Tuesday, July 1, 2014

மன்மோகன் சிங் ஆகிவிடாதீர்கள் மோடி!

நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி முப்பது நாட்களைக் கடந்திருக்கிறது. ஒரு மாத காலம் மட்டுமே முடிந்திருக்கும் நிலையில், இந்த ஆட்சியின் செயல்திறனை சீர்தூக்கிப் பார்ப்பது நிச்சயமாகச் சரியான விஷயமாக இருக்காது.
 
எனினும், பொருளாதார ரீதியில் இந்த அரசாங்கத்தின் ஒன்றிரண்டு நடவடிக்கைகளை உற்று நோக்கும்போது, நம் நம்பிக்கை கொஞ்சம் தடுமாறவே செய்கிறது. சமீபத்தில் ரயில் கட்டணத்தை உயர்த்திய இந்த அரசாங்கம், பிற்பாடு புறநகர் ரயில் கட்டண உயர்வை  மட்டும் வாபஸ் பெற்றுக்கொண்டது. விரைவில் நடக்கப்போகும் மஹாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஓட்டுபோடாமல் போய்விடுவார்களோ என்கிற பயத்தின் காரணமாகவே இப்படி செய்யப்பட்டுள்ளது.
 
அடுத்த முக்கியமான விஷயம், ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவேண்டியிருந்த இயற்கை எரிவாயுக்கான விலை உயர்வை இன்னும் மூன்று மாதங்களுக்குத் தள்ளிவைத்திருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து 15 டாலர் தந்து நாம் இயற்கை எரிவாயுவை வாங்க, உள்ளூர் நிறுவனங்களுக்கு 4.2 டாலர் மட்டுமே தருவோம் என்று சொன்னால், எந்த நிறுவனம் இங்கு எரிவாயுவை எடுக்கும் தொழிலை செய்யும்? எரிவாயுவின் விலையை உயர்த்தினால், அது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்குச் சாதகமாகப் போய்விடுமோ என்று பயந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், இதனால் சில பொதுத் துறை நிறுவனங்களும் பாதிப்படையும் என்பதை அரசாங்கம் ஏன் யோசிக்கவில்லை?
 
 

நாட்டின் நன்மைக்காக கசப்பு மருந்தைக் குடித்தே ஆகவேண்டும்’ என்று சொன்னவர், இப்போது ஏன் கசப்பு மருந்தின் வீரியத்தைக் குறைக்கிறார்? முடங்கிப்போயிருக்கும் பொருளாதார வளர்ச்சியை மீண்டும் முடுக்கிவிடுவார் என்கிற எதிர்பார்ப்பில்தானே இத்தனை பெரிய பொறுப்பை மோடியிடம் தந்திருக்கிறார்கள் மக்கள்? ஓட்டு அரசியலை மனத்தில்கொண்டு செயல்பட்டதால்தான், காங்கிரஸ் அரசால், நாட்டின் வளர்ச்சிக்கு எந்த உருப்படியான திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் போனது. உலகின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணராக இருந்தாலும், துரும்பைக்கூட தூக்கிப்போடமுடியாத அளவுக்கு திராணியில்லாமல் போனார் மன்மோகன் சிங். எதையுமே செய்யாமல் ஐந்து ஆண்டு காலத்தை ஓட்டிய மன்மோகன் சிங் போல, மோடியும் ஆகிவிடக் கூடாது. பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சி பாதையில் வேகமெடுக்க வைக்கும் அறிவிப்புகளை வரவிருக்கும் பட்ஜெட்டில் மோடி அரசாங்கம் கட்டாயம் வெளியிட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!

No comments:

Post a Comment