்டிய மொத்த தொகைக்கு சேதாரத்துடன் தங்க நகை (முதிர்வு தேதி விலையில்) வாங்கிக்கொள்ளலாம்.

இந்தத் திட்டங்கள் பெரும்பாலும் 15 மாத கால அளவில் இருக்கும். அதேபோல, இடையில் பணம் செலுத்துவதை நிறுத்தினால் செலுத்திய தொகையின் மதிப்புக்கு தங்கமாக வாங்கிக் கொள்ளலாம். இப்படி வாங்கும் நகைக்கு செய்கூலி சேதாரம் இருக்கும். பணமாக வாங்க முடியாது. சீட்டு முதிர்வு அடையும்போது குறிப்பிட்ட சதவிகிதம் வரைதான் சேதாரத்தில் கழிவு இருக்கும். அதற்குமேல் சேதாரம் உள்ள நகையை வாங்கும்போது, வித்தியாசப்படும் சேதாரத்தை நீங்கள் கொடுக்க வேண்டும். அதாவது, நீங்கள் 25 சதவிகிதம் சேதாரம் உள்ள நகையைத் தேர்வு செய்து வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், சீட்டில் அதிகபட்சம் 18 சதவிகிதம் சேதாரத்துக்கு பணம் வாங்கமாட்டார்கள். மீதமுள்ள 7 சதவிகித சேதாரத்துக்கு நீங்கள் கட்டாயம் பணம் செலுத்த வேண்டும். நீங்கள் தங்க காயின் அல்லது சேதாரம் குறைந்த நகைகளை வாங்கும்போது உங்களுக்கு நஷ்டம் ஏற்படும்.

 
நகைச் சீட்டு திட்டத்தில் மாதந்தோறும் கட்டும் தொகைக்கு தங்கமாக வரவு வைக்கப்படும் திட்டத்துக்கும் (சேதாரம் கிடையாது என்றால்) வங்கியில் ரெக்கரிங் டெபாசிட் செய்வதற்கும் ஒப்பீடு செய்யப்பட்ட அட்டவணை முன் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. சேதாரக் கழிவுடன் கூடிய 15 மாத சீட்டு திட்டத்தில் கடந்த 2012 டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து 2014 பிப்ரவரி 1 மாதம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் தங்க நகைச் சீட்டு.

கட்டியிருக்கிறீர்கள் என வைத்துக்கொண்டால், உங்கள் பெயரில் சுமார் 10.32 கிராம் தங்கம் சேர்த்திருக்கும் (மாதம் முதல் தேதி விலைப்படி). முதிர்வின்போது 10.32 கிராமின் மதிப்பு (10.32X2800) 28,896 ரூபாய் ஆகும்.

நீங்கள் நகைச் சீட்டில் மொத்தமாகச் செலுத்திய தொகை 30 ஆயிரம் ஆகும். நீங்கள் சீட்டு முதிர்வின்போது 18 சதவிகிதம் சேதாரம் உள்ள நகை வாங்கினீர்கள் எனில் (28,896X18/100) 5201 ரூபாய் ஆகும். ஆக (28896+ 5201) 34,097 மதிப்புள்ள நகையை 30,000 கட்டி வாங்கியிருப்பீர்கள். ஆக 30 ஆயிரம் ரூபாய்க்கு 4,097 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். அதுவும் அவர்கள் கொடுக்கும் அதிகபட்ச சேதாரக் கழிவில் நகை வாங்கினால்தான் கூடுதல் லாபம் கிடைக்கும். அதே குறைந்த அளவு சேதாரம் உள்ள நகையை வாங்கினால் லாபம் குறைவதற்கான வாய்ப்புள்ளது.

அதே பணத்தை மாதம் 2 ஆயிரம் வீதம் ஆர்.டி.யில் போட்டால், 15 மாதங்களுக்குபின் 9 சதவிகித வட்டி என்றால் 31,851 ரூபாய் சேர்ந்திருக்கும். இடையில் எடுத்தால் 4 சதவிகித வட்டியாவது கிடைக்கும். இதுவே, தங்க நகைச் சீட்டில் இடையில் நிறுத்தினால் எந்த சலுகையும் கிடைக்காது. அதாவது, 5 மாதம் சீட்டு கட்டியபிறகு இடையில் நிறுத்தினால் உங்களுக்கு (5X2000) 10 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கான நகை மட்டுமே கிடைக்கும். இதற்கு சேதாரமும் உண்டு. எனவே நகை கட்டாயம் தேவை என்பவர்களும், மொத்தமாக பணத்தைக் கொடுத்து நகை வாங்க முடியாதவர்களுக்கு நகைச் சேமிப்பு திட்டங்கள் ஓரளவுக்கு பயனுள்ளதாக இருக்கும். கடையின் பாரம்பரியத்தையும் நம்பகத்தன்மையையும் கணக்கில்கொள்வது அவசியம்.  

Curd தயிர்


 
பசுவின் பாலிலிருந்து தயாரிக்கப்படும் தயிர்தான் மிகவும் சிறந்தது. நம் குடலுக்கு தேவையான எண்ணெய்ப் பசையைத் தந்து வயிற்றுள்ள வாயுவைக் கட்டுப்படுத்துகிறது. வயிற்றில் புளிப்பை ஏற்படுத்தாது.
 
மற்ற மிருகங்களின் பாலிலிருந்து உண்டாகும் தயிர், பொதுவாக ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. எருமையின் தயிர் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும். எளிதில் செரிக்காது. அதிகம் சாப்பிட சளித் தொல்லை ஏற்படுத்தும். வயிற்றில் செரிக்காமல் கிடந்தால் புளித்துப் போய் ரத்தத்தைக் கெடுத்து விடும்.

புளிப்பு தலை காட்டத் தொடங்கிய நிலையில் தயிரைச் சாப்பிட்டால் பசியைத் தூண்டும். பசி மிகவும் குறைவாக உள்ளவர்களுக்கும் இது நல்லது. ஆனால், தயிர் மிக அதிகமாகப் புளித்து விட்டால் ரத்தக் கொதிப்பு, பித்தவாயு, வயிற்றுக் கோளாறுகள் உள்ளவர்கள் சாப்பிட ஏற்றதல்ல. மேலும் நன்றாகப் புளித்த தயிர் பற்களில் கூச்சம், குரல் கம்முதல், உடல் எரிச்சல் போன்றவற்றையும் ஏற்படுத்தும்.

தயிரை மெல்லிய துணியில் கட்டித் தொங்கவிட்டு அதிலுள்ள நீர் முழுவதும் வடிந்த பிறகு, துணியிலுள்ள உள்ள கெட்டியான பகுதியுடன். சர்க்கரை, ஏலக்காய், கிராம்பு, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் சேர்த்து குளிர வைத்துத் தயாரிப்பதற்கு ஸ்ரீகண்ட் என்று பெயர். ருசியான சத்துள்ள உணவு இது. உடல் புஷ்டி, பருமன் தரக்கூடியது. உடலின் உஷ்ண வறட்சியைக் குறைக்கும். அதிகம் சாப்பிட்டால் சளித் தொல்லை ஏற்படலாம். பசும் பாலிலிருந்து கிடைக்கும் தயிரைவிட எருமை தயிரே இதற்கு ஏற்றது.

தயிரைச் சுட வைத்து சூடாகச் சாப்பிடக்கூடாது. இரவில் தொடர்ந்து அதிக அளவில் சாப்பிட கூடாது. சிலர் சூடான சாதத்தில் தயிர் கலந்து கடுகு தாளித்து உப்பு சேர்த்து சாப்பிடுகின்றனர். இது உடலுக்கு நல்லதல்ல. மண் சட்டியிலிட்டு தோய்த்துத் தயாரிக்கப்படும் தயிர் மிகவும் சிறந்தது. பாலைக் கடைந்து வெண்ணெய் நீக்கிய பிறகு பாலைக் காய்ச்சி, தயிர் தயாரித்து சாப்பிடுவது பசியின்மையும் வயிற்றுப் போக்கும் உள்ளவர்களுக்கு நல்லது.

தோய்ந்து நிற்கும் தயிரின் அடிப்பகுதியில் தெளிவான தண்ணீர் உள்ளதைப் பார்த்திருக்கலாம் அந்த தண்ணீர் புளிப்பும், இனிப்பும் துவர்ப்பும் கலந்த ஒரு மிகச் சிறந்த பானம். அந்தத் தண்ணீரை மட்டும் சுமார் கால் கப் முதல் அரை கப் வரை காலை- மாலை வெறும் வயிற்றில் சாப்பிடுவது, தொண்டை எரிச்சல், குமட்டல், உடற்சூடு, களைப்பு இவற்றுக்கு ஏற்றது.

பாலில் புரை குத்திய பின் நன்கு உறையாமல், பால் நிலைக்கும் தயிர் நிலைக்கும் இடையே இருக்கும் தயிரை சாப்பிடக் கூடாது. அது வயிற்றில் வேகமாக புளிக்கத் தொடங்கி பசியைக் குறைத்து நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் வாபுண் முதலியவற்றை உண்டாக்கும்.

தயிரின் மேல் நிற்கும் ஆடையை மட்டும் எடுத்து சிறிது தேன் வெல்லம் சேர்த்து சாப்பிட நல்ல உடல் புஷ்டியைத் தரும். ஆண்களுக்கு விந்துவை அதிகப்படுத்தி போக சக்தியை உண்டாக்கும். அதிக அளவு சாப்பிட்டால் பசி மந்தமாகிவிடும்.

பகலில் ஓடி ஆடி வேலை செய்வதால் உடலிலுள்ள இறுக்கமான கபம் தளர்ந்து விடும். இரவில் குளிர்ச்சியான தன்மையில், தயிரைச் சாப்பிட்டால் அதன் பிசுபிசுப்புத் தன்மையால் தளர்ந்த கபத்துடன் சேர்த்து நுரையீரலில் இறுகி, சீரணக் குறைவு தோன்றக்கூடும். அதனால் தான் தயிரை இரவில் தவிர்க்க வேண்டும். இரவில் தொடர்ந்து தயிர் சாப்பிடும் போது சோகை, காமாலை, சரும நோய், ரத்தக் கொதிப்பு போன்றவை உண்டாகக் கூடும். இரவு தயிர் மட்டும் சாப்பிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், சிறிது தேன் கலந்து சாப்பிடலாம்.

heart bleed New Internet problems

 
இதுதான் கடந்த சில நாட்களாக இணையத்தைப் பயமுறுத்தும் புதிய குறைபாடு, பக். இணையத்தின் பயன்பாடு பெருகிவரும் வேளையில் திடீரென்று ஒரு புது குறைபாடு தெரியவந்திருக்கிறது. அதுவும் மிகவும் பாதுகாப்பு என்று கருதப்பட்ட செக்யூரிட்டி அமைப்பிலேயே இந்த ஓட்டை கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
 
நீங்கள் ஆன்லைனில் பொருள்கள் வாங்கினாலோ, இணைய வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தினாலோ, மின்னஞ்சல் சேவைகளைப் பயன்படுத்தினாலோ, உடனடியாக உங்கள் பிரவுசர்களின் ஓரத்தில் பூட்டு போன்ற லோகோ தெரியவரும். அதாவது நீங்கள் பாதுகாப்பான முறையிலேயே இணையச் சேவைகளைப் பெற்றுக்கொண்டு இருக்கிறீர்கள், உங்களுக்கும் நீங்கள் தொடர்புகொள்ளும் வங்கிக்கும் இடையே இருக்கும் தொடர்பு மிகவும் பத்திரமாக இருக்கிறது என்பதற்கான அறிகுறி அது.இத்தகைய பாதுகாப்பை வழங்க, ஓப்பன் எஸ்.எஸ்.எல். என்ற மென்பொருள்தான் பின்னணியில் இயங்கும். பொதுவாக ஓப்பன் எஸ்.எஸ்.எல். இணையத்தின் பல்வேறு பாதுகாப்பான தொடர்புகளுக்கான இணைப்பாக, உறுதிப்படுத்தலாக இருந்து வருகிறது. அதில்தான் இப்போது குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
 
அதனுள் உருவாகியிருக்கும் குறைபாட்டின் பெயர் ‘இதயத்தில் கசியும் ரத்தம்’ - ஹார்ட்ப்ளீட். இதனால் என்னென்ன பாதிப்புகள்? முதலில் நீங்கள் பாதுகாப்பு என்று கருதிய எதுவும் பாதுகாப்பு இல்லை. வங்கியின் பாஸ்வேர்ட், இமெயில் பாஸ்வேர்ட், இன்னபிற இணைய சேவைகளின் பயனர் பெயர்கள், கடவுச்சொற்கள் ஆகியவற்றை இணையத் திருடர்கள் சுலபமாகக் கவர்ந்துவிட முடியும். 

இந்தக் குறைபாடு 2012ல் இருந்தே இருப்பதாகவும் இதற்குள் பல்வேறு முக்கிய சேவைகள், வலைத்தளங்கள் ஆகியவற்றில் ரத்தம் கசிந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. ப்ரூஸ் ஷீனர் என்ற இணையப் பாதுகாப்பு வல்லுனர் இதைப் ‘பேரழிவு’ என்று சித்திரிக்கிறார். அத்துடன், இதன் பாதிப்பை ஒன்றில் இருந்து பத்துக்குள் மதிப்பிடச் சொன்னால், அதைவிட அதிகம், ‘இதன் பாதிப்பு பதினொன்று’ என்று பீதியைக் கிளப்புகிறார்.உடனே சென்ற வாரம் முழுவதும் ‘உங்கள் பாஸ்வேர்ட்டை மாற்றுங்கள்’, இணையம் பக்கமே போகாதீர்கள் என்றெல்லாம் ஆயிரம் அட்வைஸ்கள் கொட்டின. உண்மையில், இது பாஸ்வேர்டை மாற்றுவதற்கான நேரமல்ல. கொஞ்சம் பொறுங்கள் என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள்.கூகுளும் யாஹூவும் இன்னபிற தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்தக் குறைபாட்டை ஏற்கெனவே சரிசெய்துவிட்டனவாம். சரிசெய்வது சுலபம்தான் என்கிறார்கள். ஆனால், இன்னும் சரிசெய்யாத பல இணைய சேவைகள் இருக்கின்றன. ஆனால், ஏற்கெனவே இதனால் பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தால் அதைச் சரிசெய்வது எப்படி என்பது தான் இப்போது கேள்வி. உதாரணமாக, இணையத் திருடர்கள் இந்தக் குறைபாட்டைப் பயன்படுத்தி, ஷாப்பிங் வலைத்தளங்கள், வங்கித் தொடர்புகளில் இருந்து பயனர்களின் பெயர்கள், பாஸ்வேர்ட்டுகளைத் திருடியிருந்தால், அதன் பாதிப்புகள் இனிமேல்தான் தெரியவரும். அல்லது ஏற்கெனவே பல திருட்டுக்களுக்கான காரணங்கள் இனிமேல் விளங்கும். ஹார்ட்ப்ளீட் குறைபாடு ஏற்படுவதற்குக் காரணமானவர் என்று ராபின் செக்கல்மேன் என்பவரைச் சொல்கிறார்கள். இவர், ஓப்பன் எஸ்.எஸ்.எல்.லில் உள்ள பல்வேறு குறைபாடுகளை நீக்குபவர். அப்படி அவர் நீங்குவதற்கான புரோகிராமை எழுதும்போது, இந்தக் குறைபாடு, அவர் கண்ணிலும் படாமல் தப்பிவிட்டிருக்கலாம். இதை நான் வேண்டுமென்றே நுழைக்கவில்லை, என்னை அறியாமல் நடந்துவிட்டிருக்கலாம்," என்பதே இவரது வாதம்.
 
இக்குறைபாடு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்பதால், அமெரிக்க உளவு ஏஜன்சிகள் இதன் பயனை அடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பல்வேறு உலக அளவிலான நிறுவனங்களின் ரகசியத் தகவல்களை இக்குறைபாட்டின் மூலம், அவர்கள் கவர்ந்திருக்கலாம் என்பதை செக்கல்மேன் மறுக்கவில்லை. மேலும் எட்வர்ட் ஸ்நோடன், அமெரிக்காவின் அரசு ரகசியங்களை வெளியிட்டார் அல்லவா? அதுவும் இந்தக் குறைபாட்டைப் பயன்படுத்தியே செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதுகிறவர்களும் உண்டு.
 
இதுபோன்ற கான்ஸ்பிரசி தியரிகள் ஒருபக்கம் இருக்கட்டும், பயனர்களான நாம் என்ன செய்ய வேண்டும்?
 
இப்போதைக்கு இணையத்தில் வங்கிச் சேவைகள், பொருள்கள் வாங்குவது ஆகியவற்றைக் கொஞ்சம் ஒத்திப் போடுங்கள் என்று ஆலோசனை சொல்கிறார்கள் நிபுணர்கள். அடுத்த சில வாரங்களுக்குள் இணையச் சேவை நிறுவனங்கள் தாங்கள் ஹார்ட்ப்ளீட் குறைபாட்டைக் களைந்து விட்டோம் என்று அறிவிக்கத் தொடங்கும். அப்போது நீங்கள் உங்கள் கடவுச் சொல்லை மாற்றிக்கொள்வது பாதுகாப்பானது.

automatic driver free car


ஏதோ ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் கதை என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். தானியங்கி / ஓட்டுனரில்லா கார் - முற்றிலும் நிஜம்!!! என்ன இப்படிப் பாக்கறீங்க? தானியங்கி புகைவண்டி ஜப்பான் போன்ற நாடுகளிலும், எல்லா வெளிநாட்டு விமான நிலையத்திலும் ஓடும்போது தானியங்கி கார் சாத்தியமில்லையா? உலகம் முழுவதும் நடக்கும் விபத்துகளின் புள்ளி விவரங்களை எடுத்துப் பார்த்தால் பாதிக்குப் பாதி மனிதரின் (கவனக்குறைவு) பிழையினால்தான் நடக்கிறது. அதற்கு இந்த ஓட்டுனரில்லா கார் நல்ல தீர்வாக அமையும் என்கிறார்கள் ஆட்டோமோட்டிவ் நிபுணர்கள்.

கூகிள் நிறுவனம்தான் இந்த முயற்சியில் வீறு நடைபோட்டு முன்னேறி வருகிறது. டொயோட்டா ப்ரியஸ் என்ற காரை சோதனை ஓட்டமாக இதுவரை சுமார் முந்நூராயிரம் கி.மீ. ஓட்டிச் சாதித்திருக்கிறது. அமெரிக்காவில் இந்தக் கார் இதுவரை எந்த விபத்திலும் மாட்டிக் கொள்ளவில்லை. ஜி.எம்., பென்ஸ், ஆடி, பி.எம்.டபிள்யூ., வோல்வோ என்ற எல்லா நிறுவனங்களும் தத்தம் ஓட்டுனரில்லா காரைச் சந்தைக்குக் கொண்டுவர முயற்சி செய்துக் கொண்டிருக்கின்றன. நீஸான் நிறுவனம் 2020இல் தன் ஓட்டுனரில்லாக் காரைச் சந்தைக்குக் கொண்டு வருவதாக மார்தட்டுகிறது. அமெரிக்காவில் ஒன்றிரண்டு மாகாணங்கள் தானியங்கிக் காருக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டன.

காருக்குள் ஒரு கணினி இருக்கும். காருக்கு வெளியே லேசர் நிலப்படம் இருக்கும். அந்த நிலப்படம் காரைச்சுற்றி 200 அடிவரை சுற்றளவில் இருக்கும் பொருட்களை, சாலையைப் படம்பிடித்து உள்ளிருக்கும் கணினிக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும். இதனால் சாலையின் 3டி பிம்பம் கிடைத்துவிடும். அதே போல், காரின் ஓட்டுனர் கண்ணாடிக்குக் கீழே இருக்கும் காமிரா பாதசாரிகள், சிக்னல் விளக்கு எல்லாவற்றையும் படம்பிடித்து கணினிக்கு அனுப்பும். இதன்மூலம் கார் தன் முன்னே வரும் இடையூறுகளை அறிந்து கொள்ளும். காரின் முகப்பில் மூன்றும், பின்புறம் ஒன்றும் என நான்கு ரேடார் உணரிகள் உள்ளன. இவை தூரத்துப் பொருட்களைக் கண்டுபிடிக்க உதவும்.

தானியங்கிக் கார்களுக்குச் சாலைகளின் கட்டமைப்பு மிகமிக முக்கியம். இல்லையேல் இந்தக் காரை கொண்டுவந்து எந்தப் பயனும் இல்லை. உலகில் ஒரு சில நாடுகளைத் தவிர எல்லா நாடுகளிலும் இது கேள்விக்குறியே. அதே போல், காரில் சென்சார் எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அதனால் ஒரு குறிப்பிட்ட கார் இந்த விநாடியில் எந்தச் சாலையில் எந்த ஊரில் இருக்கிறது என்று மிக எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். இதனால் குறிப்பாக பிரபலங்களின் அந்தரங்கம் பாதிக்கப்படும்!  

அதே போல் 100% தானியங்கி கார் தற்பொழுது சாத்தியம் இல்லை. அதெல்லாம் இன்னும் நூறு வருடம் கூட பிடிக்கலாம். இடைஇடையே, காரை இயக்க வேண்டி வரும். அதனால், கிடைத்தது சாக்கு என்று காரில் ஏறிக் குறட்டை விட்டுத் தூங்கிவிடலாம் என்று பகல்கனவு காணாதீர்கள். ஆனால் பாவம், உலகம் முழுவதும் காரையே நம்பி பிழைப்பு நடத்தும் ஓட்டுனர்கள், கால் டாக்ஸி நிறுவனங்கள், ஏர்போர்ட் வாடகைக் கார்கள் என எல்லா தொழிலும், அதில் ஈடுபட்டுள்ள ஏழை மக்கள் பலரும் இந்த ஓட்டுனரில்லா கார் வந்தால் கஷ்டப்படுவார்கள் என்று ஒரு பக்கம் விமர்சனம் எழுந்தவண்ணம் உள்ளது. 

அண்ணா, எதுக்கும் எங்க இந்தியச் சாலைகளில் ஒரு முறை ரவுண்டு அடிச்சுட்டு அப்புறம் இந்தக் காரை பெருமளவில் தயாரிக்க ஆரம்பிங்க! இரண்டு காரை சுற்றிலும் குறைந்தது பத்து மோட்டார் சைக்கிள், ஆட்டோ இருக்கும். அப்புறம் உங்க ஓட்டுனரில்லா காரில் இருக்கும் உணரிகள் எல்லாம் செய்வதறியாது தடுமாறிவிடும்!!!