Tuesday, June 24, 2014

'ஏடிஸ்' கொசுவின் வளர்ச்சி : இனம் புரியாத காய்ச்சல்



தமிழகத்தில், கடந்த சில நாட்களாக, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பால், மக்கள் மருத்துவமனைக்கு அலைந்து திரிகின்றனர். உயிரிழப்பு ஏற்படும் முன், சுகாதாரத் துறை தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஆங்காங்கே லேசான மழை பெய்த நிலையில், சில நாட்களாக, இனம் புரியாத காய்ச்சல் பரவி வருகிறது. எந்த மாதிரியான காய்ச்சல் என்று தெரியாமல் பொதுமக்கள், அரசு, தனியார் மருத்துவமனைக்கு அலைந்து திரிகின்றனர். காய்ச்சல் மட்டுமின்றி, அதிக அளவில் உடல் சோர்வு, மூட்டு வலியும் இருப்பதால் மக்கள் அச்சம் அடைந்துஉள்ளனர்.
தர்மபுரியில்...



தர்மபுரி மாவட்டம், ஜம்புகானாகோட்டை பகுதியில், 30 வயதுக்கு மேற்பட்ட இரண்டு பேர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதை, சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். தமிழகம் முழுவதும், இதுபோன்ற பாதிப்பு உள்ளது.

பாதிப்பு ஏன்?



ஓய்வு பெற்ற சுகாதாரத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில், கடந்த, 10௦ ஆண்டுகளை ஒப்பிட்டு பார்த்தால், டெங்கு, மூளைக்காய்ச்சல் பாதிப்பு, ஜூன் மாத இறுதியில் தான் தொடங்குகிறது. செப்., மாதத்தில் அதிகமாகி, டிசம்பர் வரை தொடரும்.தற்போது, பருவ மழை சரியாக பெய்யவில்லை. ஆங்காங்கே சிறு அளவில் மழை பெய்துள்ளது. இதில் இருந்து உருவான கொசுக்களால், டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் தவிர, பெரும்பாலான மாவட்டங்களில் இந்த பாதிப்பு உள்ளது.ஏப்., மாதத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு, தொடங்கி இருக்க வேண்டும். உத்தரவுகள் போடப்பட்டாலும், கீழ் நிலையில், சரியாக செயல்படுத்தப்படவில்லை. நோய் தடுப்புக்கு போதிய நிதி அளித்தல், தேவையான ஆட்களை தருவதல், கீழ்நிலை அதிகாரிகளுக்கும் அதிகாரம் தருவதும் முக்கியம்.தற்போதைய நிலை தொடருமானால், செப்., மாதத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, இப்போதாவது நோய் தடுப்பு பணிகளில் அரசு அக்கறை காட்ட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டனர்; உயிரிழப்புகளும் ஏற்பட்டன. திணறிய தமிழக அரசு, நிலவேம்பு கசாயம், பப்பாளி இலைச்சாறு கொடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

'ஏடிஸ்' கொசுவின் வளர்ச்சி:

*முட்டை, கொசுப்புழு, கூட்டுப்புழு, முழுமையான கொசுவாக மாறுதல். 15 நாட்களில் கொசு முழு வளர்ச்சி பெற்று விடும்.
*தட்ப வெப்ப நிலை மாற்றத்தால், தற்போது, 10 நாட்களிலேயே, கொசு முழு வளர்ச்சி பெற்று விடுகிறது.
*வளர்ச்சி வேகம் அதிகரிப்பால், நோய் தோன்றல், பரவுதலும் மிக வேகமாக உள்ளது.

புது தலைமுறை கொசுவாலும் பாதிப்பு!



டெங்கு நோய் பாதித்தவரை கடித்த கொசு, கிருமியை உள்வாங்கிக் கொண்டால் மட்டுமே நோய் பரப்பும் என, நினைப்பது தவறு. நோய் பாதித்த ஒருவரை கொசு கடித்தால் போதும். அதன் மூலம் அடுத்தடுத்து உற்பத்தியாகும் புது தலைமுறை கொசுக்களிலும், டெங்கு பாதிப்பை ஏற்படுத்தும் கிருமிகள் இருக்கும்.

'ஏடிஸ்' கொசுக்களை ஈர்க்கும் வியர்வை வாடை


*'ஏடிஸ்' எனும், பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால் டெங்கு பாதிப்பு வருகிறது. இதைத் தடுக்க, பகல் நேரத்தில் முழுக்கைச் சட்டை, உடல் முழுவதும் மறைக்கும் வகையிலான உடைகளை அணியலாம்.
*அடர் வண்ண உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். ெவளிர் கலர் உடைகளை அணியலாம்.
*மனிதனின் உடலில் சுரக்கும் வியர்வையின் வாடை, கொசுக்களை ஈர்க்கும். இதைத் தடுக்க, தினமும் இரண்டு முறை குளித்தல், வியர்வை வாடை மறைக்க வாசனை திரவியங்கள் தடவிக் கொள்வது நல்லது.
*வீட்டின் உள் பகுதியிலும், சுற்றுப்புற பகுதிகளிலும் நாட்கணக்கில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேல்நிலைத் தொட்டி, கீழ் நிலைத் தொட்டிகள், தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை வாரம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்.
*வீட்டைச்சுற்றி தேவையின்றி கிடக்கும் பிளாஸ்டிக் கப், டயர், தேங்காய் மட்டை போன்ற, தேவையற்ற பொருட்களை அகற்றி, அழிக்க வேண்டும்.
*நோய் பாதிப்பு தோன்றினால், எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த நிலவேம்பு கசாயம் சிறந்த தீர்வு.

93 பேர் இறப்பு:



தமிழகத்தில், 2008 முதல், 2014 மே மாதம் வரை, 25,663 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 93 பேர் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது.

- நமது நிருபர் -
Click Here

No comments:

Post a Comment