Wednesday, June 4, 2014

Flipkart history

இ- காமர்ஸ் துறையில் வெளிநாட்டு நிறுவனங் களுக்கு இணையாகப் போட்டிபோடும் அளவுக்கு ஃப்ளிப்கார்ட் எனும் இந்திய நிறுவனத்தை இரண்டு இளைஞர்கள் உருவாக்கியுள்ளனர். அதோடு, சமீபத்தில் மைந்த்ரா டாட்காம் என்னும் இணையதளத்தை சுமார் 2,000 கோடி ரூபாய் தந்து வாங்கி, இந்திய இ-காமர்ஸ் துறையின் மிகப் பெரிய வர்த்தகத்தை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

சண்டிகரில் பிறந்த சச்சின் பன்சால், டெல்லி ஐஐடியில் பட்டம் பெற்றவர். அவரது ஐஐடி நண்பரான பின்னி பன்சாலுடன் இணைந்துதான் ஃப்ளிப்கார்ட் என்னும் ஆன்லைன் இணையதளத்தை அமைக்கும் வேலையில் ஈடுபட்டார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், சச்சினும் பின்னியும் பள்ளியில் ஒன்றாகப் படித்தாலும், ஐஐடியில் இணையும்வரை ஒருவரையொருவர் அறியாமலே இருந்தனர். பட்டம் பெற்றபிறகு இருவரும் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டு அமேசானில் கிடைத்த வேலை மூலம் மீண்டும் இணைந்தனர். இதன்பிறகுதான் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தைத் தொடங்கும் எண்ணம் அவர்களுக்கு வந்தது. இருவரும் ஆளுக்கு தலா 2 லட்சம் ரூபாய்  முதலீடு செய்தனர். ஃப்ளிப்கார்ட் மூலம் புத்தகங்களை விற்கத் தொடங்கினர்.

2007-ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தைப் படிப்படியாக உயர்த்திய இருவரும், 2015-ல்  பில்லியன் டாலர் நிறுவனமாக மாற்றுவோம் என்று கூறியபோது, அதெல்லாம் சாத்தியமே இல்லை என்றார்கள் பலர்.  ஆனால், இன்று ஃப்ளிப்கார்ட் நிறுவனம் ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் செய்யும் நிறுவனமாக மாறியிருக்கிறது.

எலெக்ட்ரானிக் பொருட்கள் தொடங்கி ஆபரணப் பொருட்கள் வரை அனைத்தையும் விற்கும் இ-காமர்ஸ் இணையதளமாக ஃப்ளிப்கார்ட்டை மாற்றியிருக்கிறார்கள் இந்த இரு இளைஞர்கள்.

2015-ல் செய்ய நினைத்ததை 2014-லேயே செய்துகாட்டிய இந்த இளைஞர்கள் சாதனை மனிதர்கள்தான்!

No comments:

Post a Comment