நம் நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவுக்கு இது 50-வது வருடம்!
வெண்கலத்தில், அரசமரத்தின் இலை வடிவமும் அதில் ஒரு பக்கம் பிளாட்டினத்தாலான சூரியனும் மறு பக்கம் சிங்கமும் பொறிக்கப்பட்டு, 'பாரத ரத்னா’ என்று பழங்கால தேவநகரி மொழியில் எழுதப்பட்டு இருக்கும். வெள்ளை ரிப்பனில் இணைக்கப்பட்ட இந்த விருது, ஜனாதிபதியால் அணிவிக்கப்படும்.
பாரத ரத்னா முதல் விருதைப் பெற்ற மூவர், சி.வி.ராமன், ராஜாஜி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.
இந்தியர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்று விதிமுறை கிடையாது. எல்லைக் காந்தி கான் அப்துல் கஃபார் கான், நெல்சன் மண்டேலா ஆகியோர் பாரத ரத்னா விருதுபெற்ற வெளிநாட்டவர்கள்.
வெளிநாட்டில் பிறந்து, இந்தியப் பிரஜையான அன்னை தெரசா இந்த விருதைப் பெற்றார். பெண்களில் இந்த விருதைப் பெற்றவர்கள்... இந்திரா காந்தி, லதா மங்கேஷ்கர் மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர்.
இதுவரை 43 பேர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு உள்ளது.
திரும்ப பெறப்பட்ட விருது, நேதாஜிக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா மட்டுமே. இந்த விருதைப் பெற மறுத்தவர், இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத். தானே தேர்வுக் குழுவில் இருப்பதால், விருதை மறுத்துவிட்டார். எனினும் 1992-ம் வருடம், அவரின் மறைவுக்குப் பின்னர் விருது வழங்கப்பட்டது.
1966-ம் வருடத்தில் இருந்துதான் மறைந்தவர்களுக்கும் விருது வழங்கலாம் என்ற விதிமுறை இணைக்கப்பட்டது. 12 பேர்களுக்கு இறந்த பின்னர் வழங்கப்பட்டது. உயிருடன் இருக்கும்போது விருது பெற்றவர்களில் மிக மூத்தவர் டி.கே.கார்வே. தமது 100-வது வயதில் பெற்றார். இளம் வயதில் பெறுபவர், சச்சின் டெண்டுல்கர் (40 வயது). விளையாட்டு வீரர்களுக்கு விருது வழங்கலாம் என இரண்டு வருடங்களுக்கு முன்புதான் விதிமுறை கொண்டுவரப்பட்டது. முதல் விருதைப் பெறுகிறார் சச்சின்!
பாகிஸ்தானின் மிக உயரிய 'நிஷான் இ பாகிஸ்தான்’ விருது மற்றும் 'பாரத ரத்னா’ இரண்டையும் பெற்றவர் மொரார்ஜி தேசாய்.
No comments:
Post a Comment