Monday, May 26, 2014

Cloud Technology..

 
என் நண்பன் ஒருவன் தம் கணினியில் இருந்த பத்து வருட பேக்கப்பும் (காப்புநகல்) வைரஸ் பிரச்னையால் அம்பேல் ஆகிவிட்டது என்று அழுது புலம்பினான். மூன்று மாதத்துக்கு மேல் பிரயத்தனப் பட்டு லோலோவென்று அலைந்து தம் கணினியிலிருந்த டாக்குமென்டுகளை மீட்டெடுத்தான். அதற்காக ஆயிரக்கணக்கில் தண்டச்செலவு. இந்த மாதிரியான சூழ்நிலையை நம்மில் பலர் எதிர்கொண்டிருப்போம்.
 
தொழில்நுட்ப உலகில் கிளவுட் எனப்படும் ‘மேகம்’ என்ற தொழில்நுட்பம் பற்றி கேள்விப்பட்ட துண்டா? சாமானிய மொழியில் இப்படிச் சொல்லலாம். உங்கள் வீட்டுக் கணினியில், ஐபேடில் உங்கள் குடும்ப ஃபோட்டோக்கள், வீடியோ, பிற டாக்குமெண்டுகள், இப்படி பல ஜீபி பேக்கப் வைத்திருப்பீர்கள். வைரஸ், திருட்டு இப்படி ஏதாவது ஒரு காரணத்தால் இந்த பேக்கப்புகள் தொலைந்துவிட்டால் என்ன ஆகும்? சிடி பேக்கப், எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் என்று சில விஷயங்கள் உள்ளபோதிலும், இந்தப் பிரச்னைக்கான தீர்வுகளில் முக்கியமானது ‘கிளவுட்’ தொழில்நுட்பம்.
 
விண்டோஸ் 8-ல் இந்தச் சிறப்பம்சம் ஓ.எஸ்ஸுடன் (onedrive) கூடவே தரப்படுகிறது. இது தவிர, (www.dropbox.com) மாதிரியான இணையதளங்களும் கிளவுட் சேமிப்புக்கிடங்கைத் தருகின்றன. வெப்சைட்டுகளுக்கு வருடத்துக்குப் பராமரிப்புத் தொகை வழங்குவதுபோல், இந்த ட்ராப்பாக்ஸுக்கும் வழங்க வேண்டும். நமது கணினி, ஐபேடுகளில் இருக்கும் முக்கிய ஆவணங்கள் அவ்வளவு பத்திரம் கிடையாது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் இந்த மேக சேமிப்புக்கிடங்கில் பதிவேற்றி வைத்தால் அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தின் வழங்கியில் (செர்வர்) பத்திரமாக இருக்கும். எப்பொழுது வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் (செல்பேசி, ஐபேட்) அதை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 
சரி, நிறுவனங்களுக்கும் இதே பிரச்னை இருக்குமல்லவா? ஒரு நிறுவனத்தில் மென்பொருள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், இன்னபிற முக்கிய டேட்டாக்கள் எல்லாவற்றையும் அந்த நிறுவன வழங்கியிலேயே வைத்திருப்பது பாதுகாப்பானதாக இருக்காது. அதற்கான சிறந்த தீர்வாக இந்த மேகத் தொழில்நுட்பம் இருக்கும் என்றும் கூறுகின்றனர். மைக்ரோசாப்ட், அமேசான், ஐ.பி.எம். போன்ற முன்னணி நிறுவனங்கள் கிளவுட்டில் வேகமாக முன்னேறி பல விஷயங்களை அறிமுகம் செய்தவாறு உள்ளன.  

இந்த மேகத்தொழில்நுட்பத்தை ஆதாரமாகக் கொண்டு, ஆரக்கிள் மாதிரி நிறுவனங்கள் ஒருபடி மேலே போய் சேமிப்புக் கிடங்கைத் தாண்டி, மென்பொருட்களை எப்படி மேகத்தில் பராமரிக்கலாம் என்று ஆராய்ந்து சில யுக்திகளை வழங்கிய வண்ணம் உள்ளன. இனி வருங்காலம் மேகத்தோடுதான் பயணிக் கும்!!!
 
இன்னொரு விஷயம், இந்த மேகத்தொழில்நுட்பம் நன்றாகச் சூடுபிடிக்க ஆரம்பித்தால் கிட்டத்தட்ட பாதிப்பேருக்கு மேல் வேலை கிடையாது. ஆமாம், சர்வர் பராமரிப்பு, மென்பொருள் பராமரிப்பு இவையனைத்தும் மேகத்துக்கு சென்றுவிடும்.
 
அது சரி, இந்த மேகத்தைப் பராமரிக்கும் நிறுவனத்திலிருக்கும் சர்வரில் ஏதாவது வைரஸ் பிரச்னை, இல்லை அந்த நிறுவன கட்டடத்தில் தீ ஏற்பட்டால் என்ன செய்வது என்று கேட்கிறீர்களா? இந்த நிறுவனங்கள் நல்ல கட்டமைப்பு வசதிகளுடன்தான் இருக்கும். எளிதில் எந்தப் பிரச்னையும் வராது. அதையும் மீறி வந்தால் என்ன செய்வது என்று குதர்க்கமாகக் கேட்கிறீர்களா? ‘பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கற வைத்தியருக்கு.....’

how to care teeth easy way

'நாம் உண்ணும் உணவை நன்கு மென்று உண்பதற்காகப் பற்கள் உதவுகின்றன. கடினமான பல்லில் பாதிப்பு ஏற்பட்டு பல்லின் உறுதியைப் பாதிப்பதை சொத்தைப்பல் என்கிறோம். உலக அளவில், மிக அதிக அளவில் ஏற்படும் உடல் நலக்குறைபாடாக பல் சொத்தை விளங்குகிறது. குறிப்பாக குழந்தைகள், இளம் வயதினர் மற்றும் முதியவர்கள் மத்தியில் இந்தப் பிரச்னை அதிக அளவில் காணப்படுகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து இதைச் சரிப்படுத்தாவிட்டால் பாதிப்பு வேர் வரை இறங்கி, மற்ற பற்களையும் பாதித்துவிடும்.

பல் சொத்தை பற்றிய ஆராய்ச்சிகள் நடந்துகொண்டே இருந்தாலும், இந்தக் காரணத்தினால்தான் பல்லில் சொத்தை ஏற்படுகிறது என்பதை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பெரும்பாலானவர்கள், சொத்தைப் பல்லை கண்டுகொள்ளாமல் இருந்துவிடுகின்றனர். வலி எடுக்க ஆரம் பித்தால்தான் டாக்டரிடம் செல்கின் றனர். சிலரோ, சொத்தைப் பல் என்றதும், பிடுங்கிவிடச் சொல் கின்றனர். பல் சொத்தை எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம்.

சொத்தை வரக் காரணங்கள்: 

பாக்டீரியாவும், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதுமே பல் சொத்தை ஏற்பட முக்கியக் காரணங்கள்.

 மரபு வழியாகவும், உமிழ்நீர் அடர்த்தியாக இருந்தாலும் பல் சொத்தை வர வாய்ப்பு அதிகம்.

  கர்ப்பிணிகளுக்கு, கர்ப்பகாலத்தில் பல்லில் நோய்த் தொற்று இருந்து, அது தொப்புள் கொடி மூலமாக குழந்தைக்கு வரலாம்.  

  குழந்தைகள் இரவில், ஃபீடிங் பாட்டிலில் பால் குடித்தபடியே தூங்குவதன் மூலம், பற்களில் பால் தங்கி, சொத்தையை ஏற்படுத்திவிடும்.  

  சரியாக பல் துலக்காததாலும் சொத்தை வரலாம்.

  உணவுப் பழக்கங்கள்... ஜங்க் ஃபுட்ஸ், சாப்பிடும் உணவுகள் பெரும்பாலும், ஒட்டும் தன்மையுள்ள பசை உணவாகவே இருக்கிறது. பச்சைக் காய்கறிகளை சாப்பிட்டால் அது பற்களின் இடையே மாட்டிக்கொள்ளுமே தவிர, ஒட்டாது.

 அதையே சமைத்துச் சாப்பிடும்போது, பற்களில் ஒட்டுகிறது. இந்த உணவுத் துகள்கள் அதிகம் சேர்ந்து பற்களைப் பாதிக்கின்றன.

அறிகுறிகள்: 

  கருப்பான கோடு போல் இருக்கும்.

  தொட்டால் அந்த இடம் மிருதுவாக இருக்கும்.  சிலருக்கு 'படக்’ என்று உள்ளே போகும் அளவுக்கு குழியும் வந்திருக்கலாம்.

  பல் குழியாகி ஆழமாகப்போவதைப் பொருத்து பாதிப்புகள் தெரியவரும்.

 காய்ச்சல், தொண்டையில் வலி, காது, தலை, கழுத்து போன்ற இடங்களில் வலி இருக்கும்.  

 சிகிச்சைகள்: பற்குழி வேர் வரை அரித்து வலியை ஏற்படுத்தும்போதுதான் கிராம்பு வைப்பது போன்ற கை வைத்தியங்களைக் கடைப்பிடிக்கிறோம். இதை அப்படியே கவனிக்காமல்விட்டால், வேர் வரை பாதிப்பை ஏற்படுத்தி, வீக்கம், சீழ் வடிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

   எக்ஸ்-ரே மூலம் பல் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து, மேல் வரை மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தால், ஆன்டிசெப்டிக் லேயர் கொடுத்து அதுக்கு மேல் ஃபில்லிங் செய்யப்படும்.  

 வீக்கம், சீழ் இருந்து, வேர் வரை போய் இருந்தால் 'ரூட் கெனால்’ மூலம் பல்லின் வேர்ப் பகுதி சுத்தம் செய்யப்படும். பல்லின் வேர்ப் பகுதி இல்லாததால் அந்த பல்லுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போய்விடும். ஒரு கட்டத்தில் பல் பொடிப்பொடியாக உடைந்துவிடவும் வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க அந்தப் பல்லின் மேல் பகுதியில மெட்டல் கேப் போட்டுவிடலாம். இதனால் பல்லின் உறுதித்தன்மை பாதுகாக்கப்படும்.

 பிடுங்கினால் பிரச்னையா? 

சிலர் சொத்தை வந்தால் பிடுங்கிவிடுகின்றனர். சரி எடுத்துவிட்டோமே, என்று மாற்றுப் பல் கட்டுவதுமில்லை. இதனால் பக்கத்தில் உள்ள பற்களும் பாதிப்புக்கு உள்ளாகும். பல் எடுத்த இடத்தில் இடைவெளி ஏற்பட்டு முக அழகைக் கெடுத்துவிடும். வார்த்தைகள் குளறும். நாக்கை அடிக்கடி கடிக்க நேரிடும்.

பாதுகாப்பான பற்களுக்கு... 

 தினமும் இரண்டு முறை பல் தேய்க்கவேண்டும்.

 குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுத்தவுடன் ஈறுப் பகுதியை தண்ணீரில் கழுவி, நன்றாக துணியால் துடைத்துவிடவேண்டும்.  

 சாக்லேட் மற்றும் எந்த உணவைச் சாப்பிட்டாலும், உடனே, நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும்.  

 சாதாரண டூத் பேஸ்ட் பட்டாணி அளவே போதுமானது.  

 'ஜிக்ஜாக்’ முறையில் பல் தேய்ப்பது ஒழுங்கைத் தருவதுடன் ஆரோக்கியமாக இருக்கும்.  

 குழந்தைகளுக்கு பற்கள் வலுவாக இருக்க, ஃப்ளூரைடு வார்னிஷ் தடவ வேண்டும்.

 8 வயது வரை குழந்தைகள் சரியான முறையில் பல் தேய்ப்பதற்கு பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும்.

 6 மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரைப் பார்ப்பது நல்லது.

 பச்சைக் காய்கறிகள், பழங்கள், தானியங்கள், கிழங்கு வகைகள், அரிசி சாதம் சாப்பிடலாம்.  

 ஐஸ்க்ரீம், கேக், குக்கீஸ், சாக்லேட்ஸ் தவிர்ப்பது நல்லது.

 சாப்பிட்ட பிறகு சுகர் ஃப்ரீ சுயிங்கம் மெல்லலாம். இதனால், உமிழ்நீர் நன்கு சுரந்து, பற்கள் சமச்சீர் தன்மைக்கு வந்துவிடும்.  பல்லில் சொத்தை வராமலும் தடுக்கும்.

Prime MInister Modi

இந்திய தேர்தல் வரலாற்றில், ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்குப்பின், தனிப் பெரும்பான்மையோடு ஜெயித்து ஆட்சி அமைக்கும் பெருமையைப் பெற உள்ளது பாரதிய ஜனதா கட்சி.
 
1984-ல் ராஜீவ்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய வெற்றி கண்டது. அதன்பிறகு இப்போது பாரதிய ஜனதா கட்சிதான் 272 இடங்களுக்கு மேல் வெற்றி வாகை சூடும் நிலையில் உள்ளது. வாஜ்பாய் தலைமையில் பாரதிய ஜனதா தேர்தலை எதிர்கொண்டபோதுகூட இப்படி ஒரு வெற்றியை அந்தக் கட்சி கண்டதில்லை.

இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம், நரேந்திர மோடி என்பதைச் சொல்லவேண்டியதே இல்லை. மோடியின் இந்த வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது, இந்தியா முழுக்க உள்ள சாதாரண மனிதனின் ஒரே ஒரு எதிர்பார்ப்புதான்.

'காங்கிரஸின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் ஊழல், பொருளாதார வளர்ச்சியின்மை, விலைவாசி ஏற்றம், வேலைவாய்ப்பின்மை எனப் பல பிரச்னைகள். மேலும், தொழில் வளர்ச்சி பெரிய சரிவில் சிக்கியது. இனி, மோடி இதை மாற்றட்டும்’ என்கிற எதிர்பார்ப்பில்தான் பெருவாரியான மக்கள் அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

'குஜராத் மாடல்’ என்கிற உதாரணத்தை உருவாக்கி, அதை இந்தியா முழுவதுக்கும் உரைகல்லாக மாற்றிக் காட்டிய மோடி, இனி இந்தியா முழுக்க சிறப்பானதொரு வளர்ச்சி காண வைப்பதன் மூலம் 'இந்தியா மாடல்’ என்கிற உண்மையை உலகுக்கு உணர்த்த வேண்டும். இந்த 'இந்தியா மாடல்’, சீனா மாடல்’ என்கிற கருத்தையே தூக்கிச் சாப்பிடுகிற மாதிரி இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா ஒரு வல்லரசாக மாற முடியும்.

 

இதற்கு அடிப்படைத் தேவையாக இருப்பது ஊழலற்ற அரசாங்கம். மக்கள் நலனில் அக்கறைகாட்டும் அரசாங்கம் அமைந்துவிட்டாலே போதும், தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்துவிடும்.

இதுநாள்வரை நாட்டின் வளர்ச்சியில் கடைப்பிடித்து வந்த கட்டுப்பெட்டித்தனமான நடைமுறைகளை பாரதூரமாக மாற்றுவதன் மூலமே இதையெல்லாம் மோடி செய்துகாட்ட முடியும். 

மக்கள் தங்களது அபிலாஷையை தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டார்கள். மக்களின் இந்த அபிலாஷைகளை இனி மோடி எப்படி நிறைவேற்றப் போகிறார் என்பதுதான் முக்கியமான விஷயம்.

அடுத்துவரும் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் அவர் எப்படி செயல்படப் போகிறார் என்பதைப் பொறுத்தே மோடியின் எதிர்காலம் மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலமும் இருக்கிறது!

El Nino... ‘யெல் நினோ’ - கடலில் கிளம்பும் பூதம்

பதினேழு ஆண்டுகளுக்கு முன்னால் சீனாவின் யாங்ஸே நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 1,500 பேர் மாண்டனர். இதற்குக் காரணம் அப்போது கடற்பரப்பில் ஏற்பட்ட ‘யெல் நினோ’தான். இப்போது பசிபிக் பெருங்கடலில் வெப்ப அளவு கன்னாபின்னா என்று அதிகமாகி வெப்பமடைந்த தண்ணீர்ப் பரப்பு கிழக்கு நோக்கி விரைவாக நகர்ந்து கொண்டிருக்கிறதாம். இது முந்தைய பல பத்தாண்டுகளில் இல்லாத அளவில் எல்லோரும் கவலைப்படுகிற மாதிரியான விளைவுகளை உண்டாக்கும் என்கிறார் ஆஸ்திரேலியாவின் பருவநிலை அறிவியலாளர் ஒருவர். 
பசிபிக் கடல் பரப்பில் இப்படி வெப்பநிலை உருவாவதைத்தான் ‘யெல் நினோ’ என்கிறார்கள். இதன் விளைவாக உலக உருண்டையின் வெவ்வேறு பகுதிகளில் ஒரு பக்கம் வெள்ளப்பெருக்கும் இன்னொரு பக்கம் கடும் வறட்சியும் ஏற்படுகிறது. இதன் காரணமாக உணவுப் பொருள் உற்பத்தி பாதிப்படைகிறது.இன்னும் கொசுக்களால் உண்டாகும் மலேரியா, டெங்கு போன்ற தொற்றுநோய்களும் விரைவாகப் பரவுகிற அபாயம் உண்டு. இந்தியா, வெனிசுலா, பிரேசில், கொலம்பியா நாடுகளில் மலேரியா நோய்ச் சுழற்சி ஏற்படுவதற்கு ‘யெல் நினோ’ பாதிப்பே காரணம் என்பதை இப்போது கண்டறிந்திருக்கிறார்கள். ‘யெல் நினோ’ என்பது ஸ்பானிஷ் மொழிச் சொல். இதற்கு ‘சிறுவன்’ என்று பொருள் கொள்ளலாம். பொதுவாக தென் அமெரிக்காவை ஒட்டிய கடல் பரப்பில் கிறிஸ்துமஸ் காலத்தையொட்டி இது ஏற்படுவதால் இதைக் ‘குழந்தை இயேசு’ என்று அடையாளப்படுத்தினார்கள். பசிபிக் கடற்கரைக்கு அப்பால் குறிப்பிட்ட கால இடைவெளியில் கடல்நீர் வெப்பமடைவதுதான் ‘யெல் நினோ’. இதேபோல் அளவுக்கு அதிகமாகக் கடல் பரப்பு குளிர்ச்சியடைவதும் உண்டு. இதை ‘லா நினா’ என்பார்கள். இதற்கு ‘சிறுமி’ என்று பொருள். முற்காலத்தில் இதை ‘யெல் வீஜோ’ (கிழவன்) என்று வழங்கியிருக்கிறார்கள். கீழைப் பசிபிக் பெருங்கடலின் நீர்ப் பரப்பில் இப்படி ஏற்படுகிற வெப்ப அளவு மாறுபாடுகளை ‘யென்ஸோ’ என்ற ஒரே சொல்லால் குறிப்பிடுகிறார்கள். (யெல் நினோ சதர்ன் ஆஸிலேஷன்). இந்த மாற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்களை இன்னும் முழுமையாக ஆராய்ந்து சொல்ல முடியவில்லை. பொதுவாக, வேளாண்மை, மீன்பிடித் தொழில்களை மட்டுமே சார்ந்துள்ள வளர்ந்துவரும் நாடுகள், குறிப்பாக பசிபிக் பெருங்கடல் பரப்பை ஒட்டியிருக்கும் நாடுகள் இந்த விளைவுகளால் பெரிதும் பாதிப்படைகின்றன.
இந்த விளைவு ஒழுங்கற்ற கால இடைவெளியில் ஏற்படுகின்றன. இரண்டு முதல் ஏழு ஆண்டுகள்.  சராசரியாக ஐந்து ஆண்டுகள் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். இந்தக் கடல் பரப்பு வெப்ப நீட்டிப்பு ஏழு முதல் ஒன்பது மாதங்கள் வரை இருக்கலாம். அதற்கு மேலும் கால அளவு நீண்டால் இதை ‘யெல் நினோ எபிஸோட்’ என்கிறார்கள்.
இந்த ‘பூதம் கிளம்பிவிட்டது’ என்பதை எப்படி முன்கூட்டியே தெரிந்துகொள்வது?  

* இந்தியப் பெருங்கடல், இந்தோனேஷியக் கடல் பகுதி, ஆஸ்திரேலியக் கடல்பகுதிகளில் மேல் மட்ட அழுத்தம் அதிகமாகும்.
* பசிபிக் பெருங்கடலின் கிழக்கு மற்றும் மத்தியப் பகுதியிலுள்ள தாஹித்தி போன்ற பகுதிகளில் மேற்பரப்பின் காற்றழுத்த அளவு வீழ்ச்சியடையும்.
* தென் பசிபிக் பகுதியின் டிரேட் விண்டின் வேகம் பலவீனமடையும் அல்லது கிழக்கு நோக்கித் திரும்பும்.
* பெருவுக்கு அருகில் காற்றின் வெப்ப அளவு கூடுதலாகி வடக்குப் பெரு பாலைவனப் பகுதிகளில் மழை கொட்டும்.  

* மேற்குப் பசிபிக், இந்தியப் பெருங்கடல் பரப்பிலிருந்து கிழக்குப் பசிபிக் வரை வெப்பநீர் பரவும். இதனால் மேலைப் பசிபிக் பகுதியில் கடும் வறட்சியும், சாதாரணமாக வறண்ட \ பகுதியாக உள்ள கீழைப் பசிபிக் பகுதியில் பெருமழையும் பொழியும்.
1972 யெல் நினோ விளைவின்போது கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடித் தொழில் பெரும் அளவுக்குப் பாதிப்படைந்ததாம். 1982 -83 விளைவின் போது சில குறிப்பிட்ட மீன் இனங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. சிலவகை மீன் இனங்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளன.
2008 மார்ச்சில் ஏற்பட்ட ‘லா நினா’ விளைவின்போது மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது.கடந்த பல பத்தாண்டுகளாக ‘யெல் நினோ’ விளைவுகள் கூடுதலாகியுள்ளன என்றும், ‘லா நினா’ விளைவுகள் குறைந்துள்ளன என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் புவி வெப்பமடைதல் (குளோபல் வார்மிங்) என்று நம்பப்படுகிறது.வரலாற்றைப் புரட்டிப் போட்டதிலும் இந்த முகமறியாத ‘யெல் நினோ’வின் பங்கு இருக்கிறது. 1789 - 1793 விளைவுகளால் ஐரோப்பாவில் வேளாண் விளைபொருள் உற்பத்தி பெரும் அளவில் வீழ்ச்சி கண்டு, ‘பிரெஞ்சுப் புரட்சி’யே உருவாகக் காரணமானதாம். 1876-77 ‘யெல் நினோ’ விளைவால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வட சீனாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டு ஒருகோடியே முப்பது லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.உலகிலேயே பாம் ஆயில் உற்பத்தியில் முதலிடம் வகிப்பது இந்தோனேஷியா. 2014 ஜூன் வாக்கில் ‘யெல் நினோ’ விளைவு தொடங்கிவிட்டால் இதில் கடும் பாதிப்பு உண்டாகுமாம்.
‘தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து...’ என்று ஆண்டாள் பாடிய காலம் போயே போய்விட்டது. தாறுமாறான பருவநிலைகள் உருவாவதற்கு மனிதர்களின் சுயநலமே காரணமாக அமைந்து விட்டிருக்கிறது. முக்கியமாக வனவளத்தைப் பறிகொடுத்துவிட்டுக் ‘கான்கிரீட் காடு’களைத் தினமும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். ‘யெல் நினோ’, அது இது என்று எதன் மீதாவது பழிபோடவா நமக்குத் தெரியாது?

Thursday, May 15, 2014

plan tour budget பட்ஜெட் டூர்

எந்த ஊருக்கு சுற்றுலா செல்லலாம்? எந்தெந்த இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம்? பஸ்ஸா, காரா, ரயிலா? எவ்வளவு செலவாகும்? ஹோட்டலில் தங்க கட்டணம் எவ்வளவு? வீட்டுக்கு வீடு இப்படித்தான் இப்போது பேசிக்கொண்டிருப்பீர்கள். இதோ உங்களுக்கு உதவுவதற்காகவே... இங்கே இடம்பிடிக்கிறது 'பட்ஜெட் டூர்... உங்களுக்கேத்த ஊர்!'

 


முக்கிய குறிப்பு: இந்த இடங்கள் அனைத்தும் சென்னையிலிருந்து கணக்கிடப்பட்டு, இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் போக நினைக்கும் ஊர், உங்களுடைய இடத்திலிருந்து எத்தனை கிலோமீட்டர் என்பதைக் கணக்கிட்டு, அதற்கேற்ப போக்குவரத்து கட்டணத்தை யூகித்துக்கொள்ளுங்கள். கார்களைப் பொறுத்தவரை, முக்கிய நகர் வரை மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது. அதுவும் ஒரு வழி பயணத்துக்கானது. அங்கு நீங்கள் பார்க்க விரும்பும் இடங்களைப் பொறுத்து, கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரும். திரும்பவும் காரில் வருவது என்றால், கட்டணம் கூடும்.

விமான கட்டணங்கள், ரிசர்வ் செய்யும் தேதியைப் பொறுத்து மாறுதல்களுக்குட்பட்டவை.

Thimingalam திமிங்கிலம்

 
யானையைப் பார்த்தால் நமக்கு வியப்பாக இருக்கிறது. நிலத்தில் வாழும் விலங்குகளில் யானை தான் மிகப்பெரியது. ஆனால் உலகின் மிகப்பெரிய விலங்கு கடல்களில் வாழும் நீலத் திமிங்கிலமே. சற்றே நீல நிறத்துடன் இருப்பதால் அதற்கு அந்தப் பெயர். நீலத் திமிங்கிலம் குறைந்தது 30 மீட்டர் நீளம் கொண்டது. எடையோ சுமார் 120 டன். அதாவது 20 யானைகளின் எடைக்குச் சமம். 
 
கிரில் எனப்படும் மிகச்சிறிய கடல் வாழ் உயிரினத்தைத்தான் அது உண்டு வாழ்கிறது. கிரில்கள் இறால் போன்றவை. கிரில் நான்கு செ.மீ. நீளம் கொண்டது.

கிரில்கள் கடலில் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். ஒரு கூட்டத்தில் பல ஆயிரம் கிரில்கள் இருக்கும். நீலத் திமிங்கிலம் தனது வாயைத் திறந்தபடி கிரில் கூட்டத்தின் வழியே செல்லும்போது பல ஆயிரம் கிரில்கள் திமிங்கிலத்தின் வாக்குள் சிக்கும். நீலத் திமிங்கிலம் ஒரு நாளில் நான்கு முதல் ஏழு டன் கிரில்களை விழுகுகிறது.
 
திமிங்கிலத்தின் வாக்குள் விசேஷ அமைப்புகள் உள்ளன. நிறைய கிரில்கள் உள்ளே சிக்கியதும் திமிங்கிலம் வாயை மூடிக்கொள்ளும். அதன் தொண்டைக்குள் ‘கதவுகள்’ போன்ற திறப்புகள் விரியும். வயிறும் விரிவடையும். திமிங்கிலத்தின் மேல் தாடையில் சீப்புகள் போன்ற அமைப்புகள் உள்ளன. திமிங்கிலம் தனது நாக்கை உயர்த்தும்போது சீப்புகள் போன்ற அமைப்புகள் வழியே கடல் நீர் வெளியே சென்று விடும். உள்ளே சிக்கிய கிரில்களைத் திமிங்கிலம் விழுங்கி விடும்.வடிவில் பிரம்மாண்டமானது என்பதால் நீலத் திமிங்கிலம் விஷயத்தில் எல்லாமே பெரிதாக இருக்கிறது. அதன் நாக்கு எடை நான்கு டன். அதன் நாக்கின் மீது 12 பேர் வரிசையாக நிற்கலாம். அதன் இருதயமோ கார் அளவு இருக்கும்.திமிங்கிலத்தின் குட்டியானது பிறக்கும் போதே மூன்று டன் எடை கொண்டதாக உள்ளது. நீளமோ 25 அடி. திமிங்கிலங்களில் ஸ்பெர்ம் திமிங்கிலம், ஹம்ப்பேக் திமிங்கிலம், மிங்கி திமிங்கிலம், பெலுகா திமிங்கிலம், ஆர்க்கா திமிங்கிலம் உட்பட பலவகைத் திமிங்கிலங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றின் உணவும் வெவ்வேறு விதமாக உள்ளது. திமிங்கிலங்கள் அனைத்துமே குட்டிப் போட்டுப் பால் கொடுப்பவை.
 
திமிங்கிலங்களில் இன்னொரு விசேஷம் இவை மீன்களைப் போல நீருக்குள் சுவாசிப்பவை அல்ல. நம்மைப் போல காற்றை சுவாசிப்பவை. நீருக்குள் நடமாடினாலும் இவை ஒவ்வொரு தடவையும் சுவாசிப்பதற்காக நீர் மட்டத்துக்கு வரும். நுரையிலிருந்து காற்றை புஸ் என்று வெளியே விட்டுவிட்டு புதிதாக காற்றை உள்ளிழுத்துக் கொண்டு மறுபடி நீருக்குள் சென்று விடும்.

நம்மால் நீருக்குள் சில கணங்களே தம் கட்டி இருக்க முடியும். திமிங்கிலங்கள் அரை மணி நேரத்துக்கு மேல் தம் கட்டி நிற்கும். அதாவது ஒரு தடவை காற்றை உள்ளே இழுத்துக்கொண்டால் அரை மணி நேரத்துக்கு அதனால் நீருக்குள் நடமாட முடியும். ஸ்பெர்ம் திமிங்கிலம் சுமார் ஒன்றரை மணி நேரம் வரை நீருக்குள் இருக்கும் திறன் கொண்டது.

திமிங்கிலங்களிடம் இது விஷயத்தில் இயல்பாக சில விசேஷத் திறன்கள் உள்ளன. நாம் சுவாசிக்கும் போது நுரையீரலுக்குள் செல்லும் காற்றில் அடங்கிய ஆக்சிஜனில் 15 சதவிகிதத்தைத்தான் உடல் கிரகித்துக் கொள்கிறது. ஆனால் திமிங்கிலத்தின் நுரையீரலுக்குள் செல்லும் காற்றில் அடங்கிய ஆக்சிஜனில் 90 சதவிகிதத்தை திமிங்கிலம் ஈர்த்துக் கொள்கிறது. இந்தக் கூடுதல் ஆக்சிஜன் திமிங்கிலத்தின் தசைகளில் அடங்கிய செல்லும் காற்றில் அடங்கிய ஆக்சிஜனில் 90 சதவிகிதத்தை திமிங்கிலம் ஈர்த்துக் கொள்கிறது. இந்தக் கூடுதல் ஆக்சிஜன் திமிங்கிலத்தின் தசைகளில் அடங்கிய மையோகுளோபின் எனப்படும் விசேஷ புரத செல்களில் சேமித்து வைக்கப்படுகிறது. திமிங்கிலங்களிடம் மற்ற விலங்குகளை விட அதிக அளவில் மையோகுளோபின் உள்ளது. தவிர, திமிங்கிலத்தினால் ஆக்சிஜன் உபயோகத்தைக் குறைத்துக்கொள்ளவும் முடிகிறது.

திமிங்கிலம் கடலுக்குள் மூழ்கியிருக்கும்போது அதன் இதயத் துடிப்பு வேகம் குறைந்து விடுகிறது. சில உறுப்புகளுக்குக் குறைவான ரத்தமே செல்கிறது. இப்படியான காரணங்களால் திமிங்கிலத்தால் நீருக்குள் அதிக நேரம் இருக்க முடிகிறது.

திமிங்கிலம் நீண்ட நேரம் சுவாசிக்காமல் இருந்து விட்டு நீருக்கு மேலே வரும் கட்டத்தில் வேகமாக மூச்சை வெளிவிடுகிறது. அப்போது கடல் நீரானது நீரூற்று போல நல்ல உயரத்துக்குப் பீச்சிடும். இது 12 மீட்டர் உயரம் வரை இருக்கும். திமிங்கிலம் இருக்கு மிடத்தைக் கண்டுபிடிக்க நவீன வழிகள் இல்லாத அந்த நாட்களில் கடல் நீர் இப்படி உயரே எழும்புவதை வைத்து திமிங்கில வேட்டைக்காரர்கள் அதன் இருப்பிடத்தை அறிந்துகொண்டனர்.

திமிங்கிலம் நீருக்குள் இருக்கும்போது கட்டைக் குரலில் குரல் எழுப்பும். இந்த ஒலி எதிரொலித்துத் திரும்புவதை வைத்து இரை எங்கே உள்ளது என்பதைத் திமிங்கிலம் கண்டுகொள்ளும். தங்கள் இனத்துடன் தொடர்புகொள்ளவும் இந்த ஒலியை அது பயன்படுத்திக் கொள்கிறது. சிலவகைத் திமிங்கிலங்கள் எழுப்பும் ஒலியானது 1600 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும்.

திமிங்கிலங்கள் உலகின் எல்லாக் கடல்களிலும் காணப்படுகின்றன. தென் துருவப் பகுதியில் அண்டார்டிகா அருகே உள்ள திமிங்கிலங்களும் சரி, வட துருவ ஆர்டிக் பகுதியில் காணப்படும் திமிங்கிலங்களும் சரி, குளிர் காலத்தில் வெப்ப மணடல கடல் பகுதிகளுக்கு வருகின்றன. குட்டி பிறந்ததும் பழைய இடத்துக்கே சென்று விடுகின்றன. இப்படி இடம் பெயரும் காலத்தில் திமிங்கிலங்களால் தொடர்ந்து உணவு இன்றி இருக்க முடியும்.

கடந்த காலத்தில் பல்வேறு வகையான திமிங்கிலங்களும் இஷ்டத்துக்கு வேட்டையாடப்பட்டன. இதனால் அவற்றின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து திமிங்கிலங்களைக் காப்பதற்காக அமைக்கப் பட்ட சர்வதேச திமிங்கில கமிஷன் உலகின் கடல்களில் வர்த்தக ரீதியில் திமிங்கிலங்களை வேட்டையாடக் கூடாது என்று 1986ம் ஆண்டில் சர்வதேச அளவில் தடையை அமல்படுத்தியது. ஆனால் இவ்விதக் கட்டுப்பாட்டை ஜப்பான், நார்வே, ஐஸ்லாந்து போன்ற நாடுகள் எதிர்த்து வருகின்றன. ‘ஆராய்ச்சிக் காரணங்களுக்காக’ திமிங்கிலங்களை வேட்டையாடலாம் என சர்வதேச தடைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. தடைச் சட்டத்தில் உள்ள இந்த ஓட்டையைப் பயன்படுத்தி மேற்படி நாடுகள் இன்னமும் திமிங்கிலங்களை வேட்டையாடி வருகின்றன. திமிங்கிலங்களைப் பாதுகாப்பதில் பல நாடுகளையும் சேர்ந்த தனியார் அமைப்புகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

சோட்டா பீம் & மௌக்ளி in tamil

 
சோட்டா பீம் என்றால் குட்டி பீமன் என்று அர்த்தம். சோட்டா பீம் சாகசங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட தொலைக்காட்சி தொடர், கடந்த 2009ம் வருடம் முதல் போகோ சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. தோலக்பூர் கற்பனையான ஓர் ஊர். அந்த ஊரைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் பீம். இது நூற்றுக்கு நூறு இந்தியப் பின்னணியில், இந்தியச் சிறுவர், சிறுமியரைக் கவர்வதற்காகவே உருவாக்கப்பட்ட கதாபாத்திரம். இன்று இந்தியாவின் நெம்பர் ஒன் அனிமேஷன் தொடர் என்ற பெருமையைப் பெற்றுள்ள சோட்டா பீம் இந்தியாவிலும், உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் வசிக்கும் இந்தியக் குழந்தைகளை மட்டுமின்றி பல்வேறு நாட்டுக் குழந்தைகள் மத்தியிலும் கூட பிரபலமாகி இருக்கிறது. மகாபாரதத்தில் வரும் வீர பராக்கிரமசாலியான பீமன்தான் சோட்டா பீம் கதாபாத்திரத்தை உருவாக்குவதற்கு உந்துதலாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. கிரிபன் கோல்ட் அனிமேஷன் நிறுவனம் சோட்டா பீம் அனிமேஷன் தொடரைத் தயாரித்து வருகிறது. 
 
இயற்கை அழகு சூழ்ந்த தோலக்பூரைச் சேர்ந்த சோட்டா பீம் பலசாலி மட்டுமில்லை; மிகவும் புத்திசாலியும் கூட. ஊரில் யார் கஷ்டப்பட்டாலும், சோட்டா பீமுக்குப் பொறுக்காது. உடனே அவர்களுடைய பிரச்னையைத் தீர்ப்பதற்குப் புறப்பட்டுவிடுவான். ஊரைக் கொள்ளையடிக்க வரும் கொள்ளையர்களைக் கூட வீரத்தோடு மோதி விரட்டி அடித்துவிடுவான்.  

பீமின் புத்திசாலித்தனத்தையும் புகழையும் கண்டு பொறாமைப்படும் சிறுவன் காலியா. ஊரில் உள்ள சிறுவர்களில் யாருக்கு என்ன பிரச்னை என்றாலும், தீர்வு காண பீமைத்தான் நாடுவார்கள். சோட்டா பீமுக்கு அவ்வப்போது ஏதாவது பிரச்னைகளைக் கொடுப்பது காலியா மற்றும் நண்பர்களின் வழக்கம். ஆனால், பீம் அவற்றை எல்லாம் சுலபமாகச் சமாளித்து, அவர்கள் முகத்தில் கரி பூசிவிடுவான்.
 
தோலக்பூரின் அரசன் இந்திரவர்மா. சோட்டா பீமை அவருக்கு மிகவும் பிடிக்கும். ஊர் மக்கள், சோட்டா பீம் வளர்ந்து பெரியவன் ஆனதும் ராஜா இந்திர வர்மா, இளவரசியை பீமுக்குக் கல்யாணம் செய்து வைத்து, அரசாட்சியை அவனிடம் ஒப்படைப்பார் என்று ஒரு பேச்சு கூட உண்டு.  

குட்டி பீமுக்கு லட்டு என்றால் மிகவும் பிடிக்கும். லட்டு சாப்பிட்டு விட்டால் போதும் அவனுக்கு அசாத்தியமான பலம் வந்துவிடும். பீமின் நெருங்கிய தோழி ஏழு வயது சுட்கி, பீமுக்குப் பிடித்த லட்டு கொண்டு வந்து கொடுப்பாள். அவ்வப்போது, பீமுக்கு அவள் தருகிற யோசனைகள் மிகவும் உபயோகமாக இருக்கும். பீம் கூடவே இருந்து அவனுக்கு உதவும் இன்னொரு சுட்டிப் பையன் ராஜு. இவர்கள் அணியில் இடம்பெற்றுள்ள இன்னொரு ஜாலியான உறுப்பினர் ஜக்கு என்ற குரங்கு.

சோட்டா பீம் பிரபலம் காரணமாக சோட்டா பீம் முத்திரையுடன் கூடிய பல பொருட்கள் விற்பனையாகின்றன.


மௌக்ளி


ருட்யார்ட் கிப்ளிங் ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவில் பிறந்த ஆங்கிலேய எழுத்தாளர். இலக்கியத்துக்காக நோபெல் பரிசு பெற்ற முதல் ஆங்கில எழுத்தாளர் என்ற பெருமை இவருக்கு உண்டு. அவர் குழந்தைகளைக் கவரும்படியாக உருவாக்கிய ஒரு கதாபாத்திரம்தான் மௌக்ளி. ஜங்கிள் புக் என்ற புத்தகத்தின் மூலம்தான் மௌக்ளி என்ற சுவாரசியமான கற்பனை கதாபாத்திரம் வாசகர்களுக்கு அறிமுகமானது. பத்தொன்பதாம் நூறாண்டின் இறுதியில் அவர் இந்தக் கதைகளை எழுதினார். 

ருட்யார்ட் கிப்ளிங் இந்தியாவில் பிறந்து, இங்கிலாந்தில் வளர்ந்து, மீண்டும் வேலை செய்ய இந்தியாவுக்கு வந்தவர். அதனால் அவருக்கு இயற்கையாகவே இந்தியாவின் மீதும் அதன் இயற்கை வளங்களின் மீதும் மிகுந்த ஆர்வம் இருந்தது. இதுவே அவரது கற்பனையோடு இணைந்து, கதைகளாக உருப் பெற்றன. 

மௌக்ளி கதாபாத்திரத்தை மத்தியப் பிரதேசத்தின் காடுகளோடு இணைந்த ஒரு பாத்திரமாக உருவாக்கினார். அவர் முதலில் எழுதிய கதைகளில், காட்டுப் பகுதியில் வசிக்கும், அபார வேட்டையாடும் திறன் கொண்ட ஓர் இளைஞனாக அறிமுப்படுத்திவிட்டு, அதன் பிறகு எழுதிய கதைகளில்தான் மௌக்ளியின் பால பருவத்தைப் பற்றிய கதைகளை எழுதினார். பெற்றோர்களைப் பிரிந்து, காட்டில் தனியே விடப்பட்ட குழந்தையான மௌக்ளியை, அன்போடு எடுத்து வளர்க்கின்றன ஓநாய்கள். தாங்கள் வளர்க்கும் மனிதக் குழந்தைக்கு மௌக்ளி என்று பெயர் சூட்டுகின்றன.

காட்டில் வசிக்கும் விலங்குகளின் கால்களில் முள் குத்திவிட்டால், அவை உடனே மௌக்ளியிடம் உதவி கேட்டு வரும். அவன் பொறுமையோடு அந்த முள்ளை எடுப்பான். இதனால் விலங்குகள் அனைத்துக்கும் மௌக்ளி நெருங்கிய நண்பனாகிவிடுவான். காட்டில் வசிக்கும் ஷேர்கான் என்ற புலி மௌக்ளியைச் சாப்பிட நினைத்தாலும், அதனிடமிருந்து ஓநாய்கள் காப்பாற்றுகின்றன. ஒரு கட்டத்தில் நெருப்பைக் கண்டால் புலிக்குப் பயம் என்பதை அறிந்து, அந்த நெருப்பைப் பயன்படுத்தி, புலி தன்னை நெருங்க விடாமல் தடுக்கிறான் மௌக்ளி. 

ஜங்கிள் புக் கதைகளுக்குக் கிடைத்த சிறப்பான வரவேற்பு காரணமாக, அது திரைப்படமாகவும், ரஷ்யாவில் அனிமேஷன் படங்களாகவும், டிவி தொடர்களாகவும் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியாகி பெரும் பாராட்டுகளைப் பெற்றன. பி.பி.சி. ரேடியோவில் பிரபல நடிகர்களின் குரல்களில் ஜங்கிள் புக் கதைகள் ஒலிபரப்பாகி, மௌக்ளி இளைஞனர்கள் மத்தியில் பெரும் ஹீரோவாக விளங்கினான். ரஷ்யாவில் மௌக்ளியையும் அவன் நண்பர்களையும் தபால்தலையில் வெளியிட்டு கௌரவித்திருக்கிறார்கள்.