Saturday, September 14, 2013

அயோடின் - ஜி.கே. வெங்கடேஷ் மன்னார். M.G. Venkatesh Mannar, O.C.

Photo of Venkatesh Mannar
M.G. Venkatesh Mannar


அயோடின் என்பது ஒரு முக்கிய நுண் உயிர்ச்சத்து. குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கு அதுவும் மூளை வளர்ச்சிக்கு உதவும் நுண் உயிர்ச்சத்து. 80களில் இந்த ஊட்டச்சத்தின் குறைபாட்டினால் உலகெங்கும் எண்ணற்ற குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பது உணரப்பட்டது. இன்று அயோடின் உயிர்ச்சத்தின் அவசியத்தைப் புரியவைத்து அதை உலகின் பலநாடுகளில் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கச் செய்தவர்களில் முக்கியமானவர் ஜி.கே. வெங்கடேஷ் மன்னார்.

இன்று உலகெங்கும் மிகவும் பிரபலமாக அறியப்பட்டிருக்கும் ‘அயோடைஸ்டு சால்ட்’ என்ற உயிர்ச்சத்து சேர்க்கப்பட்ட உப்பை அறிமுகப்படுத்தியவர் இவர்தான். மிக மலிவான, தினமும் உணவில் பயன்படுத்தப்படும் உப்பில் இந்த நுண் உயிர்ச்சத்தை சேர்ப்பதின் மூலம் எளிதாக, விரைவாக மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். மிகக் கடினமான அந்தத் தயாரிப்பு முறைகளை தம் ஆராய்ச்சிகள் மூலம் எளிதாக்கினார் வெங்கடேஷ். இன்று இந்த வகை உப்பை பயன்படுத்துவதன்மூலம் உலகம் முழுவதும் 2000 கோடி குழந்தைகள் நுண் உயிர்ச்சத்துக் குறைபாட்டின் விளைவுகளில் இருந்து காப்பாற்றப்பட்டிருக்கின்றனர்.  

ஜி.கே. வெங்கடேஷ் மன்னார் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சென்னை ஐ.ஐ.டி.யில் கெமிக்கல் இஞ்ஜினீயரிங் படித்த பின் அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தவர். 1970களில் இந்தியா திரும்பி, தம்முடைய குடும்பத் தொழிலான உப்பு உற்பத்தியை நவீனமாக்கி டேபிள் சால்ட் தயாரிப்பு முறையை மலிவு விலையில் அறிமுகப்படுத்தினார். அந்தத் தயாரிப்பு முறையைப் பல உப்பு தயாரிக்கும் நிறுவனங்களும் பின்பற்ற உதவினார். 70களின் இறுதியில் உப்பை எப்படி உயிர்ச்சத்துள்ள பொருளாக்கி அதை எளிதில் எல்லோருக்கும் கிடைக்கச் செய்வது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஐக்கிய நாட்டுச் சபையின் ஓர் அங்கமான யுனிசெஃப் (UNICEF) உலகின் சில நிறுவனங்களுடன் இணைந்து இதைச் செய்ய முயற்சிப்பதை அறிந்து அவர்களுடன் இணைந்து தம் முயற்சியைத் தொடர்ந்தார். சில ஆண்டுகளிலேயே இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் பல சர்வதேச நிறுவனங்களின் ஆலோசகரானார். 1993ல் யுனிசெஃப்பின் குழு தலைவர்களில் ஒருவராகி நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் உப்பில் நுண்ணுயிர்ச் சத்து சேர்க்கப்படவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, அரசு அதிகாரிகளுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் பயிற்சி அளித்தார். இதன் விளைவாகத்தான் இன்று பல நாடுகளில் உப்பு தயாரிப்பு முறைகளில் அயோடின் சேர்ப்பது கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. 

கனடா நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் கனடா’ என்ற விருது இந்த ஆண்டு ஊட்டச்சத்துக் குறைபாடுகளை ஒழிக்கச் செய்யும் சிறந்த பணிக்காக ஜி.கே.வெங்கடேஷுக்கு வழங்கப்படுகிறது. 

உப்பை நுண் உயிர்ச்சத்துடன் உலகெங்கும் வழங்க வழி செய்த இந்த மனிதரை உப்பு உள்ளவரை உலகம் மறக்காது!

No comments:

Post a Comment