Friday, July 19, 2013

பாதியில் நின்ற "சீல்' வைப்பு நாடகம் :ஒரே போனில் மிரண்ட அதிகாரிகள்

கோவை : கோவை ஆர்.எஸ்.புரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், பொது ஒதுக்கீடு பெற்று, உள்வாடகைக்கு விடப்பட்ட வீடுகளை "சீல்' வைக்க, நேற்று அதிகாரிகள் வந்தனர். ஆனால், திடீரென வந்த, போன் அழைப்பை அடுத்து, நடவடிக்கையை கைவிட்டு அதிகாரிகள் ஓட்டம் பிடித்தனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் புண்ணியகோடி வீதியில், வீட்டு வசதி வாரிய
குடியிப்பு உள்ளது. ஒரு பிளாக்கில் ஆறு வீடுகள் வீதம், மொத்தம் 13 பிளாக்குகளில் குடியிருப்புகள் உள்ளன. ஒதுக்கீடு பெற்றவர்கள், குடியிருப்புகளை உள்வாடகைக்கு விட்டுள்ளனர்.
இதுபற்றி ஹவுசிங் யூனிட் அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதையடுத்து, ஒதுக்கீடு பெற்ற குடியிருப்புகளை உள்வாடகைக்கு விட்டுள்ளதை கணக்கெடுத்தனர்.
மொத்தம் ஏழு குடியிருப்புகள், விதிமுறைகளுக்கு முரணாக உள்வாடகைக்கு விடப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து, அந்த குடியிருப்புகளை காலி செய்து "சீல்' வைக்க, ஹவுசிங் யூனிட் அதிகாரிகள் நேற்று சென்றனர். ஆர்.எஸ்.புரம் போலீசார், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
"எல் 3' குடியிருப்பு, ஹவுசிங் யூனிட்டில் பணியாற்றிய இளங்கோவன் என்பவர் பெயரில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த ஏழு ஆண்டுகளாக இளங்கோவன் "சஸ்பெண்ட்' நிலையில் இருப்பதாலும், குடியிருப்பில் யாருமின்றி பூட்டப்பட்டிருந்ததாலும், அதற்கு, வீட்டு வசதி வாரிய அதிகாரி பெரியசாமி "சீல்' வைத்தார்.
அடுத்த குடியிருப்புக்கு "சீல்' வைக்க சென்றபோது, வாக்குவாதம் ஏற்பட்டது. குடியிருப்பில் இருவர்களிடம் முறையாக ஆவணங்கள் இல்லாததால், உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
அடுத்த குடியிருப்பு மீது நடவடிக்கை எடுப்பதற்குள், ஹவுசிங் யூனிட் அதிகாரிகளுக்கு மேல் இடத்தில் இருந்து மொபைல்போன் அழைப்பு வந்தது. போனில் பேசிய அதிகாரிகள், குடியிருப்புகளை காலி செய்யும் நடவடிக்கையை, திடீரென கைவிட்டனர்.
உதவி பொறியாளர் பெரியசாமியிடம் கேட்டபோது, ""நடவடிக்கையை கைவிடுமாறு, உயர்அதிகாரிகள் தெரிவித்ததால், திரும்பி விட்டோம். இதுபற்றி என்ன கேட்பதாக இருந்தாலும், செயற்பொறியாளரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்,'' என்றார்.
செயற்பொறியாளரின் மொபைல்போன் எண், அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அலுவலக எண்ணான, 0422 2493359 என்ற எண்ணில் தொடர்பு கொண்டபோது, "கண்காணிப்பு பொறியாளர் வந்துள்ளதால், அதிகாரிகள் "மீட்டிங்'கில் உள்ளனர். எந்த செய்தி கேட்பதாக இருந்தாலும், நாளை கேட்டுக்கொள்ளுங்கள்' என, அலுவலக உதவியாளர் தெரிவித்தார்.

கவனிப்பாரா கலெக்டர்?

ஹவுசிங் யூனிட் அதிகாரிகளே குடியிருப்புகளை வெவ்வேறு பெயரில், உள்வாடகைக்கு விட்டுள்ளனர். பொது ஒதுக்கீடு ஹவுசிங் யூனிட் மட்டுமின்றி, அரசு அலுவலர் குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்றவர்களும் குடியிருப்புகளை உள்வாடகைக்கு விட்டுள்ளனர். கலெக்டர் தலைமையில் தனிக்குழு அமைத்து, குடியிருப்பு ஒதுக்கீடு, வசிப்பவர்கள் விபரங்களை சேகரித்து, விதிமுறை மீறல் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும். குடியிருப்புக்காக பதிவு செய்து காத்திருப்போருக்கு, முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment