Monday, June 9, 2014

ஃபின் மோதிரக்கருவி

ஃபின் மோதிரக்கருவி


கேரளாவை சார்ந்த Robatic human Logic என்ற நிறுவனம் ஒரு வித்தியாசமான மோதிரத்தை கண்டுபிடித்து உள்ளது. அதை பற்றி கூறும் முன் உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்கிறேன். ஒரு ஜேம்ஸ் பாண்ட் படத்தில் ஜேம்ஸ் பாண்ட் எதிரிகளிடம் மாட்டிக் கொள்வார். அது ஒரு கண்ணாடி மாளிகை. அங்கே துப்பாக்கி முனையில் எதிரிகளிடம் மாட்டியிருக்கும் ஜேம்ஸ்பாண்ட் கையில் இருக்கும் ஒரு சின்ன மோதிரத்தை பயன்படுத்தி அந்த கண்ணாடியை உடைத்து தப்பிப்பார். நீங்களும் அதை பார்த்து இருப்பீர்கள். அது போல ஒரு மோதிரத்தை தான் கேரளாவில் ரோஹில்தேவ் என்ற இளைஞர் கண்டுபிடித்து இருக்கிறார்.

2012 ஆம் ஆண்டு கோவையிலுள்ள கதிர் இன்ஜினியரிங் காலேஜில் படித்த இவர் தன் நண்பர்களுடன் இணைந்து துவக்கிய நிறுவனம் தான் Robatic human Logic. கேரளாவில் கொச்சின் அருகே உள்ள இவர் அமெரிக்காவிலும், யூரோப்பிலும் நடைபெற்ற டெக்னாலஜி ஃபேர்களில் கலந்து கொண்டு தன்னுடைய நிறுவனத்துக்கு புதிய ஐடியாக்களை உடைய நிறுவனம் என்று பெயர் வாங்கி தந்திருக்கிறார். சிறந்த ஐடியாக்களை உடைய நிறுவனம் என்ற அந்தஸ்தை உலக அளவில் பெற்றதும் அதனை செயல்படுத்த அவர்களிடம் பணவசதி இல்லை. இந்த நிலையில் தான் ஜிகோ நிறுவனம் வழிகாட்டியாக இருந்தது. அதைப்போல மக்களிடம் தங்களிண் கண்டுபிடிப்பை பற்றி எடுத்து சொல்லி நிதி உதவி கேட்டு அதன் மூலம் வரும் நிதியினை கொண்டு தங்கள் லட்சியத்தை எட்ட நினைத்தனர். இக்கருவிக்கான முன்பதிவாக 120 டாலர்களை நிர்ணயித்து நிதி உதவி கேட்டு இணையத்தில் வெளியிட்டனர். இவர்கள் எதிர்பார்த்தது 1 லட்சம் டாலர் மட்டுமே. ஆனால் இன்ப அதிர்ச்சியாக இரண்டு லட்சம் டாலர்கள் நிதி உதவியாக குவிந்தது.

இதனால் நினைத்ததை விட வேகமாக அந்த மோதிரத்தை உருவாக்கி வருகிறார்கள் நண்பர்கள். அந்த மோதிரத்திற்க்கு பின் என பெயரிட்டு இருக்கிறார்கள். இது செய்யும் வேலை சாதாரணமானது இல்லை. உங்களது ஸ்மார்ட் போன், டிவி, பிளே ஸ்டேஷன், கார், கேமரா, என அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களையும் ஃபின் கட்டுபடுத்தும். உங்கள் பெருவிரலில் மாட்டப்பட்டிருக்கும் ஃபின் மோதிரம் புளுடூத் மூலமாக எந்த பொருளுடனும் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும்.


அதன் பின் உங்களது உள்ளங்கையை அந்த கருவி போல இயக்கலாம். உங்களது டிவி வால்யூமை கூட்ட, குறைக்க உங்கள் சுண்டுவிரலை அமுக்கினால் போதும். சேனலை மாற்ற மோதிர விரல். உங்கள் போனில் பாடலை மாற்ற உங்களது பெருவிரலை ஆள்காட்டி விரலில் இருந்து சுண்டு விரலில் நகர்த்தினால் போதும். எந்தெந்த பொருளுக்கு எப்படி கைகளை பயன்படுத்த வேண்டும் என தெரிந்து கொள்ள ஒரு கையேடு வழங்கப்படும்.


அதுமட்டுமில்லாமல் ஃபின் மோதிரத்தை பற்றி தெரிந்து கொள்ள www.wearfin.com என்ற இணையத்தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு ஃபின் மோதிரக்கருவி பிடித்து இருந்தால் அதை அங்கேயே ஆர்டர் செய்து வைத்து கொள்ளலாம். 

காலை உணவு கட்டாயம்! Breakfast is mus


பள்ளிக்குக் கிளம்பும் அவசரத்தில், நேரமில்லை எனும் காரணம் காட்டி பல மாணவர்கள் காலை உணவைச் சாப்பிடுவதே இல்லை. இது ஆரோக்கியக் கேடுகளுக்கு வழி வகுக்கிறது என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. 

இரவு சாப்பிட்ட பின் 6 முதல் 10 மணி நேரம் வரை எதுவும் சாப்பிடாமல், நீண்ட இடைவெளி விடுகிறோம். இதனால் உடலில் சக்தி குறைகிறது. இந்தச் சக்தியைப் பெறுவதற்குக் காலையில் உணவு சாப்பிட வேண்டியது அவசியம். காலையில் நாம் சாப்பிடும் உணவுதான், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட, மூளை மற்றும் தசைகளுக்குத் தேவையான சக்தியை அளிக்கிறது.  

காலையில் உணவு சாப்பிடாமல் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு விரைவிலேயே ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் காலை வகுப்புகளில் அவர்களால் முழுமையாக கவனம் செலுத்த முடிவதில்லை. தூக்கம், சோர்வு தலைவலி வருகிறது. அவை கற்றல் திறனைப் பாதிக்கிறது. இவர்கள் மதிய உணவுக்கு முன்பாக வரும் இடைவேளை நேரத்தில் பசி காரணமாக ஏதாவது ஒரு நொறுக்குத் தீனியை வயிறு நிறையச் சாப்பிட்டு விடுகின்றனர். இதனால் மதிய உணவு சாப்பிடுவதும் குறைந்து போகிறது. நொறுக்குத்தீனிகளைச் சாப்பிடுவதால் உடற்பருமன் வருகிறது. இதன் விளைவால் இளம் வயதிலேயே சர்க்கரை நோய் ஏற்படுகிறது. 

மேலும், தொடர்ந்து காலை உணவைத் தவிர்ப்பவர்களுக்கு இரைப்பையில் சுரக்கிற அமிலச் சுரப்பு இரைப்பைத் திசுக்களை அரித்துப் புண்ணாக்கி விடுகிறது. இது பசியைக் குறைத்து விடுகிறது. செரிமானக் கோளாறு தொல்லை தருகிறது. எனவே இவர்களால் அடுத்த வேளை உணவையும் சரியாகச் சாப்பிடமுடிவதில்லை. இது ஊட்டச்சத்துக் குறைபாட்டை இன்னமும் அதிகரிக்கச் செய்கிறது. இது உடல் வளர்ச்சியைப் பாதிக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கிறது. இவர்கள் உடலளவிலும் மன அளவிலும் பலவீனமாக இருக்கிறார்கள். இதனால் பொறுமை குறைந்து கோபம், எரிச்சல் அதிகமாக வருகிறது.

காலை உணவு என்பது கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து கலந்த சமச்சீர் உணவாக இருக்க வேண்டும். கொழுப்பு மிகுந்த காலை உணவு மந்த நிலையைஉருவாக்கும். ஆகவே அதைத் தவிர்க்க வேண்டும். வழக்கமான அரிசியில் தயாரிக்கப்பட்ட இட்லி, தோசை, சாதம் என்று ஒரே வகை உணவைச் சாப்பிடுவதற்குப் பதிலாக பல மாற்று உணவுகளைச் சாப்பிடும் வழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும்.  

உதாரணமாக கேழ்வரகு இட்லியுடன், நிலக்கடலை சட்னி, ஒரு வாழைப்பழம், கார்ன்ஃபிளேக்ஸ் கலந்த பால் சாப்பிடலாம். வேக வைத்த காய்கறிகள் சேர்த்த கோதுமை ரவா உப்புமாவுடன் வேகவைத்த முட்டை சாப்பிடலாம். சப்பாத்தியுடன் தேன் கலந்த ஓட்ஸ் 100 மி.லி. அரை ஆப்பிள் சாப்பிடலாம். இப்படிச் சாப்பிடும்போது ஆரோக்கியத்துக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் கிடைத்துவிடும். அரிசி தோசை ஒருநாள் என்றால் சம்பா தோசை ஒருநாள் சாப்பிடலாம். காலை உணவில் ஒரு பழம் அவசியம் இருக்க வேண்டும். சாமை, வரகு, தினை, குதிரை வாலி போன்ற சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு ஆரோக்கியத்துக்கு நல்லது.

காலை உணவைச் சரியாகச் சாப்பிடும் குழந்தைகள் நல்ல உடல் நலனுடனும் ஊக்கத்துடனும் செயல்படுகிறார்கள் என்பதும் இவர்களுக்குச் சிந்திக்கும் திறன் அதிகமாக உள்ளது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கண்டிப்பாக காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.

Wednesday, June 4, 2014

கே.எஃப்.சி! KFC Secrets...

அசைவ உணவுப் பிரியர்கள் அதிகம் விரும்பிச் சாப்பிடுவது சிக்கனைத்தான். இன்றைக்கு பெருநகரங்களில் வசிக்கும் பலருக்கும் சிக்கன் என்றதுமே கே.எஃப்.சி.தான் ஞாபகத்துக்கு வருகிறது. தனித்துவம் மிக்கச் சுவையினால் உலகம் முழுக்க உள்ள அசைவப் பிரியர்களின் மனத்தில் நிரந்தர இடத்தைப் பிடித்திருக்கிறது கே.எஃப்.சி. இந்த வெற்றிக்குப் பின்னால் கொலோனல் ஹார்லேண்ட் சாண்டர்ஸ் சந்தித்த போராட்டங்கள் பலப்பல.

கொலோனல் ஹார்லேண்ட் சாண்டர்ஸ், 1890-ம் ஆண்டு அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் பிறந்தார். தனது ஆறாவது வயதிலேயே அவரது தந்தை இறந்ததால், தனது தம்பியையும், தங்கையையும் வளர்க்கும் பொறுப்பும், குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பும் சாண்டர்ஸுக்கு வந்தது. தனது உறவினரின் பண்ணையில் விவசாயம் செய்தார். பின்னர் அமெரிக்க ராணுவத்தில் டிரைவராக சிலமாதம் வேலை பார்த்தார்.

16 வயதில், ரயிலில் கரி அள்ளிப்போடும் வேலை என நிரந்தரமாக எந்த வேலையிலும் சாண்டர்ஸினால் இருக்க முடியவில்லை.

 

என்றாலும், பகுதி நேரமாகச் சட்டம் படித்தார். ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் சேல்ஸ்மேன் வேலைக்குச் சேர்ந்தார். அதுவும் சரிப்பட்டு வரவில்லை என்பதால், அந்த வேலையையும் விட்டுவிட்டார். கடைசியில், ஸ்டாண்டர்டு ஆயில் நிறுவனத்தின் சர்வீஸ் ஸ்டேஷனை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சில நாட்களில் அதற்கும் வந்தது சோதனை. கம்பெனி நஷ்டத்தில்சென்றதால் அதனையும் மூடும் நிலை உருவானது.

ஆனால், சர்வீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் உள்ளவர்களுக்கு பொரித்த சிக்கனை விற்று வந்தார் சாண்டர்ஸ். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, கென்டகி ஃப்ரைடு சிக்கன் என்று தனது தயாரிப்புக்கு பெயர் வைத்தார். இதன்பிறகு கே.எஃப்.சி. அமெரிக்கா முழுக்க பரவி, அடுத்த நாடுகளுக்கும்  செல்ல ஆரம்பித்தது.

சாண்டர்ஸின் பல்வேறு முயற்சிகளில் வெற்றிகரமாக இருந்தது கே.எஃப்.சி மட்டுமே. அடுத்தடுத்து தோல்விகள் தம்மைத் துரத்தி வந்தபோதும், தனக்கான வாய்ப்பை பெறும்வரை நம்பிக்கையோடு மனம்தளராமல் காத்திருந்தார் சாண்டர்ஸ். தொடர் தோல்விகளால் துவண்டுபோகிறவர்கள் தங்கள் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்தால், சாண்டர்ஸ் போல நிச்சயம் வாழ்க்கையில் ஜெயிக்கலாம்!

TED TALKS a view

' 'பள்ளிக்கூடங்கள் நமது படைப்பாற்றலை எப்படிக் கொல்கிறது?'
''உடல்மொழி நம்மை சிறந்த மனிதராக உருவாக்குமா?'
''புள்ளிவிவரங்கள் பிசினஸின் வளர்ச்சிக்கு எப்படி உதவும்?'' 

இதுபோன்ற சுவாரஸ்யமான  கேள்விகளுக்கு தெள்ளத் தெளிவாக, அதேநேரத்தில் 18 நிமிடங்களில் ரத்தினச் சுருக்கமாக அந்தந்தத் துறைகளைச் சேர்ந்த பிரபலமானவர்கள் தரும் பதில் தெளிவாக வீடியோ காட்சிகளாக பொதிந்து கிடக்கிறது டெட் டாக்ஸ் (TED TALKS) என்கிற இணையதளத்தில். நம் வீட்டில் உட்கார்ந்தபடியே இந்த இணையதளத்தின் மூலம் உலகத்தில்   அதி அற்புதமான அறிவைப் பெறலாம். 

டெட் டாக்ஸ் என்றால்..? 

1984-ம் ஆண்டு ரிச்சர்ட் சால் வுர்மன் (Richard Saul Wurman) என்பவர் தொழில்நுட்பம், பொழுதுபோக்கு மற்றும் வடிவமைப்புப் பற்றிய கருத்துகளையும், யோசனைகளையும் பரப்பும் நோக்கில் TED (Technology Entertainment Design - Ideas Worth Spreading) என்கிற அமைப்பை உருவாக்கினார். 2001-ம் ஆண்டு கிரிஸ் ஆண்டர்ஸன் (Chris Anderson) என்பவர் நடத்திவந்த சாப்லிங் பவுண்டேஷன் (Sapling  Foundation), வுர்மானிடமிருந்து 'டெட் டாக்ஸை’ வாங்கி  இன்றுவரை சிறப்பாக நடத்தி வருகிறது. சமீபத்தில் இதன் 30-வது பிறந்தநாள் கனடாவில் உள்ள வான்கூவரில் கொண்டாடப்பட்டது.

 

ஆரம்பத்தில் அறிவியல், வணிகம் மற்றும் உலகளாவிய பிரச்னைகள் பற்றிய பேச்சுகள் இதில் இடம்பெற்றன. பல துறைகளைச் சேர்ந்த ஜாம்பவான்கள் சன்மானம் எதுவும் வாங்காமல் தங்களது கருத்து களையும், யோசனைகளையும் 18 நிமிடத்துக்குள் (சில பேச்சுகள் இதற்கு விதிவிலக்கு) அனைவருக்கும் புரியும்படி எளிமையாக, தெளிவாக பேசியிருக் கிறார்கள். இன்றும் பேசிவருகிறார்கள்.

'பிக் பேங்க்’ (Big Bang) கோட்பாடு முதல் இன்றைய இன்டர்நெட் வரையிலான அறிவியல் மகத்துவங்கள் இந்த டெட் டாக்ஸில் இருக்கிறது. ஏறக்குறைய 1,700-க்கும் மேற்பட்ட பேச்சுகளின் வீடியோ இந்த இணையதளத்தில் உள்ளது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியவர்களில் பராக் ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமா, ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கேட்ஸ், மால்கம் கிளாட்வெல், டான் அரிலே, லாரி பேஜ், அல் கோர், இந்தியாவைச் சேர்ந்த சசி தரூர், கிரண்பேடி, முருகானந்தம், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. 

Flipkart history

இ- காமர்ஸ் துறையில் வெளிநாட்டு நிறுவனங் களுக்கு இணையாகப் போட்டிபோடும் அளவுக்கு ஃப்ளிப்கார்ட் எனும் இந்திய நிறுவனத்தை இரண்டு இளைஞர்கள் உருவாக்கியுள்ளனர். அதோடு, சமீபத்தில் மைந்த்ரா டாட்காம் என்னும் இணையதளத்தை சுமார் 2,000 கோடி ரூபாய் தந்து வாங்கி, இந்திய இ-காமர்ஸ் துறையின் மிகப் பெரிய வர்த்தகத்தை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

சண்டிகரில் பிறந்த சச்சின் பன்சால், டெல்லி ஐஐடியில் பட்டம் பெற்றவர். அவரது ஐஐடி நண்பரான பின்னி பன்சாலுடன் இணைந்துதான் ஃப்ளிப்கார்ட் என்னும் ஆன்லைன் இணையதளத்தை அமைக்கும் வேலையில் ஈடுபட்டார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், சச்சினும் பின்னியும் பள்ளியில் ஒன்றாகப் படித்தாலும், ஐஐடியில் இணையும்வரை ஒருவரையொருவர் அறியாமலே இருந்தனர். பட்டம் பெற்றபிறகு இருவரும் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டு அமேசானில் கிடைத்த வேலை மூலம் மீண்டும் இணைந்தனர். இதன்பிறகுதான் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தைத் தொடங்கும் எண்ணம் அவர்களுக்கு வந்தது. இருவரும் ஆளுக்கு தலா 2 லட்சம் ரூபாய்  முதலீடு செய்தனர். ஃப்ளிப்கார்ட் மூலம் புத்தகங்களை விற்கத் தொடங்கினர்.

2007-ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தைப் படிப்படியாக உயர்த்திய இருவரும், 2015-ல்  பில்லியன் டாலர் நிறுவனமாக மாற்றுவோம் என்று கூறியபோது, அதெல்லாம் சாத்தியமே இல்லை என்றார்கள் பலர்.  ஆனால், இன்று ஃப்ளிப்கார்ட் நிறுவனம் ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் செய்யும் நிறுவனமாக மாறியிருக்கிறது.

எலெக்ட்ரானிக் பொருட்கள் தொடங்கி ஆபரணப் பொருட்கள் வரை அனைத்தையும் விற்கும் இ-காமர்ஸ் இணையதளமாக ஃப்ளிப்கார்ட்டை மாற்றியிருக்கிறார்கள் இந்த இரு இளைஞர்கள்.

2015-ல் செய்ய நினைத்ததை 2014-லேயே செய்துகாட்டிய இந்த இளைஞர்கள் சாதனை மனிதர்கள்தான்!

The first Chief minister Gujarat

 
மோடி பிரதமர் ஆவாரா? என்ற கேள்விக்கான விடை, லோக்சபா தேர்தலின் கடைசிகட்ட வாக்குப் பதிவு நடந்துமுடிந்த பிறகு வெளியான வாக்குக் கருத்துக் கணிப்புகள் மூலமாகத் தெரிந்து விட்டது. ஆனாலும், ‘மோடிக்கு அடுத்து குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் நாற்காலியில் அமரப் போவது யார்?’ என்ற சஸ்பென்ஸ் அதன் பிறகும் நீடித்தது. காரணம், குஜராத் முதலமைச்சராக இருந்த வரையில், மோடி தனக்கு பிறகு நெம்பர் 2 என யாரையும் அடையாளம் காட்டியதில்லை. ஆனால், அதற்கு ஆசைப்பட்டவர்கள் இருக்கவே செய்தார்கள். 
 
அதனால்தான், மோடிதான் பிரதமர் என உறுதியானவுடன், குஜராத்தின் நிதி அமைச்சரான நிதின் பட்டேல், ‘தனக்கு அந்த வாய்ப்புத் தரப்பட்டால், அதனை ஏற்கத் தயார்’ என்று பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்தார். குஜராத் முதலமைச்சர் பந்தயத்தில் சௌரப் பட்டேல் (பத்தாண்டுகள் முதலமைச்சர் மோடிவசமிருந்த பல முக்கியமான துறைகளுக்கு இவர்தான் துணை அமைச்சர்), புருஷோதம் ருபாலா (இவர் ராஜ்யசபா எம்.பி.), வாஜுபாய் வாலா (சபாநாயகர்) என்று சிலரது பெயர்கள் கிசுகிசுக்கப்பட்டாலும், இறுதியில் வின்னிங் போஸ்ட்டைத் தொட்டவர் ஆனந்திபென் பட்டேல் தான்! மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சீனியர் அமைச்சர் இவர். சுமார் 15 வருடங்கள் அமைச்சராக இருந்திருக்கிறார். குஜராத்தில் அதிக காலம் பதவியில் இருந்த பெண் எம்.எல்.ஏ. இவர்தான். இப்போது குஜராத்தின் முதல் பெண் முதல்வர்.
 
விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரான ஆனந்தி பென், பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, பள்ளிக்கூட ஆசிரியர் ஆனார். 1987ல், பள்ளியிலிருந்து மாணவர்களை அழைத்துக் கொண்டு சர்தார் சரோவர் என்ற நர்மதா அணைக்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்த சமயத்தில், இரண்டு மாணவிகள் தவறி விழுந்தபோது, உடனே தண்ணீரில் குதித்து, அவர்களைக் காப்பாற்றினார். இதற்காக, மாநில அரசின் விருது அவருக்கு வழங்கப்பட்டது. எம்.எட். படிப்பை முடித்தபோது அவர் தங்கப்பதக்கம் பெற்றார். பின்னர் அகமதாபாத் நகரில் உள்ள மோனிபா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பிரின்சிபாலாகப் பணியாற்றினார். ஆசிரியப் பணிக்காக ஒருமுறை மாநில அரசின் விருதும், ஒரு முறை தேசிய விருதும் பெற்றிருக்கிறார்.  

ஆரம்பக்கால ஆர்.எஸ்.எஸ். நாட்களிலிருந்தே மோடிக்கு ஆனந்திபென்னைத் தெரியும். மோடியின் அழைப்பின் பேரில்தான், அவர் அரசியலுக்கு வந்தார். மோடி, குஜராத் மாநில பா.ஜ.க. செயலாளராக இருந்தபோது, அவர் ஆனந்தி பென்னை பெண்கள் பிரிவுக்குத் தலைவி ஆக்கினார். பின்னர் தேர்தலில் நின்று எம்.எல்.ஏ. ஆனார். கேசுபா பட்டேலின் கீழ் அமைச்சராக இருந்தபோதிலும், கேசுபா பட்டேலும், சஞ்சை ஜோஷியும் சேர்ந்து கொண்டு, மோடியை குஜராத்திலிருந்து வெளியேற்றத் திட்டமிட்ட காலகட்டத்தில், மோடிக்கு ஆதரவாக நின்றவர்களுள் ஒருவர் ஆனந்திபென்; இன்னொருவர் அமித் ஷா. 
 
73 வயதில் தினமும் காலை ஐந்தரை மணிக்கு எழுந்து, தன் பணியைத் தொடங்கிவிடும் ஆனந்திபென் தினமும் காலை யோகாவும், பிராயாணமும் செய்யத் தவற மாட்டார். குஜராத் மக்களின் நம்பிக்கையைப் பெற்று மூன்று முறை முதல்வராக அரியணை ஏறிய மோடியின் நம்பிக்கை பெற்றவராக ஆகியிருக்கிறார் ஆனந்தி பென்.

சுடோகு... ஓர் அறிமுகம்! sudoku

சுடோகு... ஓர் அறிமுகம்!

உலகமே டிஜிட்டல் மயமாகிக் கொண்டிருக்கிறது. கைபேசி, கணினி என எண்களின் ராஜ்ஜியம் எங்கெங்கும் நிறைந்துள்ளது. அத்தகைய எண்களை வைத்து ஒரு விளையாட்டை உங்கள் மழலைகளுக்குக் கற்றுத் தரலாமே! இந்தக் கட்டுரையை கவனமாகப் படித்து உங்கள் குழந்தைகளுக்கு சுடோகுவில் உள்ள லாஜிக் விஷயங்களைச் சொல்லிக் கொடுங்கள். முதலில் கடினமாகத் தெரிந்தாலும், புத்திசாலித்தனமான யூகங்களால் இதை எளிதில் சால்வ் செய்ய முடியும். ஃபின்லாண்டின் கணித மேதை டாக்டர் ஆர்டோ இங்காலா என்பவர் உருவாக்கிய சுடோகு தான் மிகவும் கஷ்டமான புதிர் என்று கருதப்பட்டது. வலைத்தளங்களில் கிடைக்கும் அதுபோன்ற சுடோகுகளை ப்ரிண்ட் எடுத்து குழந்தைகளைப் போடச் சொல்லலாம். செய்தித்தாள்களில் வரும் சுடோகுகளையும் போடச் சொல்லி உற்சாகப்படுத்துங்கள். இதில் உள்ள லாஜிக் புரிந்துவிட்டால் எத்தகைய கடினமான சுடோகுவாக இருந்தாலும் உங்கள் சுட்டீஸ் நொடியில் முடித்து விடுவார்கள். என்ன ரெடியா? 
சுடோகு என்பது உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள ஓர் எண் விளையாட்டு. எழுத்து என்றால் மொழி வேண்டும். எண்கள் உலகம் முழுவதும் ஒரே மாதிரியானவைதானே!


ஜப்பானில் உள்ள நிகோலி என்ற நிறுவனம் இதை சுடோகு என்ற பெயரில் பிரபலப்படுத்தியது. (சுடோகு என்றால் ஒற்றை இலக்க எண் என்பது பொருள்). 
இதில் பொதுவாக 9க்கு 9 என்கிற சதுர அளவில் 81 கட்டங்கள் இருக்கும். 1லிருந்து 9 வரை எந்த வரிசையில் வேண்டுமானாலும்,(ஒவ்வொரு வரிசையிலும்) எழுதலாம். இடமிருந்து வலம், மேலிருந்து கீழ் என்று வரும் எந்த வரிசைக்கும் இது பொருந்தும். அதுமட்டுமல்ல இந்த 9 x 9 கட்டத்தை 3 X 3 என்று 9 சமமான பகுதிகளாகப் (BLOCKS)பிரிக்க முடியும். இந்த ஒவ்வொரு பகுதியிலும் உள்ள 9 கட்டங்களிலும் 1லிருந்து 9 வரை உள்ள எண்களைக் காணலாம்.

இப்படி எண்களை (1லிருந்து 9 வரை உள்ள எண்களை) இந்தக் கட்டங்களில் நிரப்பிவிட்டு, அதிலிருந்து சில எண்களை நீக்கிவிடுவார்கள். (சில சமயம் பல எண்களைக்கூட நீக்கிவிடுவார்கள்). விடுபட்ட எண்களை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் சுடோகு விளையாட்டு.
விடுபட்ட எண்களைக் கண்டுபிடிக்க சில குறிப்புகள் இதோ.
எந்த ஒரு வரிசையிலும் (இடமிருந்து வலமுள்ள வரிசையோ (ROWS) அல்லது மேலிருந்து கீழ் வரிசையிலோ (COLUMNS) 1லிருந்து 9 வரை உள்ள எல்லா எண்களும் பயன்படுத்தப்பட்டிருக்கும். எனவே (மொத்தம் 9 கட்டங்கள்தான் ஒவ்வொரு வரிசையிலும் என்பதால்) 1லிருந்து 9 வரை உள்ள எந்த எண்ணுமே அந்த வரிசையில் ஒருமுறைதான் இடம் பெற்றிருக்கும்.
ஒவ்வொரு ‘ப்ளாக்’கிலும் (அதாவது 3 X 3 என்றிருக்கும் சிறு பகுதியில்) 1 முதல் 9 வரை உள்ள அத்தனை எண்களும் இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு எண்ணும் ஒருமுறைதான் இடம் பெற்றிருக்கும். நீங்கள் இதை விளங்கிக் கொண்டீர்களா என்பதைத் தெரிந்து கொள்ள இதோ ஒரு சின்ன சோதனை.
கீழே உள்ள கட்டங்களில் 3 இடங்களில் கேள்விக் குறிகள் உள்ளன. கேள்விக் குறி உள்ள கட்டங்களில் இடம் பெற வேண்டிய எண்கள் எவை? யோசியுங்கள்.
முதல் வரிசையில் உள்ள கேள்விக்குறிக் கட்டத்தில் இடம்பெற வேண்டிய எண் 3 ஏனென்றால் அடுத்த 3 X 3 என்றிருக்கும் சிறு பகுதியில் 1லிருந்து 9வரை உள்ள எல்லா எண்களும் (3த் தவிர) அந்த வரிசையில் உள்ளது.
ஐந்தாவது வரிசையில் மேலிருந்து கீழாக 5, 7 ஆகிய கட்டங்களுக்குக் கீழ் உள்ளது இரண்டாவது கேள்விக்குறி. அந்தக் கட்டத்தில் இடம் பெற வேண்டிய எண் 3. ஏனென்றால் ஒவ்வொரு 3 X 3 கட்டங்களாக இதைப் பிரித்தால்,ஒவ்வொன்றிலும் 1 முதல் 9 வரை உள்ள எண்கள் இடம் பெற்றிருக்கும். அப்படிப் பார்த்தால் மேற்புறம் நடுவில் உள்ள 3 X 3 கட்டங்களில் 9,5,6,2,7,8,4,1 ஆகிய எண்கள் காணப்படுகின்றன. 1லிருந்து 9 வரை உள்ளவற்றில் இதில் மிஸ் ஆகும் ஒரே எண் 3-தான். இதனால்தான்கேள்விக் குறி உள்ள கட்டத்தில் 3 இடம் பெற வேண்டும்.
ஐந்தாவது வரிசையில் மேலிருந்து கீழாக ஏழாவது கேள்விக் குறி உள்ள கட்டத்தில் இடம் பெற வேண்டிய எண் 9. ஏனென்றால் 1லிருந்து 8 வரை உள்ள எண்கள் அந்த வரிசையில் ஏற்கனவே உள்ளன. இதன் அடிப்படையில்தான் சுடோகோ விளையாட வேண்டும். தொடர்ந்து பயிற்சி செய்துவர கடினமான சுடோகோவும் ஈஸியாகும்.