Monday, February 24, 2014

Satya Nadella

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்த ஸ்டீவ் பாமருக்கு அடுத்து அந்தப் பதவிக்கு வரப்போகிறவர் யார் என்கிற கேள்வியைக் கடந்த ஐந்து மாதங்களாக உலகம் முழுக்கப் பலரும் கேட்க... அதற்கான பதில் இப்போதுதான் கிடைத்திருக்கிறது.  

ஆந்திராவில் பிறந்து வளர்ந்து, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் கடந்த 22 வருடமாக வேலை பார்த்துவரும் சத்யா நாதெள்ளாவைதான் மைக்ரோசாஃப்ட்டின் அடுத்த சிஇஓ என்று  அறிவித்திருக்கிறார் பில் கேட்ஸ். யார் இந்த சத்யா?

1969-ம் ஆண்டு, ஹைதராபாத்தில் பிறந்தவர் சத்யா நாதெள்ளா. அங்குப் பள்ளிப் படிப்பை முடித்தவர், பொறியியல் படிப்பை மணிப்பால் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பயின்றார். மேற்படிப்புக்காக அமெரிக்காச் சென்ற நாதெள்ளா, விஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் முதுகலைப் பட்டமும், சிகாகோ பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றிருக்கிறார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை வளர்த்ததோடு, தானும் வளர்ந்தவர். ஆரம்பத்தில் எந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்வது என்று குழம்பினாலும், மைக்ரோசாஃப்ட்டில் சேர்ந்தவுடனேயே அதன் தனித்துவத்தைப் புரிந்துகொண்டு அங்கேயே தங்கிவிட்டார்.  

''பல நிறுவனங்கள் உலகத்தை மாற்ற நினைக்கின்றன. ஆனால், சில நிறுவனங்களிடம்தான் அந்தத் திறமை  இருக்கிறது. மைக்ரோசாஃப்டிடம் உலகை மாற்றும் திறமை இருக்கிறது'' என்று புகழ்கிறார் சத்யா.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் திட்டத்தோடு சிஇஓ ஆகியிருக்கும் சத்யாவின்  சம்பளம் எவ்வளவு தெரியுமா? பணம், போனஸ் எல்லாம் சேர்த்து 18 மில்லியன் டாலர். மைக்ரோசாஃப்ட்டின் முன்னாள் சிஇஓ வாங்கிய சம்பளத்தைவிட இது 70% அதிகம்! கங்கிராட்ஸ் சத்யா!

No comments:

Post a Comment