1. ஒன் ட்ரைவ் போல்டரை நகர்த்த: தற்போதைய விண்டோஸ் சிஸ்டத்தில் பைல்களை ஒருங்கிணைத்து சேவ் செய்திடலாம். நாம் உருவாக்கும் பைல்கள் நம் கம்ப்யூட்டரில் மட்டுமின்றி, நமக்கெனத் தரப்பட்ட க்ளவ்ட் ஸ்டோ ரேஜ் ஒன் ட்ரைவிலும் பதியப்படுகின்றன. நம் விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டரில், இந்த பைல்கள் (synced files) பயனாளரின் ப்ரபைல் போல்டரில் ஒரு துணை போல்டரில் காட்டப்படுகின்றன. ஆனால், இந்த பைல்களை இன்னொரு போல்டரில் அல்லது இன்னொரு தனி ட்ரைவில் நாம் எடுத்துச் சென்று வைக்கலாம்.
விண்டோஸ் 8.1 இயக்கத்தில், ஒன் ட்ரைவுடன் இணைந்து பைல் சேமிக்கும் வசதி மாறா நிலையில் அமைக்கப்படுகிறது. பைல் எக்ஸ்ப்ளோரரில் ரைட் கிளிக் செய்து, தேர்ந்தெடுக்கவும். பின்னர் இங்கு கிடைக்கும் விண்டோவில் Location டேப் கிளிக் செய்து போல்டர் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
விண்டோஸ் 7 இயக்கத்தில், இணையத்தில் Onedrive.com சென்று, இந்த ஒருங்கிணைந்த வசதியைப் பெறவும். இதற்கான செட் அப் செய்திடுகையில், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள லோக்கல் போல்டரைத் தேர்ந்தெடுக்கவும். இதை ஏற்கனவே நீங்கள் அமைத்திருந்தால், சிஸ்டம் ட்ரைவில் உள்ள ஒன் ட்ரைவ் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் Settings தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். அடுத்து Unlink OneDrive என்பதில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட பைல்கள் அனைத்தையும் புதிய போல்டர் ஒன்றுக்கு மாற்றவும். மீண்டும் செட் அப் இயக்கவும்.
2. டாகுமெண்ட் ஒன்றை இணையத்தில் இணைத்தல்: நம் டாகுமெண்ட் ஒன்றை, ஒன் ட்ரைவ் பயன்படுத்தி நாம் விரும்பும் வலைமனை அல்லது இணையப் பக்கத்தில் அமைக்கலாம். ஒன் ட்ரைவில் உள்ள டாகுமெண்ட், படம் அல்லது முழு போல்டரையும் எளிதாகப் பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம். படங்களுக்கும், போல்டர்களுக்கும் அவற்றைப் பதிந்து வைக்கும் ஆப்ஷன் இங்கு தரப்படுகிறது. இதன் மூலம் நம் பைல்களுக்கு லிங்க் ஒன்றை வலைமனை அல்லது இணையப் பக்கத்தில் ஏற்படுத்தலாம். இதனை எப்படி ஏற்படுத்தலாம்? டாகுமெண்ட்டைத் திறக்க வேண்டாம். டாகுமெண்ட் உள்ள போல்டர் சென்று, அதனைத் தேர்ந்தெடுத்து ரைட் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் மெனுவில் Embed என ஓர் ஆப்ஷன் இருப்பதைக் காணலாம். அதனைத் தேர்ந்தெடுத்தால், எச்.டி.எம்.எல். குறியீட்டினை உருவாக்க வழி காட்டப்படும். இதனை வலைமனை அல்லது இணையப்பக்கத்தில் இணைத்து வைக்கலாம்.
3. இணையவெளியில் சர்வே எடுக்க: இணையத்தில் ஒன் ட்ரைவில் நாம் லாக் இன் செய்திடுகையில், அதன் மேலாக Create என்று ஒரு பட்டன் கிடைக்கும். இதில் கிளிக் செய்தால், கீழ் விரி மெனு ஒன்று கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் இணைய வெளியில் டாகுமெண்ட், எக்ஸெல் ஸ்ப்ரெட்ஷீட், பவர் பாய்ண்ட் பிரசண்டேஷன் பைல், ஒன் நோட் பைல் அல்லது டெக்ஸ்ட் பைல் ஒன்றை உருவாக்க வழி காட்டப்படும்.
ஆனால், இங்கு இன்னொரு ஆப்ஷனும் உள்ளது. Excel Survey என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். இங்கு கேள்விகள் அடங்கிய சர்வே கேள்வி படிவம் ஒன்றை உருவாக்கலாம். உருவாக்கி முடித்த பின்னர், லிங்க் ஒன்றை இதற்கு உருவாக்கி, அதனைப் பார்க்கும் மற்றவர்கள், இதில் பங்கெடுக்கும் வாய்ப்பினைத் தரலாம். இதனைப் பார்த்து இந்த சர்வேயில் பங்கெடுப்பவர்கள், தங்களின் டேட்டாவினை இதில் நிரப்பலாம். ஆனால், முடிவுகள் அனைத்தையும் நீங்கள் மட்டுமே பார்க்க முடியும்.
4. படத்தை முழு திறனுடன் பகிர்ந்து கொள்ள: படம் ஒன்றை ஒன் ட்ரைவில் திறக்கும் போது, அதன் வலது பக்கம், அந்தப் படம் குறித்த தகவல்கள் அடங்கிய கட்டம் ஒன்றைக் காணலாம். இதில்மேலாக உள்ள Share என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது உங்களுக்கு ஒரு லிங்க் கிடைக்கும். இதனை மற்றவர்களுக்கு அனுப்பி, நீங்கள் எப்படி முழு ரெசல்யூசனுடன் இந்தப் படத்தைப் பார்க்கிறீர்களோ, அதே அளவில் மற்றவர்களும் காணும்படி செய்திடலாம்.
அப்படி இல்லாமல், படத்தை பங்கிட மட்டும் விரும்பினால், பகிர்ந்து கொள்வதற்கான லிங்க் உருவாக்கிய பின்னர், View Original என்பதில் கிளிக் செய்திடவும். இது, அந்தப் படத்தினை முழு ரெசல்யூசனுடன் திறக்கும். பிரவுசரின் முகவரிக் கட்டத்திலிருந்து (address bar) இந்த லிங்க்கினை காப்பி செய்திடவும். இதனை குறிப்பிட்ட படத்தினை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள பயன்படுத்தவும்.
5. இரண்டு ஒன் ட்ரைவ் அக்கவுண்ட்களை பகிர்ந்து கொள்ள: ஒன் ட்ரைவில் நாம் உருவாக்கும் ஒவ்வொரு அக்கவுண்ட்டிற்கும் குறைந்த பட்சம் 7 ஜிபி ஆன்லைன் ஸ்டோரேஜ் இடம் தரப்படுகிறது. உங்களுடைய அக்கவுண்ட் ஒன்றுடன் மட்டுமே உங்களின் பெர்சனல் கம்ப்யூட்டர், மேக் கம்ப்யூட்டர் அல்லது டேப்ளட் பி.சி.யினை ஒருங்கிணைக்கலாம். ஆனாலும், மற்ற அக்கவுண்ட்களையும் நீங்கள் அணுகலாம். உங்களுக்கு Outlook.com அல்லது Hotmail இருந்தால், பிரவுசரைத் திறந்து (இதனை private /incognito mode எனப்படும் ரகசிய நிலையில் திறக்கவும்.) அந்த அக்கவுண்ட் ஒன்றைப் பயன்படுத்தி, ஒன் ட்ரைவில் லாக் இன் செய்திடவும். இனி புதிய போல்டர் ஒன்றைத் திறந்திடவும். பின் இந்த போல்டரில் ரைட் கிளிக் செய்து, Share தேர்ந்தெடுக்கவும். உங்களுடைய ஒன் ட்ரைவ் அக்கவுண்ட்டுடன் தொடர்பு கொண்டுள்ள முகவரியைப் பயன்படுத்தி, Invite People என்ற லிங்க் வழியாக லிங் ஒன்றை உருவாக்கலாம். இந்த இன்வைட் விண்டோவில், செட்டிங்ஸ் மாற்ற, Recipients Can Only View என்று உள்ள லிங்க்கில் கிளிக் செய்திடவும். அந்த போல்டரில் உள்ள பைல்களை நீங்கள் மட்டுமே எடிட் செய்திட அனுமதிக்கும் வகையிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக உங்களு டைய மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் வழி மட்டும் லாக் இன் செய்வதற்காகவும் செட்டிங்ஸ் அமைக்கவும். அமைத்த பின்னர், இந்த லிங்க்கினை உங்களுக்கே அனுப்பவும்.
இனி, இந்த இரண்டாவது அக்கவுண்ட்டினைப் பயன்படுத்தி, பிரவுசர் வழி ஒன் ட்ரைவ் செல்லலாம். இதற்கு இடது பக்கம் கிடைக்கும் Shared link இல் கிளிக் செய்து செல்ல வேண்டும்.
6. போல்டருக்கு கவர் இமேஜ் அமைத்தல்: பொதுவாக, ஒரு பிரவுசர் மூலம் ஒன் ட்ரைவினைத் திறந்து, Thumbnails வியுவினைத் தேர்ந்தெடுக்கும் போது, ஒவ்வொரு போல்டரும் அதில் உள்ள அனைத்து படங்களையும் சுழற்சி முறையில் காட்டும். சில போல்டர்களுக்கு, குறிப்பிட்ட கவர் இமேஜ் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுத்து அது மாறாமல் இருக்க விரும்புவீர்கள். அதன் மூலம் அதனை அடையாளம் கண்டு கொள்ள விரும்புவீர்கள். இதற்கு அந்த போல்டரைத் திறக்கவும். நீங்கள் விரும்பும் படத்தினைத் தேர்ந்தெடுக்கவும். அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Add As Cover என்பதில் கிளிக் செய்திடவும். அவ்வளவுதான். இனி எத்தனை படங்களை அந்த போல்டரில் போட்டாலும், நீங்கள் தேர்ந்தெடுத்த படம் தான் அதன் போல்டர் இமேஜாகக் காட்டப்படும். அதனைக் கொண்டு, அந்த போல்டரை எளிதாக அடையாளம் காண இயலும்.
No comments:
Post a Comment