Saturday, September 7, 2013

முதல்வர் வாழ்த்தியுள்ளார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

எளிமையின் இருப்பிடமாகவும், உண்மையான உழைப்பின் உறைவிடமாகவும், ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கி இந்தியாவின் உயர்ந்த பதவியாம்  குடியரசுத் தலைவராக உயர்ந்த மாமனிதர் டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனை வருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்”    

என்ற குறளின் மூலம் கல்வியறிவு பெற்ற ஒவ்வொருவரும் தனது மகிழ்ச்சிக்கு காரணமான கல்வி,  உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதைக் கண்டு மென்மேலும் அக்கல்வி அறிவினை மேம்படுத்திக் கொள்ளவே விரும்புவர் என்ற வள்ளூவர் வழங்கிய கருத்திற்கேற்ப டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் தான் கற்ற கல்வியை அனைவரும் பெற்று வாழ்வில் உயர்ந்து மகிழ்ந்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறந்த முன் உதாரணமாக விளங்கும் வகையில் நல்லாசிரியராகப்  பணியாற்றி சிறந்த சமுதாயத்தினை உருவாக்கிடப்  பாடுபட்டார்.  

ஆசிரியர் பணியின் அருமை பெருமைகளைக்  குன்றாது, குறையாது போற்றிப்   பாதுகாக்கும் எனது தலைமையிலான அரசு,  எதிர்கால இந்தியாவின் தூண்களான  மாணவச் செல்வங்களுக்கு தரமான கல்வியை அளித்திடும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 51,757 ஆசிரியர் பணியிடங்கள்  நிரப்பப்பட்டுள்ளன.மாணவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் உட்கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு ரூ.1660 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

ஆசிரியர் பணி என்பது கல்வியோடு ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, ஊக்கம், விடாமுயற்சி, பொது அறிவு என அனைத்தையும் மாணவச் செல்வங்களுக்கு ஊட்டி, அவர்களைச்  சிறந்த மனிதர்களாக்கும்  உன்னத பணியாகும். இத்தகைய சிறப்புமிக்க உயரிய பணியினை ஆற்றிடும் ஆசிரியப் பெருமக்கள் சமுதாய உணர்வோடு பணியாற்றி எதிர்காலத்தில் இந்த நாட்டின் புகழை உலக அரங்கில் உயர்த்தி  நிறுத்திடும் ஒரு  அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கிட வேண்டுமென்ற என்னுடைய அவாவைத்  தெரிவித்து, ஆசிரியர் தினத்தினை கொண்டாடும் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment