![]() |
| Add caption |
கட்சி என்றால் தலைவர் இருக்க வேண்டும். நிறுவனம் என்றால் நிர்வாகி இருக்க வேண்டும். கல்லூரி என்றால் முதல்வர் இருக்க வேண்டும். அதுபோல பல்கலைக்கழகம் என்றால் துணைவேந்தர் இருக்க வேண்டும். அப்போது தான் அதன் ஒட்டுமொத்த நிர்வாகமும் சிக்கலின்றி இயங்கும். ஆனால் தமிழகத்தில் நான்கு பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. இதனால் படித்து முடித்த மாணவர்கள் பரிதவிக்கிறார்கள்.
தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார், பாரதிதாசன், மதுரை காமராஜர், மனோன்மணியம் சுந்தரனார், பெரியார், அண்ணாமலை, அழகப்பா, அன்னை தெரசா, தமிழ்ப் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் என முக்கிய பல்கலைக்கழகங்கள் உள்ளன.
இந்தப் பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் கணிசமான எண்ணிக்கையிலான கல்லூரிகள் செயல்படுகின்றன. அதில் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பயின்று வருகிறார்கள். கல்லூரிகளின் செயல்பாடுகளைக் கவனிக்கவும், கண்காணிக்கவும், மாணவர்கள் நலனைப் பாதுகாக்கவும் பல்கலைக்கழகத்துக்குத் தலைமை தேவை. அதாவது துணைவேந்தர் தேவை. ஆனால் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணியிடம் கடந்த ஜூலை முதல் காலியாக உள்ளது. தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி அக்டோபரில் இருந்து காலியாக உள்ளது. சேலம் பெரியார் மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகளும் செப்டெம்பர் முதல் காலியாக உள்ளன.
இந்தப் பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான குழுக்கள் அமைக்கப் பட்டன. இந்தக் குழுக்களும் விவாதித்தன. ஆனால் துணைவேந்தரை நியமனம் செய்வதில்தான் அநியாய காலதாமதம். இந்த நிலையில் ‘தகுதியானவர்களைத் தான் துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும்’ என பேராசிரியர் கிருஷ்ணசாமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார். 2013 டிசம்பர் 9ம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கு பிப்ரவரி 27ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்குதான் துணைவேந்தர் நியமனம் காலதாமதமாவதற்குக் காரணமாக உள்ளது என்ற பேச்சு உள்ளது.
அரசியல் செல்வாக்கு, சாதி, பணம் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே கடந்த பத்தாண்டுகளாகத் தமிழகத்தில் துணைவேந்தர் பதவிகள் நிரப்பப்பட்டு வருகின்றன. துணைவேந்தராக ஒருவர் நியமிக்கப்பட என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனப் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி) 2009-ம் ஆண்டு விதிமுறைகளை வகுத்தது. அதில் முக்கியமான தகுதி, ‘துணைவேந்தராக நியமிக்கப்படுபவர் பல்கலைக்கழகத்தில் பத்தாண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றி இருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்’ என்பது தான். ஆனால் இதைக்கூட புறந்தள்ளிவிட்டு துணை வேந்தர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இப்போது தமிழகத்திலுள்ள சில துணைவேந்தர்கள் இந்தத் தகுதியைப் பெற்றிருக்கவில்லை. பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்த சம்பள விகிதத்தைப் பெற்றுக் கொள்ளும் துணைவேந்தருக்கு அந்தக்குழு (யு.ஜி.சி) நிர்ணயித்த கல்வித் தகுதி இருக்க வேண்டும்’ என அரசு கருதாதது வெட்கமாக இருக்கிறது. பல்கலைக்கழக பியூனுக்குக்கூட தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. அப்படி இருக்கையில் பல்கலைக்கழகத்தையே நிர்வகிக்கும் துணைவேந்தருக்குத் தகுதியைப் பின்பற்றவில்லையென்றால் என்ன அர்த்தம்?

No comments:
Post a Comment