Saturday, December 14, 2013

வோட்டுக்கு வேட்டு ...



பழைய பாணியிலேயே இருந்து கொண்டிருக்கும் இந்திய அரசியலில் அண்மை சட்டமன்றத் தேர்தல்களில் நடந்திருக்கும் இரு புதுமைகள் மட்டுமே நம் கவனத்துக்குரியவை. ஒன்று நோட்டா. இன்னொன்று ஆம் ஆத்மி.

எல்லா வேட்பாளரையும் நிராகரிக்கும் உரிமையை ரகசியமாக வாக்குப்பதிவு இயந்திரத்தின் வழியாகவே பதிவு செய்யும் நோட்டா உரிமை இந்தத் தேர்தல்களில் தான் முதன்முறையாகச் செயல்படுத்தப்பட்டது. ‘நன் ஆஃப் தி அபவ்’ என்ற ஆங்கிலச் சொற்களின் சுருக்கமே நோட்டா. சுமார் பத்து வருடப் போராட்டத்துக்குப் பின்னர்தான் இது சாத்தியமாயிற்று. இந்தியாவில் அண்மை வருடங்களில் நடக்கும் ஒவ்வொரு தேர்தல் சீர்திருத்தமும் உச்ச நீதிமன்ற உத்தரவின் விளைவாகவே நடப்பது போலவே நோட்டாவும் நீதிமன்றத் தீர்ப்பினால்தான் செயலுக்கு வந்தது.

இதுவரை ‘49 ஓ’ என்ற பிரிவினால் அடையாளப்படுத்தப்பட்ட இந்த உரிமையைப் பயன்படுத்த வாக்குச்சீட்டில் வழி இருக்கவில்லை. வாக்குச் சாவடியில் பகிரங்கமாக எல்லா கட்சி ஏஜன்ட்டுகள் முன்னாலும் இதைச் சொல்லிக் கையெழுத்திட வேண்டியிருந்தது. பீ.யூ.சி.எல். எனப்படும் ‘மக்கள் சிவில் உரிமைக் கழகம்’ உச்ச நீதிமன்றத்தில் போட்ட வழக்கின் முடிவிலேயே இது ரகசிய நோட்டாவாக மலர்ந்தது. வேட்பாளரின் சொத்துக் கணக்கைத் தெரிவிக்கவும் அரசியல் கட்சிகள் முதலில் ஒப்புக் கொள்ளவில்லை. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னரே ஏற்றுக் கொண்டன. அதே நிலைதான் இதிலும் இருந்தது.

இந்த முறை நோட்டாவை எத்தனை வாக்காளர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம். தமிழ்நாட்டில் நடந்த ஏற்காடு இடைத்தேர்தலில் மொத்தம் சுமார் 90 சதவிகித வாக்குப்பதிவு நடந்தது. இது வழக்கத்துக்கு மாறானது. நேரடிப் போட்டியில் இருந்த தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் என்ன செய்தேனும் வாக்காளரை வோட்டுப்போட அழைத்து வருவதில் காட்டிய தீவிரமே இதற்குக் காரணம். இதற்கு ‘நோட்டு விநியோகம்’ செய்த திருமங்கலம் பார்முலா இங்கேயும் பின்பற்றப்பட்டது தான் காரணம் என்று ம.தி.மு.க. போன்ற கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இங்கே மொத்தமாகப் பதிவான நோட்டா எண்ணிக்கை 4,431. அங்கே பல சுயேச்சைகள் வாங்கிய வாக்குகளை விட இது அதிகம்.

எனினும் ஏற்காடு தொகுதியில் யார் நோட்டாவைப் பயன்படுத்தியிருக்கக்கூடும் என்பது மர்மம் தான். இந்தத் தேர்தலில் பங்கேற்காத தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகளின் தலைவர்கள் யாரும் ‘நோட்டாவைப் பயன்படுத்துங்கள்’ என்று தங்கள் ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் வைக்கவில்லை. பா.ம.க. தலைவர் ராமதாஸ் மட்டும் ‘தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளையும் ஆதரிக்க வேண்டாம்’ என்று சொல்லியிருந்தார். இந்த இரு கட்சிகளும் கடந்த முறை இந்தத் தொகுதியில் பெற்ற வாக்குகள் சுமாராக 35 ஆயிரம். அத்தனை பேரும் நோட்டாவுக்குப் போடவில்லை என்பது வெளிப்படை. அவரவர் விரும்பியபடி ஏதோ ஒரு வேட்பாளருக்கே வாக்களித்திருக்கின்றனர் என்பதும் தெரிகிறது.

ராஜஸ்தானிலும் மத்தியப்பிரதேசத்திலும் நோட்டாவைப் பயன்படுத்தியவர்கள் குறைவுதான். ராஜஸ்தானில் மொத்தம் பதிவான வாக்குகளில் 1.5 சதவிகிதமும், மத்தியப் பிரதேசத்தில் 1.4 சதவிகிதமும் மட்டுமே நோட்டா வாக்குகள். நோட்டா குறைவாக விழுவதற்கான பல காரணங்களில் முதல் காரணம், ‘அதற்கென்று தனிப் பிரசார அமைப்போ, பலமோ இல்லை’ என்பதாகும். கட்சிகளின் வேட்பாளருக்குப் பிரசாரம் செய்ய அமைப்பும் பணமும் இருப்பது போல, நோட்டாவுக்குக் கிடையாது. அப்படி ஒன்று இருப்பதைத் தெரிந்து வைத்திருக்கக்கூடிய மக்கள் எண்ணிக்கையே குறைவுதான். எல்லா தொகுதிகளிலும் நோட்டா என்ற ஒரு வேட்பாளர் இருப்பதை யாரேனும் இயக்கரீதியாகப் பிரசாரம் செய்தால் மட்டுமே நோட்டாவுக்கு அதிக ஆதரவு கிடைக்க முடியும்.

சத்தீஸ்கர் மாநிலம் இதற்குச் சரியான எடுத்துக்காட்டு. அங்கே பழங்குடியினர் பகுதிகளில் இருக்கும் மாவோயிஸ்ட்டுகள் தேர்தலைப் புறக்கணிப்பதைத் தங்கள் வழக்கமான பிரசாரமாக வைத்திருப்பர். ஆனால் இந்த முறை தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்புகள் எதுவும் பெரிதாகச் செய்யப்படவில்லை. ‘வாக்குச் சாவடிகள் தாக்கப்படும்’ என்ற போலிஸ் தரப்பு எதிர்பார்ப்புகளும் பொய்யாகிவிட்டன. ஆனால் மிக அதிக அளவில் நோட்டா வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் பதிவான வாக்குகளில் 4.6 சதவிகிதம் நோட்டா வாக்குகள்.

பழங்குடி மக்கள் இருக்கும் தொகுதிகள் அனைத்திலும் சராசரியாக ஒவ்வொரு தொகுதியிலும் 4,000 நோட்டா வாக்குகள் விழுந்துள்ளன. சித்திரகூட் தொகுதியில் பத்தாயிரம் நோட்டா வாக்குகள். கொண்டே காவ்ன் தொகுதியில் மாநில பி.ஜே.பி. அமைச்சர் லதா உசேண்டி காங்கிரஸ் வேட்பாளர் மோகனை விட 5,135 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியடைந்திருக்கிறார். இந்தத் தொகுதியில் நோட்டா பெற்ற வாக்குகள் 6,773.

நோட்டா வாக்குகள் மிகக் குறைவாக விழுந்திருக்கும் மாநிலம் தில்லி. மொத்தப் பதிவான வாக்குகளில் 0.63 சதவிகிதம் மட்டுமே நோட்டா. இதற்கு முக்கியக் காரணம், இங்கே புதிதாக வந்திருக்கும் ‘ஆம் ஆத்மி கட்சி’ என்றே சொல்லலாம். ‘காங்கிரசும் வேண்டாம், பி.ஜே.பி.யும் வேண்டாம்’ என்று கருதக் கூடியவர்களின் வோட்டுகள் ஆம் ஆத்மி கட்சிப் போட்டியில் இருந்திராவிட்டால், நோட்டாவுக்கே போயிருக்கக் கூடியவை. ஆனால் ஒரு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி களத்தில் வந்து விட்டதால், இங்கே நோட்டா அதிகம் பயன்படுத்தப்படவில்லை. தில்லி மாநிலத்தில் நோட்டாவை விட குறைவான வோட்டுகளைப் பெற்றது தே.மு.தி.க வேட்பாளர்கள்தான்.

நோட்டா மேலும் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் ஒரு சக்தியாக மாறவேண்டுமானால் இரு விஷயங்கள் முக்கியமானவை. நோட்டாவை மக்களிடையே பிரசாரம் செய்து தெரியப்படுத்த இயக்கங்களும் அமைப்புகளும் பிரசார பலமும் இருக்க வேண்டும். இரண்டாவதாக நோட்டாவுக்குப் போடும் வோட்டை, தேர்தல் ஆணையம் செல்லாத வோட்டாகக் கணக்கிடுவதை நிறுத்த வேண்டும். வேட்பாளர்களை நிராகரிப்பது உரிமை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து நோட்டா வந்த பின்னர், அந்த உரிமையைச் செல்லாத வோட்டாகக் கருதுவது தவறானது. வேட்பாளர்களில் அதிக வோட்டு பெறுபவர் வெற்றி பெறும் வேட்பாளராகச் சொல்லப்படும்போது, அவரைவிட அதிகம் வோட்டு நோட்டாவுக்கு விழுந்தால், அந்த வேட்பாளரும் நிராகரிக்கப்பட்டவராகவே கருதப்பட வேண்டுமே தவிர வெற்றி பெற்றவராகமாட்டார். இப்படிச் சில திருத்தங்கள் இருந்தால் மட்டுமே நோட்டாவின் அசல் பலம் பயன்படும். முதல் இரு இடம்பெறும் வேட்பாளர்களுக்கிடையே உள்ள வோட்டு வித்தியாசத்தை விட அதிகமாக நோட்டாவுக்கு விழும்போது, இன்னும் சரியான வேட்பாளர் களை நிறுத்தியாக வேண்டிய அவசியத்தை கட்சிகள் உணர்வார்கள்.

மக்கள் பொதுவாக எல்லா கட்சிகளும் கோளாறாக இருந்தால்கூட மொத்தமாக நிராகரிக்க விரும்புவதில்லை. இருப்பதில் ஒருவரைத் தேர்வு செய்வது அலுப்பாக இருந்தாலும், அதையே செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் புதிதாக ஒரு மாற்று முன்வைக்கப்பட்டால், உற்சாகமாக ஆதரிக்கவும் முன்வருகிறார்கள் என்பதையே தில்லியில் ஆம் அத்மி கட்சியின் வெற்றி காட்டுகிறது.

காங்கிரசுடனும் பி.ஜே.பி.யுடனும் மக்களுக்கு இருக்கும் அலுப்பு மட்டுமே ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு முழு காரணமல்ல. தமிழ்நாட்டிலும் தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளுடனும் அயர்வாக இருந்தாலும், புதிதாக வருகிற மாற்றுகள் சரியாகவும் நம்பிக்கைக்கு உகந்தனவாகவும் இல்லாதபோது பழைய கொள்ளிகளே மேல் என்ற மன நிலைக்கு வந்துவிடுகிறார்கள். ஆம் ஆத்மி கட்சி இன்னும் ஒரு தேர்தலில் பங்கேற்று, அங்கே காங்கிரசுடனோ, பி.ஜே.பி.யுடனோ கூட்டணி வைக்கும் நிலைக்குச் சென்றால், அதுவும் மக்களிடையே செல்வாக்கை இழந்துவிடும். மாற்று என்றால் முழுமையான மாற்றாகத் தோன்றினால் மட்டுமே மக்கள் ஆதரிப்பார்கள்.

தில்லியில் ஆம் ஆத்மி கட்சி செய்திருக்கும் சாதனைக்கான பல காரணங்களில் பிரதானமானது, ‘அதன் தலைமை முதல் வேட்பாளர்கள் வரை’ புதியவர்கள் என்பதாகும். ஏற்கெனவே இருக்கும் அரசியல் கட்சிகளில் ஊறித் திளைத்து இன்னொரு வாய்ப்புக்காக இங்கே வரும் சந்தர்ப்பவாதிகளான பழைய முகங்கள் இதில் இல்லை என்பது மக்களால் முக்கியமாகக் கவனிக்கப்படும் அம்சங்களில் ஒன்று.

ஆம் ஆத்மி கட்சி தில்லியை அடுத்து இதர மாநிலங்களிலோ, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலோ இதே போல மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்பது சந்தேகம்தான். ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களை உற்சாகப்படுத்தி நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய புதிய இளம் நேர்மையான தலைவர்கள் தேவை. ‘இந்திய அரசியல் மத்தியில் கூட்டணி இல்லாமல் முடியாது’ என்ற கட்டத்துக்கு எப்போதோ வந்துவிட்டது. அப்படியானால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆம் ஆத்மியாருடன் கூட்டு சேர்வது என்பது முக்கியமான பிரச்னை. யாருடனும் கூட்டு சேராமல் ஒவ்வொரு மாநிலத்திலும் முற்றாகத் தனியாகவும் புதிதாகவும் மாற்று அரசியல் அமைப்பைக் கட்டி எழுப்புவது என்பது ஒரு தேர்தல் காலத்துக்குள் முடியும் செயலே அல்ல.

எல்லாவற்றுக்கும் மேலாக ஆம் ஆத்மி கட்சியின் சமூக, பொருளாதார, உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகள், திட்டங்கள் என்ன என்று எதுவும் தெளிவாக இன்னும் மக்கள் முன்வைக்கப்படவில்லை. இடஒதுக்கீடு, மொழிக் கொள்கை, பாகிஸ்தான், சீனா, இலங்கை தொடர்பான உறவுகள், மற்றும் அமெரிக்கா சார்பான பொருளாதாரக் கொள்கையா, சோஷலிசமா, விவசாயக் கொள்கை, அணுசக்தி, நலத்திட்டங்கள், இலவச திட்டங்கள் இவற்றைப் பற்றியெல்லாம் தெளிவான, வெளிப்படையான நிலைகளை அறிவிக்காமல் அடுத்தகட்ட அரசியல் கட்சியாக ஆம் ஆத்மி வளரவே முடியாது. இளைஞர்களின் அதிருப்தி, கோபம், மக்களின் விரக்தி ஆகியவற்றுக்கு வடிகாலாக மட்டுமே இப்போதைக்கு தில்லியில் அது உருவாகியிருக்கிறது.

ஆம் ஆத்மி வளராவிட்டாலும், அதன் வருகை இதர கட்சிகளுக்கு அளித்திருக்கும் எச்சரிக்கையினால் இதரக் கட்சிகள் கொஞ்சமேனும் சுயவிமர்சனமும் திருத்தங்களும் செய்தால் கூட இந்திய அரசியலுக்கும் மக்களுக்கும் லாபம்தான். இந்தச் சட்டமன்றத் தேர்தல்களில் நடந்திருக்கும் இரு புதுமைகளும்- நோட்டா, ஆம் ஆத்மி கட்சி - சரியான திசை நோக்கிய ஆக்கபூர்வமான வரவுகள்தான். ஆனால் முழுமையான தீர்வுகள் அல்ல.

Friday, December 13, 2013

கோவையும் தமிழ்ச் சினிமாவும்

தமிழகத்தின் முதல்வராக இருந்த ஒருவர்... முதல்வராக இருக்கும் போதே, கோவை ராமநாதபுரத்தில் இருந்து நஞ்சுண்டாபுரம் வரை நடந்தே சென்றார் என்கிற செய்தியை உங்களால் நம்ப முடிகிறதா? தமிழகமே கொண்டாடிய... இன்றைக்கும் கொண்டாடுகிற அந்தத் தலைவர் அன்றைக்கு நடந்தது அரசியல் காரணங்களுக்காக அல்ல; வேறெதற்கு?
இந்த கேள்விக்கான விடைக்குப் போகும் முன், கோவையில் வளர்ந்த சினிமாத்துறை குறித்து கொஞ்சம் பார்ப்போம்...
கோவையை புறக்கணித்து விட்டு, தமிழ் திரைப்பட வரலாறை எப்போதுமே எழுத முடியாது. "டூபாண்ட்' என்னும் பிரெஞ்சுக்காரரிடம் வாங்கிய ஊமைத் திரைப்படத்தை, தமிழகத்தின் பல ஊர்களுக்கும் அறிமுகப்படுத்தியவர் சாமிக்கண்ணு வின்சென்ட். ஆங்காங்கே "டெண்ட்' அமைத்து "படம் காட்டிய ' அவர், நிரந்தரமாக அமைத்த திரையரங்கம்தான் "டிலைட்'.
இந்த திரையரங்கம் அமைந்த பின்னரே, கோவையில் பட்சிராஜா மற்றும் சென்ட்ரல் திரையரங்குகள் உருவாயின. 1952 தேர்தலுக்குப் பின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த முதல்வர்களில் ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், பன்னீர் செல்வம் ஆகியோரைத் தவிர மற்றவர்கள் திரைத்துறையில் இருந்து வந்தவர்கள்தான்.
அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜானகி ஆகிய நான்கு முதல்வர்களை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியதில் கோவை, புலியகுளத்தில் இருந்த பட்சிராஜா ஸ்டுடியோ மற்றும் சிங்காநல்லூரில் இருந்த சென்ட்ரல் ஸ்டுடியோ இரண்டுக்கும் பெரும் பங்குண்டு. 
எம்.ஜி.ஆர் - அஞ்சலிதேவி நடித்த "மர்மயோகி', சென்ட்ரல் ஸ்டுடியோவிலும், எம்.ஜி.ஆர் - பானுமதி நடித்த "மலைக்கள்ளன்', பட்சிராஜாவிலும் உருவானவை.
தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.ராஜகுமாரி, அண்ணா, ஏ.பி.நாகராஜன், எம்.ஆர்.ராதா, கண்ணதாசன், எம்.ஜி.ஆர்., சிவாஜி, கருணாநிதி உள்ளிட்டோர், கோவை மண்ணில் கால் வைத்த பின்னர்தான் மாபெரும் வெற்றியைப் பெற்றனர்.
இன்றைக்கு திரையுலகில் வெற்றி பெற்ற பாக்கியராஜ், சுந்தர்ராஜன், மணிவண்ணன், சுந்தர்.சி, பாலசேகரன், ஆர்.வி. உதயகுமார், கவுண்டமணி உள்ளிட்டோர் கோவை மண்ணுக்குச் சொந்தக்காரர்களே. இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக, தமிழ் திரைத்துறையில் மிகவும் வெற்றி பெற்ற ஒரு தயாரிப்பாளராக வலம் வந்தவர்தான் சாண்டோ சின்னப்ப தேவர்.
"பூஜையன்றே அனைத்து கலைஞர்களுக்கும் முழு சம்பளம், சொன்ன தேதியில் ரீலீஸ்' இவ்விரண்டு தாரக மந்திரங்களும் திரையுலகில் இவருக்கு மிகப்பெரிய மரியா தையைத் தேடித் தந்தன. 
எம்.ஜி.ஆரை வைத்து 12 படங்கள் தயாரித்த இவர், எம்.ஜி.ஆருக்கு உற்ற நண்பராகவும் இருந்தார். தீவிர முருக பக்தரான இவர் 1978ல் மறைந்தார்; அப்போது முதல்வராக இருந்தவர் எம்.ஜி.ஆர். ராமநாதபுரம் முதல் நஞ்சுண்டாபுரம் வரை நடந்த முதல்வர் யார் என்று இப்போது தெரிகிறதா?.

சிங்கங்கள் வாழ்ந்த சிங்கை!

ஒரு காலத்திலே சிங்காநல்லூரிலும், ராமநாதபுரத்திலுமாக இணைந்து சுற்றிய "இருவர்'தான், பிற்காலத்தில் இந்த தமிழ்நாட்டையே அடுத்தடுத்து ஆண்டார்கள். அந்த இருவரில் ஒருவரான கருணாநிதி, தன்னுடைய "நெஞ்சுக்கு நீதி' முதல் பாகத்தில் இப்படி எழுதுகிறார்...

"கோவை சிங்காநல்லூரில் பத்து ரூபாய்க்கு ஒரு வீடு பிடித்துக் கொண்டு நானும் என் மனைவியும் தங்கியிருந்தோம். அந்த குருவிக் கூட்டுக்குள்ளே உட்கார்ந்து கொண்டு, நான் எழுதிக் குவித்தவை ஏராளம்,''
அதே கருணாநிதி, கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, கோவை பொதுக்கூட்டத்தில் பேசியது: "கோவை நகரம், நான் அரசியலுக்காக வந்து போகும் இடமல்ல; என் வாழ்வில் இடம் பெற்ற முக்கியமான இடம். கோவை என்றால் கொள்கை வீரர்களின் கோட்டை; என்னைத் தாலாட்டிய தொட்டில்; நான் விளையாடிய தாழ்வாரம்; என்னைப் படிக்க வைத்த, கலை உலகுக்கு அறிமுகம் செய்த மண்; இதே ஊரில்தான், 1945க்கு முன் நானும், எம்.ஜி.ஆரும் ஒரே வீட்டில் குடியிருந்தோம். பிளேக் நோய் பரவி வந்த நிலையில், சிங்காநல்லூரில் குடியிருந்த நான், ராமநாதபுரத்தில் இருந்த அவர் வீட்டுக்கு குடிமாறினேன்,''.
கோவையில் தானும், எம்.ஜி.ஆரும் வாழ்ந்த நாட்களை கருணாநிதி நினைவு கூரும்போதெல்லாம், அரசியல் எதிர்பார்ப்புகளைத் தாண்டிய ஒரு நெகிழ்வையும், ஏக்கத்தையும் அவரிடம் பார்க்க முடியும். தனது முதல் மனைவி பத்மாவதியுடன் கருணாநிதி, சிங்காநல்லூரில் வசித்த போது, ராமநாதபுரத்தில் குடியிருந்தார் மக்கள் திலகம்.

செம்மொழி மாநாடு..சில நினைவுகள்

வெறும் தொழில் நகரமாக அறியப்பட்ட கோவை நகரம், கடந்த ஆண்டில் நடந்த செம்மொழி மாநாட்டால் சர்வதேசத்திலுள்ள தமிழர்களும் அறிந்த நகரமானது; உலகத்தமிழ் மாநாடு, கோவையில் நடத்தப்படும் என்று கடந்த 2009ல் அறிவித்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. அவசர கதியில் அதனை நடத்த ஒப்புதல் தரவில்லை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.

அதனால், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவதாக மாற்றி வாசித்தார் கருணாநிதி. கடந்த ஆண்டு, ஜூன் 23லிருந்து 27 வரை ஐந்து நாட்களுக்கு அமர்க்களமாக நடந்தது இந்த மாநாடு. ஆய்வரங்கம், எழிலார் பவனி, தமிழர் மாண்பை விளக்கும் கண்காட்சி என செம்மொழி மாநாடு, கோவை மக்களுக்குத் தந்த இனிய அனுபவங்களை என்றுமே மறக்க முடியாது.
அதையும்விட மகிழ்வூட்டிய மற்றொரு செய்தி, இந்த மாநாட்டையொட்டி கோவைக்குக் கிடைத்த மேம்பாட்டுப் பணிகள். கோவையிலும், சுற்று வட்டாரப் பகுதிகளிலும் பல நூறு கோடி ரூபாய்க்கு சாலைகள், நடைபாதைகள், பூங்காக்கள் என ஏராளமான வளர்ச்சிப்பணிகள் நடந்தன; ரயில் நிலையமும், விமான நிலையமும் புதுக்கோலம் பூண்டன.
எட்டுத்திக்கிலும் ஏ.ஆர்.ரஹ்மானின் "செம்மொழியான தமிழ்மொழியாம்' எதிரொலித்தது. பல லட்சம் பேர் குவிந்தனர்; கோவையே குதூகலித்தது. சிறையுள்ள இடத்திலே செம்மொழிப் பூங்கா, காந்திபுரத்திலே பல அடுக்கு மேம்பாலம் என பல அறிவிப்புகளும் வெளியாகின; எதுவுமே நடக்கவில்லை. தமிழ் வளர்ச்சிக்காக அறிவித்த திட்டங்களும் காற்றிலே கரைந்து போயின.
ஆட்சி மாறியதால் காட்சி மாறியது; செம்மொழி மாநாட்டால் தமிழ் வளர்ந்ததோ இல்லையோ, கொஞ்சம் வளர்ந்தது கோவை; அவசர கதியில் நடந்த வேலைகளில் பல கோடி ரூபாய் "துட்டு' பார்த்து, சில அரசியல்வாதிகளும், பல அதிகாரிகளும் தங்களை வளர்த்துக் கொண்டார்கள். மாநாடு நடந்த கோவையில் கூட, ஒரு தொகுதியையும் தி.மு.க., கைப்பற்றாதது இதன் வெளிப்பாடுதான்.

சிறுவாணிக்கு இப்போ வயசு 80

வாழ்ந்தனர். அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில், மோசமான தண்ணீர் வசதியுடைய பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது கோவை. இப்படி, தண்ணீருக்காக கஷ்டப்பட்ட கோவைக்கு, சிறுவாணித் தண்ணீர், குடிநீராக கொண்டுவரப்பட்டது, மிகப்பெரிய வரப்பிரசாதம்.
உலகளவில் இரண்டாவது அதிக சுவை கொண்ட தண்ணீர் என்று சிறுவாணிக்கு ஒரு பெருமையுண்டு. சிறுவாணியின் முதன்மையான நீராதாரம், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள முத்திகுளம் அருவி.
குஞ்சரமலை, எலிவால்முடி ஆகிவற்றுக்கு இடையில், 60 அடி நீளம், 45 அடி அகலம், 22 ஆடி ஆழத்துடன், முக்கோண வடிவத்திலான இடத்தில் முத்திகுளம் அருவி விழுந்து கொண்டிருந்தது. மேலும், மழைநீரை சேமிக்கும் வாய்ப்பும் இருந்தது. கோவைக்கு குடிநீர் கொண்டு வருவதற்கான சூழல் இருந்ததால், 1889ல் முத்திகுளம் அருவியில் குடிநீர் எடுப்பதற்கு ஆய்வு துவங்கியது.
இடையில், நொய்யல் படுகை நீர்த்திட்டம், சித்திரைச்சாவடி வாய்க்கால் திட்டம், ஆர்ட்டீசியன் ஊற்று, சங்கனூர் பள்ளம், சிங்காநல்லூர் குளம் நீர் என்று பல்வேறு நீர்த்திட்டங்கள் போடப்பட்டன. எதுவும் கதைக்கு ஆகவில்லை; கனமழை, நிலச்சரிவு, குகை பாதை என்று பல தடைகளை கடந்து சிறுவாணி நீர்த்திட்டம் வந்தது.
கடந்த 1927ல் 41 லட்ச ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்ட பணிகள், 1931ல் முடிவடைந்தன. ஆனால், பணிகள் நிறைவடைவதற்கு முன், 1929லேயே கோவைக்கு சிறுவாணி நீர் கிடைத்துவிட்டது. கடல் மட்டத்தில் இருந்து 863 அடி உயரத்தில் இருக்கும் சிறுவாணி அணையில், நீர்தேக்கி வைக்கும் அதிகபட்ச உயரம் 50.65 அடியாகும்.
அதனால், புவியீர்ப்பு விசையிலேயே தண்ணீர் கொண்டு வருவது, இத்திட்டத்தின் இன்னுமோர் சிறப்பாகும். மரியாதையான பேச்சு, சிறந்த விருந்தோம்பல் போன்ற நற்பண்புகளை கொண்ட கோவை மக்களுக்கு, இயற்கை அளித்த நன்கொடை சிறுவாணி. ஊரைக்கொண்டாடும் இந்த நாளில், உயிருக்கு நீரூற்றும் சிறுவாணி அன்னையை நோக்கி சிரம் தாழ்த்தி கரம் குவிப்போம்.


நகரின் தென்பகுதியில் நொய்யல் ஓடினாலும், ஒரு காலத்தில் கிணற்று நீரை நம்பித்தான் கோவை மக்கள் 

இன்று வரை ஆட்சியாளர்கள்


கொங்கு மண்டலத்தின் தலைமைப்பீடமாக அறியப்படும் கோவைக்கு, 1799ம் ஆண்டில் முதல் கலெக்டராக நியமிக்கப்பட்டவர் வில்லியம் மெக்லியாட். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியில் மேஜர் ஆக பணியாற்றிய இவர் தான், கோவைக்கும், மலபார் பிராந்தியத்துக்கும் கலெக்டராக பணியாற்றினார்.
மைசூர்ப் போரில் திப்பு சுல்தானை வென்ற பிரிட்டிஷ்காரர்கள், அவரது ஆளுகையின் கீழ் இருந்த பகுதிகள் அனைத்தையும், மைசூரின் முன்னாள் மன்னரான உடையாரிடம் ஒப்படைத்தனர். ராஜ்யத்தை மீட்டுக் கொடுத்த கம்பெனியாருக்கு, கோவை, மலபார் உள்ளிட்ட பகுதிகளை சன்மானமாக வழங்கினார், மைசூர் மன்னர்.
அப்படி வழங்கப்பட்ட பகுதியில், நேரடியாக ஆட்சி செய்வதிலும், வரி வசூலிப்பதிலும் பிரச்னைகள் இருந்தன. எனவே, தங்களது ராணுவத்தில் மேஜராக பணியாற்றிய மெக்லியாடை கலெக்டராக அனுப்பி வைத்தனர், கிழக்கிந்திய கம்பெனியினர்.
அவரது நிர்வாகம், வரி வசூலை தீவிரப்படுத்த மேற்கொண்ட செயல்பாடுகள், விவசாயிகள் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான நடவடிக்கை ஆகியவற்றில் தவறுகள் நிறைய இருந்ததாக, அதுபற்றி பிற்காலத்தில் ஆய்வு செய்த அதிகாரிகளே குறிப்பிட்டுள்ளனர்.
பரப்பளவு அதிகமாக இருந்தபடியால், 1799ம் ஆண்டில் வருவாய் நிர்வாகத்துக்கு ஏற்ப, இரு பகுதிகளாக கோவை பிரிக்கப்பட்டது. இந்த இரு பகுதிகளும், 1804ல் ஒரே கலெக்டரின் ஆளுகையின் கீழ் இருந்தன. அப்போது கோவையின் கலெக்டராக பதவி வகித்தவர், ஹென்றி சலிவன் கிரீம் என்ற எச்.எஸ்.கிரீம்; அவர், கோவையில் பதவி வகித்தது 15 மாதங்கள் மட்டுமே.
மெக்லியாட், கிரீம் இருவருக்கும் இடைப்பட்ட காலத்தில், காக்பர்ன், ஹெப்பர்ன் ஆகியோர், சிறிது காலம் (1801ம் ஆண்டு) கலெக்டராக பொறுப்பு வகித்துள்ளனர். 1799ல் சிறிது காலம் ஹர்டிஸ் என்பவரும் கலெக்டராக பணியாற்றியுள்ளார்.
மலபார் பிராந்தியத்தில் பழசி ராஜா உடன் பிரிட்டிஷார் மோதிக்கொண்ட காலத்தில், கலெக்டராக இருந்த மெக்லியாட் அங்கு சென்றிருக்கலாம், அப்போது மற்றவர்கள் கலெக்டராக பொறுப்பு வகித்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த 1990ல் கோவையில் துணை ஆட்சியராக பயிற்சி பெற்ற ராஜேந்திரன் என்பவர், கோவை வனக்கல்லூரி, வேளாண் பல்கலை என பல இடங்களிலும் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு, கோவை மாவட்டத்தில் கலெக்டர்களாக இருந்தவர்களின் பட்டியலைத் தயாரித்தார். அவரது பட்டியலின்படி கணக்கிட்டால், தற்போதுள்ள கருணாகரன், இந்த மாவட்டத்தின் 174வது கலெக்டர்

சிகிச்சையில் "செஞ்சுரி' அடித்த சி.எம்.சி.


எலும்புக்கு, வயிறுக்கு, கண்ணுக்கு, மனநலத்துக்கு, மகப்பேறுக்கு, இயற்கை வைத்தியத்துக்கு, ஆயுர்வேதத்துக்கு என உறுப்பு ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக தனியார்களால் நடத்தப்படும் பிரமாண்ட மருத்துவமனைகளால், கோவை நகரில் மருத்துவ சுற்றுலா (மெடிக்கல் டூரிசம்) மாபெரும் தொழிலாக வளர்ந்து வருகிறது.
ஆனால், நூறாண்டுக்கு முன்பே, கொங்கு நாட்டு மக்கள் எல்லோருக்கும் இலவச சிகிச்சையை வழங்கி, ஏழைகளின் இதயத்தில் இடம் பிடித்த ஒரே மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையான சி.எம்.சி.தான். ராமநாதபுரம் - நஞ்சுண்டாபுரம் சாலையில், சிறிய கட்டடத்தில் ஆரம்ப சுகாதார மையமாக துவக்கப்பட்டது இந்த மருத்துவமனை.
1909 ஜூலை 14லிருந்துதான், தற்போதுள்ள இடத்தில் மாவட்ட முதன்மை மருத்துவமனையாக செயல்படத் துவங்கியது. இப்போது 20 ஏக்கர் நிலப்பரப்பில் 68 கட்டடங்களில், 92 வார்டுகள், இந்த மருத்துவமனையில் செயல்படுகின்றன; மொத்தம் 1,500 பேர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2009ல் நூற்றாண்டு கண்டது இந்த மருத்துவமனை; நிர்வாக அலுவலகம் அமைந்துள்ள கட்டடம், புராதனச் சின்னமாக அறிவிக்கப்பட்டது அப்போதுதான். திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய அண்டை மாவட்டங்களிலிருந்தும், தண்ணீர் தர மறுத்து சண்டை போடும் கேரள மாநிலத்தில் இருந்தும் தினமும் இங்கே வந்து செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை மட்டும், கிட்டத்தட்ட எட்டாயிரம்.

அரசு கல்லூரியின் ஆரம்பம்!


கோவை அரசு கலைக் கல்லூரி, 1852ல் சாதாரண பள்ளியாக துவங்கப்பட்டது. அப்போது அதன் பெயர் "பிரெஞ்சு ஸ்கூல்'. கோவையில் ஆங்கிலம் கற்பிக்கும் நோக்கத்துடன் துவக்கப்பட்ட இப்பள்ளியை, அன்றைய மாவட்ட கலெக்டர் தாமஸ், "ஆங்கிலோ வெர்னாகுலர் பள்ளி' என பெயர் மாற்றினார். பின்னர் தாமஸ் ஆங்கிலோ இந்திய பள்ளி என அறியப்பட்டது.
1867ல் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பின், முதல் முறையாக எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை இப்பள்ளியில்தான் கோவை மாணவர்கள் எழுதினர். அதன் பின் ஆண்களுக்கான இடைநிலைக் கல்லூரியாக மாறியது. பின்னர் உயர்நிலைப் பள்ளி வகுப்புகள் கைவிடப்பட்டன. முதலில் ராஜவீதியிலும், பின்னர் மணிக்கூண்டு அருகேயும் செயல்பட்ட இக்கல்லூரி, அரசு கல்லூரியாக ஏற்கப்பட்டு, 1931ல் ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு மாற்றப்பட்டது.
முதலில் இன்டர் மீடியேட் வகுப்புகள் மட்டுமே இக்கல்லூரியில் நடத்தப்பட்டன. 1946ல் கோவையில் முதல் பட்டப் படிப்பு இக்கல்லூரியில்தான் துவங்கியது.

பளிங்கினால் ஒரு ஆலயம்!

கோவை ஆர்.எஸ்.புரம் பொன்னுரங்கம் ரோட்டில் அழகிய சமண ஆலயம் உள்ளது. கோவையில் உள்ள சுவேதாம்பர சமண சங்கத்தினரால், சமண சமயத்தின் 23 வது தீர்த்தங்கரரான பார்சுவநாதருக்காக 1981ம் ஆண்டில் இது நிறுவப்பட்டது. நாளடைவில் விரிவுபடுத்தப்பட்டு, இப்போது பளிங்கினால் ஆன மாளிகையாக பளிச்சிடுகிறது.
இங்கு வழிபாட்டிற்கு வைக்கப்பட்டுள்ள பார்சுவநாதர், மகாவீரர், சாந்தி நாதர், சுமதி நாதர், ஆதி நாதர் முதலிய சமண தீர்த்தங்கரர்களின் உருவச்சிலைகள் ஜெய்ப்பூரிலிருந்து கொண்டு வரப்பட்டவையாகும். இவை பளிங்கினால் ஆனவை . கட்டடத்திற்கு வேண்டிய இதர பளிங்குக் கற்களும் ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டவையாகும்.
ஆலயத் தூண்களுக்காக, அரத்தினால் அறுக்கக்கூடிய அளவிற்கு மென்மையான கற்கள், காந்தி பிறந்த மண்ணான போர்பந்தரிலிருந்து கொண்டு வரப்பட்டன. 
சமணர் கட்டட சிற்பக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த ஆலயம், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சமணர் ஆலயத்தை விட சிறப்பு மிக்கதாய் கருதப்படுகிறது.

நெடிய வரலாறுடைய நீதிமன்றம்


கோவை நீதிமன்ற மன்ற வரலாறு 135 ஆண்டு பழமையைக் கொண்டது. இப்போதுள்ள, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பழமையைப் பறை சாற்றிய படி, கம்பீரமாக நிற்கும் செந்நிற கட்டடம், ஆங்கிலேயேரின் ஆட்சியில் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தின் கீழ் தளத்தில் வங்கியும், கோர்ட் அலுவலகமும் செயல்படுகிறது. மேல் தளத்தில் மகளிர் கோர்ட், உரிமையியல் நீதிமன்றம் மற்றும் இரண்டு சார்பு நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.
இந்த நீதிமன்றம் கட்டிய பிறகு குதிரை வண்டி கோர்ட் வளாகத்தில் சில கோர்ட்கள் செயல்பட்டன. இக்கட்டடத்தின் வரலாறும் 100 ஆண்டுகள் தாண்டியது தான். அரிய பல ஆயிரம் தீர்ப்புகளைக் கூறியதற்கான நினைவுச் சின்னமாக காட்சி அளிக்காமல் இன்று சிதைந்து, புதர் மண்டிக்கிடக்கிறது குதிரை வண்டி கோர்ட் கட்டடம். இந்த வளாகத்தில் 30 நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. மாவட்ட நீதிபதியாக உள்ளார் சொக்கலிங்கம்.

நாடு போற்றிய ஜி.டி.நாயுடு



கோயம்புத்தூர்க்காரர்கள் என்றால், வெளிநாட்டு தொழிலதிபர்கள் கொஞ்சம் பொறாமையாய்ப் பார்ப்பார்கள். அதற்குக் காரணம், இங்குள்ளோரின் தொழில் நுட்ப அறிவு. முதலாம் ஆண்டில், இங்கே யாராவது கண்காட்சிக்கு ஓர் இயந்திரத்தைக்கொண்டு வந்தால், அடுத்த ஆண்டிலே அதை விட சிறப்பான இயந்திரத்தை, குறைவான விலைக்கு தரமாக இங்கே செய்து விடுவார்கள்.
இன்றுள்ள தொழில் நுட்ப வேட்கைக்கு, அன்றே நாற்று நட்டவர் ஜி.டி.நாயுடு. நாடறிந்த விஞ்ஞானியான ஜி.டி.நாயுடுவின் பெயரிலுள்ள அருங்காட்சியகம், நாளைய தலைமுறையையும் வியக்க வைக்கும் விஞ்ஞானக் கூடமாக விளங்குகிறது. தொழில் நுட்பம் வளராத காலத்தில் ஜி.டி.,நாயுடு கண்டுபிடித்த கருவிகள், உபகரணங்கள் பிரமிக்கதக்கவை.
கோவை-அவிநாசி சாலையில் பிரெசிடென்ட் ஹால் வளாகத்தில் ஜி.டி.நாயுடு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. ஒரு நூற்றாண்டு கால தொழில்நுட்ப வரலாறுகள், இங்கே காட்சிக்கு உள்ளன. சின்ன திருப்பு உளி போன்ற கைக்கருவிகள் தொடங்கி, நவீனகால தொழில்நுட்பங்களான வானொலி, தொலைக்காட்சி வரை அதன் காலவரிசைப்படி அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
பழைய கால வால்வு ரேடியோ, படிப்படியாக டிரான்சிஸ்டர், டேப்-ரிக்கார்டர் என்று தொழில் நுட்பம் வளர்ந்த காலத்தை நம் கண் முன்னே காட்டுகிறது இந்த காட்சியகம். சிலவற்றைப் பார்த்தால் இதுதானே என்று அலட்சியமாக தோன்றும்; ஆனால், ஜி.டி.,நாயுடு அவற்றை சேகரித்த காலத்தை கவனத்தில் கொள்ளும்போது அதன் உண்மையான மகத்துவம் புரியும்.
ரேடியோ, ரேடியோவுடன் இணைந்த ரெக்கார்ட் பிளேயர், உலகின் முதல் டயர் ரேடியோ (வானொலி நிலையத்தின் பெயர் தமிழில் இருக்கும்), ஸ்பூன் டைப் டேப் ரிக்கார்டர், ஆட்டோமேடிக் போனோகிராப் மெஷின் (காசு போட்டால் பாடும் கருவி), 1971ல் தயாரித்த உலகின் மிகச்சிறிய கால்குலேட்டர் என்று அங்குள்ள ஒவ்வொரு பொருளும் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்.
லங்காஷயர் எனும் ஆங்கிலேயர் பயன்படுத்திய காரை, ஜி.டி.நாயுடு வாங்கினார். அதுதான், கோவையில் முதல் முதலாக பதிவான காராகும்; அதன் பதிவு எண்: சி03 (எவ்ளோ ஈஸியா ஞாபகம் வச்சுக்கலாம்!). ஜி.டி.நாயுடுவின் தொழிற்சாலையில் தயாரான இந்தியாவின் முதல் மோட்டாரையும் அங்கே பார்க்க முடியும்.
எந்த வசதிகளும் இல்லாத சாதாரண கிராமத்தில் பிறந்து, மூளையை மட்டுமே மூலதனமாக கொண்டு முன்னேறி, தொழிற்புரட்சியை எதிர்கொண்டு சாதனைகள் படைத்த ஒரு மாபெரும் மனிதரின் சாதனைகளுக்கு சாட்சியாக திகழ்கிறது இந்த அருட்காட்சியகம்.

கோவில்களால் அமைந்த கோவன்புத்தூர்!

அறிவியல் தொழில் நுட்பத்துக்குப் பெயர் பெற்ற கோயம்புத்தூர், ஆன்மிக பூமியாகவும் திகழ்கிறது. இங்குள்ள கோவில்களே இதற்கு சாட்சி...
காவல்தெய்வம்: கோவையின் காவல் தெய்வமாகக் கருதப்படும் கோனியம்மன் கோவில் திருவிழா, இந்த நகரின் தலை சிறந்த விழாவாகும். கோவன்புத்தூரை ஆட்சி செய்த கோவனுக்கு குலதெய்வம் கோனியம்மன் என்பது வரலாறு. இக்கோவில் தோற்றுவிக்கப்பட்டு, 900 ஆண்டுகள் இருக்கும் என்று சொல்கின்றன சில சரித்திரச் சான்றுகள்.
கோட்டை ஈஸ்வரன் கோவில்: கோவையில் உள்ள இந்து கோவில்களில் மிகப் பழமையானதாக கருதப்படுவது கோட்டை ஈஸ்வரன் கோவில் ஆகும். கரிகாலசோழதேவன் என்ற மன்னனால் கி.பி. 9ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோவில் இருந்த பகுதியில் பெரிய கோட்டை ஒன்று இருந்துள்ளது;
கி.பி. 1809ல் கோவை மாவட்டத்தின் முதல் ஆட்சியரான காரே என்ற ஆங்கிலேயர், இக்கோவிலுக்கு அருகில் இருந்த இடிந்த கோட்டையை அப்புறப்படுத்தி, கோவிலை செம்மைபடுத்தி குட முழுக்கு விழா நடக்க உதவியதாக ஒரு தகவல் கூறுகிறது. அக்காலத்தில், சங்கீஸ்வரா என்று அழைக்கப்பட்ட இக்கோவில் பிற்காலத்தில் மருவி சங்கமேஸ்வரா என்று அழைக்கப்பட்டது.
கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் கரிவரத பெருமாள் கோவில், கோனியம்மன் கோவில் ஆகிய மூன்றும் அமைந்த நகர் பகுதியே ஆதியில் உருவான கோவன் புத்தூர் கிராமம் எனப்படுகிறது.
ராஜவீதி முடியும் இடத்தில் மேற்கு பகுதியில் பெருமாள் கோவிலும், அதை அடுத்து யோக ஆஞ்சநேயர் கோவிலும் உள்ளன. யோக ஆஞ்சநேயர் கோவில் முன்பாக ராகவேந்திரா சுவாமியின் நினைவு மண்டபம் உள்ளது. கோவையின் மற்றொரு பிரபல கோவிலான தண்டு மாரியம்மன் கோவில், 200 ஆண்டுகளுக்கு முன் உருவானது.
மருதமலை சுப்ரமணியர் கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், பூளமேடு கரிவரதராஜ பெருமாள் கோவில், ரேணுகா தேவி கோவில், ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் சிலையைக்கொண்ட புலியகுளம் முந்தி விநாயகர் கோவில் என கோவை நகரில் கோவிலுக்கும் பஞ்சமில்லை; ஆன்மிக நிகழ்வுகளுக்கும் குறைவில்லை.

வியப்பை விதைக்கும் வேளாண் பல்கலை!

கோவையின் சிறப்புகளைப் பட்டியல் போட்டால், முதல் வரிசையில் இடம் பிடிப்பது, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம். தமிழகத்தின் ஒரே வேளாண் பல்கலை, இங்கே இருப்பது கோவைக்கு இன்னுமோர் பெருமை. சிந்தையை ஈர்க்கும் சிவப்புக் கட்டடம், இச்சை கொள்ள வைக்கும் பச்சைப் பசுமை என இதன் புறத்தோற்றமே, நம்மை புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும்.
உட்புறத்திலே, வேளாண் துறையை அடுத்த கட்டத்திக்கு எடுத்துச் செல்வதற்கான ஆயிரமாயிரம் ஆராய்ச்சிகள்...தொடர்கின்றன. இத்தகைய பெருமைக்குரிய வேளாண் பல்கலை, நடப்பட்டு, உரமிடப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்ட வரலாறு இது.

இந்தியாவை பலநூறு ஆண்டுகள் தன் பிடிக்குள் வைத்திருந்த ஆங்கிலேயர்கள், நமது நாட்டை வளங்கொழிக்கும் விவசாய பூமி என்பதை உணர்ந்தனர். 
வேளாண் துறையில் ஆராய்ச்சிகளைச் செய்வதற்கு ஓர் ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்க சென்னை மாகாண கவர்னர் சர்.ஆர்தர் லாலி முடிவு செய்தார்.
ஆர்தர் லாலியின் முயற்சியால் வேளாண் வளர்ச்சி குறித்த நுணுக்கங்களை கற்பிக்கும் வகையில், 1896ல் சென்னை சைதாப்பேட்டையில் "மெட்ராஸ் வேளாண் கல்லூரி' நிறுவப்பட்டது. அவர் கோவைக்கு வந்தபோது, கோவையின் தட்ப வெப்பநிலை, இடவசதி, விவசாயிகளின் ஈடுபாடு உள்ளிட்ட பலவிதமான சாதக அம்சங்களைப் பற்றி அறிந்தார்.
மருதமலை சாலையிலுள்ள சிறிய பரப்பில் வேளாண் கல்வி நிலையத்தை உருவாக்க அவர் முடிவு செய்தார். அவரது உத்தரவிற்கிணங்க, 1906ல் ஜி.எஸ்.டி.,ஹேரிஸ் எனும் கட்டிடக்கலைஞரால், ச்ணஞ்டூணிண்ச்ணூச்ஞிஞுணடிஞி வடிவத்தில் வேளாண் பல்கலைக் கட்டட வடிவம் உருவாக்கப்பட்டது. கட்டுமானப் பணி, அதற்கு அடுத்த ஆண்டில் துவங்கி, 1909-ல் நிறைவுற்றது.
இக்கட்டிடம் ஆங்கிலேயர்களின் கட்டிட வடிவமைப்பை சார்ந்தது. அடுத்தடுத்துள்ள இரு கட்டிடங்களும் 54 அடி இடைவெளியில், "லாபி' மூலம் இணைக்கப்பட்டன. நான்கு மூலைகளிலும் கட்டைகளும், கற்களும் கொண்டு பலம் வாய்ந்த கட்டடமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை 1909 ஜூலை 14 அன்று ஆர்தர் லாலி திறந்து வைத்தார்.
இதற்கு முதலில், "மெட்ராஸ் அக்ரிகல்ச்சர் காலேஜ்' என்றுதான் பெயர் சூட்டப்பட்டது. சரித்திரச் சிறப்பு வாய்ந்த இந்த கட்டடத்தைக் கட்டிய லாலியின் நினைவாக, அந்த சாலைக்கு ஆர்தர் லாலியின் பெயர் வைக்கப்பட்டது. பேச்சுவழக்கில் "லாலி ரோடு' என்று கோவை மக்களால் அழைக்கப்படுகிறது.
இரண்டு வருட சான்றிதழ் படிப்புடன் துவங்கியது இக்கல்லூரி. சுதந்திரத்துக்கு முந்தைய ஆண்டு வரையிலும், தென்னிந்தியாவின் ஒரேயொரு வேளாண் ஆராய்ச்சிக்கழகமாக கோவையிலிருந்த "மெட்ராஸ் வேளாண் கல்லூரி' விளங்கியது. அதே ஆண்டில்தான், இளங்கலை பட்டப்படிப்பு துவக்கப்பட்டது; 1958 ல் முதுகலை படிப்பும் துவங்கியது.
கோவையைத் தொடர்ந்து மதுரையிலும் 1965 ல் வேளாண் கல்லூரி துவங்கப்பட்டது. அந்தக் கல்லூரியும், மெட்ராஸ் வேளாண் கல்லூரியும் கடந்த 1970ல்"மெட்ராஸ் வேளாண் கல்லூரி'கீழ் இயங்க துவங்கின. இவ்விரண்டு வேளாண் கல்லூரிகளையும் உள்ளடக்கி, 1971ல் தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம் என அந்தஸ்து வழங்கப்பட்டது.
குறைந்த பரப்பில் துவங்கப்பட்ட கோவை வேளாண் கல்லூரி, தற்போது ஆயிரம் ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இதில் 13 இளநிலை பட்டப்படிப்புகள், 25 விதமான முதுகலை மற்றும் பி.எச்.டி., படிப்புகளை ஆண்டுக்கு 3,693 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இதன் இப்போதைய துணைவேந்தர் முருகேச பூபதி.
விவசாயிகளிடம் மாற்று சிந்தனையை உருவாக்கவும், வேளாண் வளர்ச்சிக்கு உரமூட்டவும் எழில்மிகு கட்டடத்தை எழுப்பிய ஆர்தர் லாலி, இந்த நாளிலே நிச்சயமாக நினைவு கூரப்பட வேண்டியவர். 
நூறாண்டுகளைக் கடந்தும், அழகுடனும், கம்பீரத்துடனும் நிற்கும் அந்த கட்டடம், ஆர்தர் லாலியின் தொலைநோக்கை இன்னும் பல தலைமுறைகளுக்கு எடுத்துச்சொல்லும்.

கோவையின் தேவாலயங்கள்...!


ஆங்கிலேயர் காலத்தில் எழுப்பப்பட்ட பல தேவாலயங்கள், அக்காலத்தின் கட்டடக்கலையைப் பறை சாற்றுவதாகவுள்ளன. கத்தோலிக்க சபையின், பேராலயமாகக் கருதப்படும் (கதீட்ரல்) புனித மிக்கேல் தேவாலயத்தின் பங்குச்சேவை, கி.பி.1850 ல் தொடங்கியது; ஆனால், தேவாலயம், 1867 ல் கட்டப்பட்டது. கோவை நகரின் எழில் மிக்க பண்பாட்டு சின்னங்களில் இதுவும் ஒன்று.
நஞ்சப்பா சாலையிலுள்ள கிறிஸ்து அரசர் ஆலயம், 1935 ல் தோற்றுவிக்கப்பட்டது; காந்திபுரம், புனித பாத்திமா அன்னை தேவாலயம், தடாகம் ரோடு புனித அருளானந்தர் ஆலயம், சவேரியார் பாளையம் பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், புலியகுளத்தில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம், கோவைப்புதூர் குழந்தை யேசு ஆலயம் ஆகியவை கத்தோலிக்க ஆலயங்களில் குறிப்பிடத்தக்கவை.
தென்னிந்திய திருச்சபையினருக்கான (சி.எஸ்.ஐ.) ஆலயங்களில் சிறப்பு மிக்கது, இம்மானுவேல் தேவாலயம். இவ்வாலயம் கி.பி. 1831 ல் கட்டப்பட்டது. 1880 ல் இதன் கட்டடப்பகுதி விரிவு படுத்தப்பட்டது. இந்த ஆலயத்தின் வளாகத்தில், ஆங்கிலேயர்கள் பலரின் கல்லறைகள் உள்ளன. பந்தயச்சாலையிலுள்ள அனைத்து ஆன்மாக்கள் ஆலயம், 1872ல் கட்டப்பட்டது.
ஆங்கிலேயரால் கட்டப்பட்ட அதே பாரம்பரிய அழகுடன் உள்ள இந்த ஆலயத்தில், இன்றைக்கும் ஆங்கில மொழியில் ஆராதனை நடக்கிறது. திருச்சி சாலையிலுள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயம் 1910 ல் கட்டப்பட்டது.

சிறையல்ல... கோவையின் நுரையீரல்!


ஒரு சிறையால் ஊருக்கே நன்மை கிடைக்கிறது என்றால், அது எத்தனை பெரிய சிறப்பு?. அந்த சிறப்பை உடைய சிறை, கோவை மத்திய சிறைதான். கோவையில் வலம் வரும் பல லட்சம் வாகனங்கள் கக்கும் கரியமில வாயுவை, பிராணவாயுவாக மாற்றும் பல ஆயிரம் மரங்களைக் கொண்டிருப்பதுதான் இந்த சிறையின் சிறப்பு.
சாலை விரிவாக்கம், கட்டுமானப் பணிகளுக்காக ஏராளமான மரங்கள்வெட்டி வீழ்த்தப்பட்ட இந்த நகரின் பசுமைப்பரப்பாக இருப்பது, இந்த சிறை வளாகம் மட்டுமே. தமிழகத்தில் அமைக்கப்பட்ட மிகப்பழமையான சிறைகளில் இதுவும் ஒன்று. 1872ல் இச்சிறைச்சாலை 167.76 ஏக்கர் பரபரப்பளவில் கட்டப்பட்டது. இச்சிறையில் ஒரே நேரத்தில் 2,208 பேரை அடைக்கும் இடவசதி உள்ளது.
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் பலர் இச்சிறையில், கடும் சித்ரவதையை அனுபவித்துள்ளனர். கப்பலோட்டிய தமிழன் என புகழ்பெற்ற வ.உ.சிதம்பரனார் இச்சிறையில் இழுத்த செக்கு, அவர் நினைவாக சிறையின் முன் பகுதியில் பாதுகாக்கப்படுகிறது. இச்சிறையின் கண்காணிப்பாளராக முருகேன் உள்ளார்; சிறைத்துறை டி.ஐ.ஜி.,ஆக இருக்கிறார் கோவிந்தராஜன்.

இயற்கையின் குரலே...ஓசை!


"மேற்கு தொடர்ச்சி மலையும், அதன் காடுகளும், அங்குள்ள உயிரினங்களும் இயற்கை அன்னை நமக்கு அளித்திருக்கும் அரிய வரங்கள். அவற்றை நாம் இழந்து விடக்கூடாது. அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் இடம் பெறச் செய்ய வேண்டும். அதற்கான பணியைத்தான் நாங்கள் செய்து வருகிறோம்,'' என்கிறார் காளிதாசன்.
இயற்கை பாதுகாப்புக்காக ஓங்கி குரல் கொடுக்கும் "ஓசை' அமைப்பின் நிறுவனர் இவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோவையில் இயங்கி வரும் "ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பு, வனம் மற்றும் வன உயிர்களின் பாதுகாப்பு குறித்தும், சுற்றுச்சூழலின் மகத்துவம் பற்றியும் மாணவ, மாணவியர் மற்றும் பொது மக்கள் மத்தியில் ஏராளமான செய்திகளை எடுத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறது.
கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், அரசு ஊழியர்கள் என பல ஆயிரம் பேர், இவ்வமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டு, சூழலைக் காக்கப் போராடி வருகின்றனர். மாதந்தோறும் "சூழல்-சந்திப்பு' என்ற பெயரில் சூழல் சொற்பொழிவையும், ஆண்டுதோறும் "உயிர் நிழல்' என்ற கானுயிர் புகைப்படக் கண்காட்சியையும் இவ்வமைப்பு நடத்தி வருகிறது.

அன்று பஞ்சாலைகள்...இன்று பசுஞ்சோலைகள்!

டெக்ஸ் சிட்டி...தென்னிந்தியாவின் மான்செஸ்டர்...இதெல்லாம் கோயம்புத்தூருக்கு இருக்கும் கூடுதல் அடைமொழிகள். அந்த பெயர் வந்ததன் வரலாறு...
சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவரால் கோவையில் 1888ல், "கோயமுத்தூர் ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில்ஸ்' என்ற பெயரில் முதல் பஞ்சாலை துவக்கப்பட்டது. இன்றும் "ஸ்டேன்ஸ் மில்ஸ்' என்று அழைக்கப்படுவது, அந்த ஆலைதான். பஞ்சாலை மட்டுமின்றி, பள்ளி மற்றும் தொழிலாளர் நலத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியவர் ராபர்ட் ஸ்டேன்ஸ்.
சில ஆண்டுகளுக்குப் பின், வெங்கட்ரமணா அய்யங்கார் என்பவர் ஸ்டேன்ஸ் மில்லை விலைக்கு வாங்கினார்; 1930ல் கோபால் நாயுடு குடும்பத்தின் கைக்கு அது மாறியது. 1890ல் சர் ராபர்ட் ஸ்டேன்ஸ், நெசவு வசதிகொண்ட "மால் மில்' துவக்கினார். சில ஆண்டுகளுக்கு பிறகு சாத்தப்ப செட்டியார், அந்த மில்லை வாங்கி "சோமசுந்தரம் மில்ஸ்' எனப் பெயரிட்டார்.
1907ல் சாத்தப்ப செட்டியார் மற்றும் தேவகோட்டை ஜமீந்தார் இணைந்து "காளீஸ்வரா மில்ஸ்' உருவாக்கினர். 1910ல் பஞ்சாலையாக துவங்கிய லட்சுமி மில்ஸ், சில ஆண்டுகளுக்கு பின் ஜவுளித்துறை உற்பத்தி நிறுவனமாக மாற்றப்பட்டது. 1922ல் பி.எஸ்.ஜி., குழுமத்தின் சார்பில் ரங்கவிலாஸ் ஜின்னிங், ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில்ஸ் துவக்கப்பட்டது.
கோவை மில்கள் வளர்ச்சியில் 1932ம் ஆண்டு முக்கியமானதாக ஆண்டாகும். பைகாரா ஹைட்ரோ எலக்ட்ரிக் புராஜெக்ட் திட்டத்தால் கோவை மற்றும் சுற்றுப்பகுதிகளில் தேவையை விட அதிக அளவில் மின்சக்தி கிடைத்தது. 1929ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக ஜவுளித்துறை இயந்திரங்களின் விலை கணிசமாக குறைந்தது.
கோவை மாநகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் 1930 முதல் 1939ம் ஆண்டுகளில் 27 மில்கள் புதிதாக துவக்கப்பட்டன. 1930ல் அகமதாபாத் மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் கைத்தறித்துறைக்கு வழங்க போதிய நூல்கள் இல்லாததால், தென்னிந்தியாவில் தயாரிக்கப்படும் நூல்கள் மட்டுமே நாட்டின் ஒட்டுமொத்த கைத்தறித்துறைக்கு வழங்கப்பட்டன.
சுதந்திரத்துக்கு பிறகு, புதிய கைத்தறி நெசவுக்கூடங்கள் துவக்க தடை விதிக்கப்பட்டது. கைத்தறி மற்றம் விசைத்தறி கூடங்களுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்து கொடுக்க, மில்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதுவரை வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்ருடிந்த மில்கள், தொழிலில் நிலைத்திருக்க குறுந்தொழில்துறையை நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக பணியாற்றிய சண்முகம் செட்டியாரின் ஆலோசனையின் பேரில், தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) 1933 பிப்ரவரியில் துவக்கப்பட்டது. 
அதில், பக்கிங்காம் அண்ட் கர்நாடிக் மில்ஸ், கோயமுத்தூர் காட்டன் மில்ஸ், கோயமுத்தூர் ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில்ஸ், காளீஸ்வரா மில்ஸ், லட்சுமி மில்ஸ், ஸ்ரீ மீனாக்ஷி மில்ஸ், பங்கஜா மில்ஸ், ராதாகிருஷ்ணா மில்ஸ், ராஜலட்சுமி மில்ஸ், ரங்கவிலாஸ் ஜின்னிங், ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில்ஸ், வசந்தா மில்ஸ் உள்ளிட்ட 11 மில்கள், உறுப்பினர்களாக இருந்தன.
சங்கத்தில், ஜி. குப்புசாமி நாயுடு, சி.வி. வெங்கட்ரமணா அய்யங்கார், பி.எஸ்.சாத்தப்ப செட்டியார், பி.எஸ். பத்மநாபன், சி.ஆர். சதாசிவ முதலியார், வி.ரங்கசாமி நாயுடு, பி.ரங்கசாமி நாயுடு, பி.எஸ்.ஜி., கங்கா நாயுடு மற்றும் ஆர்.கே. ராமகிருஷ்ணன் செட்டியார் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருந்தனர். இதன் முதல் தலைவர், பி.எஸ்.சாத்தப்ப செட்டியார்.
இந்த சங்கத்தில் தற்போது 475 மில்கள் உறுப்பினர்களாக உள்ளன. கோவை மற்றும் சுற்றுப் பகுதிகளில் தற்போது 120 மில்கள் வரை இயங்குகின்றன. ரேஸ்கோர்ஸ் பகுதியில், இவ்வமைப்பின் அலுவலகம் உள்ளது. தலைவராக தினகரன், துணைத் தலைவர்களாக ராஜ்குமார், செந்தில்குமார் உள்ளிட்டோர் நிர்வாகிகளாக பொறுப்பு வகிக்கின்றனர்.
அன்றைக்கு, கோவைக்கு பஞ்சாலை நகரம் என்று பெயர் பெற்றுத் தந்த பல ஆலைகளும், இன்று இயக்கமின்றி முடங்கிப்போய், மரங்கள் அடர்ந்த பசுஞ்சோலைகளாக மாறி விட்டன; சில மில்கள், கான்கிரீட் காடுகளாக உருமாறியுள்ளன. பஞ்சாலை நகரம் என்ற பெருமையை, கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது கோவை.

கோவையின் குலம் காக்கும் வேலய்யா...!


தமிழிலும் கொங்குத் தமிழுக்கென்று ஓர் உயர்ந்த இடமுண்டு. அந்த கொங்கு மண்ணிலே தமிழ்க் கடவுளான முருகன் வீற்றிருக்கும் உயர்ந்த மலைதான், மருதமலை. அரிய மூலிகைகளையும், அற்புதமான மரங்களையும் கொண்ட குளுமையான இந்த மலைக்கு "மருந்து மலை' என்றும் ஒரு பெயருண்டு.
ஒலி எழுப்பும் தன்மையுடைய மரங்களும் மருதமலையின் இயற்கைச்சூழலில் அமைந்துள்ளதாக பேரூர்ப்புராணத்தில் சொல்கிறார் கச்சியப்ப முனிவர். கடல் மட்டத்திலிருந்து 600 அடி உயரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள இந்த மலையில்தான், சுப்ரமணியரின் அருட்சுடர் பரவும் அற்புத திருக்கோவில் அமைந்துள்ளது.
மலையடிவாரத்தில், இடப்பகுதியில் "வள்ளியம்மன் திண்டு' உள்ளது. அங்கே வழிபட்டு விட்டு, 600 படிகளைக் கடந்தால், சிரசில் கண்டிகையுடன், பின்பக்கம் குடுமியுடன், கோவணங்கொண்டு வலது கரத்தில் தண்டேந்தி, இடது கரத்தைத் திருவரையில் அமைத்துப் புன்முறுவல் சிரிப்புடன் அருள் தருவார் திருமுருகன்.
பழங்காலத்தில் இவ்விடத்தில் அருவுருவத் திருமேனியாக வள்ளிதெய்வானை முருகப்பெருமானை அமைத்து வழிபட்டனர். திருமேனிகளின் அடையாளமாக மூன்று ஓங்கார வடிவக் கற்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்ச்சித்தர் மரபில் பல்வேறு காலத்தில் பல்வேறு சித்தர்கள் இங்கு வழிபாடு செய்துள்ளனர்.
பாம்பாட்டிச் சித்தர் இன்றளவில் சமாதி நிலையில் இருந்து வழிபடும் தலமாக இது அமைந்துள்ளது. மருதமலையில் மருததீர்த்தம், சரவணப்பொய்கை, கன்னிகை தீர்த்தம், பாம்பாட்டி சுனை, அனும தீர்த்தம் ஆகிய பலவகை தீர்த்தங்கள் உள்ளது.
பேரூர்ப்புராணத்தை இயற்றிய கச்சியப்ப முனிவர் படைத்த 36 படலங்களில், ஒன்றுதான் மருதவரைப் படலம். மருதமலை முருகப்பெருமானை நேரில் கண்டு வணங்கி, சித்தர்கள், முருக பெருமானை வழிபட்ட முறையினை உலகத்தமிழர்களுக்கு எடுத்துரைத்தவர். மலர் அர்ச்சனை, திருவிளக்கேற்றல், திருவமுது, திருமஞ்சனம் என இதிலே பல வழிபாடுகள் விளக்கப்பட்டுள்ளன.
முருகனுக்கான திருவிழாக்கள்: சூரசம்ஹார விழா, தைப்பூசவிழா, ஆடிக்கிருத்திகை விழா ஆகியவை ஆண்டுக்கு ஒரு முறையும், மாதம்தோறும் கிருத்திகை, வளர்பிறை சஷ்டி, விசாகம் நாட்களில் முருகனுக்கு சிறப்பு வழிபாடுகளும் வெகு சிறப்பாக நடக்கின்றன. குளுகுளு கோவைக்கு வருவோர் பெரும்பாலும், திருமுருகனைத் தரிசிக்காமல் திரும்புவதே இல்லை.

வெள்ளித் திரையால் கிடைத்த வெளிச்சம்


"வெரைட்டி ஹால் ரோடு எங்கிருக்கு' என்று கேட்டால் அது "டவுன்ஹால்ல இருக்கு' என்று பதில் சொல்லும் பலருக்கும், அந்த பெயருக்குக் காரணமான "வெரைட்டி ஹாலை'த் தெரியுமா என்பது சந்தேகமே. "வெரைட்டி மீல்ஸ்' பற்றி கற்றுக் கொண்ட இந்த நகரத்து அவசரங்களில், "வெரைட்டி ஹால்' பற்றி அறிந்து கொள்ளும் அக்கறையோ நேரமோ நமக்கு இல்லை.
"ஆர்குட்' இல்லாமல் அன்பைப் பரிமாற முடியாது; "பேஸ்புக்' இன்றி பேசிக் கொள்ள முடியாது என்று, வலை தளங்களுக்குள் வாழுகிற இன்றைய தலைமுறைக்கு, "வெரைட்டி ஹால்' என்பது வெறும் சாலையின் பெயர். காலணாவுக்கு வாங்கிய "கம்மர்கட்', நாலணாவுக்கு வாங்கிய தேன் மிட்டாய் சகிதம், அப்பாவின் விரல் பிடித்து சினிமாவுக்குப் போன "சீனியர் சிட்டிசன்'களுக்கோ அது கனவுகளைப் பிரசவிக்கும் கருவறை.
ஆம், ஓசோனாய் கிழிந்த ஓட்டை டிராயர்களில், "போஸ்ட் ஆபீஸ் விளையாட்டு' விளையாடிய அன்றைய கோவைக் குழந்தைகளுக்கு திரைப்படங்களை அறிமுகப்படுத்தியது "வெரைட்டி ஹால்'தான்; இன்றைக்கு அதன் பெயர் "டிலைட்' தியேட்டர்.
தென்னிந்தியாவின் முதல் திரையரங்கான "டிலைட் தியேட்டர்', கோவை மக்களுக்கு வெள்ளித் திரையை மட்டுமா அறிமுகப்படுத்தியது? கோவை வீதிகளுக்கு 
வெளிச்சத்தை அறிமுகப்படுத்தியதும் அந்த தியேட்டர்தான். கோவைக்கு பைகாரா மின்சாரம் கிடைத்தது 1932ல்தான். அதுவரை, இந்நகரின் வீதிகளை அரிக்கேன் விளக்குகளே அலங்கரித்தன.
1930ல் ஆயில் இஞ்ஜின் மூலம் "வெரைட்டி ஹால்' திரையரங்குக்கு <உற்பத்தி செய்த மின்சாரத்தில் ஒரு பகுதியை தெருவிளக்குகளுக்கு திருப்பி கோவை வீதிகளுக்கு மின் வெளிச்சத்தை அறிமுகப்படுத்திய பெருமை வெரைட்டி ஹாலின் உரிமையாளரையே சாரும்.
அந்த திரையரங்கம் உருவாக்கி பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் தென்னிந்தியாவில் ஸ்டுடியோக்களே உருவாயின. அதற்கு முன், பம்பாய் மற்றும் கல்கத்தாவில் உருவான ஊமைப்படங்கள்தான் அன்றைய வெரைட்டி ஹாலில் திரையிடப்பட்டன. பேசாத படங்களை திரையிட, தான் கட்டிய திரையரங்கில் இருந்து ஊருக்கு வெளிச்சத்தைத் தந்ததால் கோவையின் வரலாறும், வரலாற்று ஆசிரியர்களும் இன்றைக்கு அவரைப் பற்றி வரிந்து கட்டிக் கொண்டு பேசுகிறார்கள்; அவர் பெயர் சாமிகண்ணு வின்சென்ட்.
வெரைட்டி ஹாலைத் தொடர்ந்து கோவையில், "லைட் ஹவுஸ்', "பேலஸ்', "எடிசன்', "டைமண்ட்' என உருவாகிய தியேட்டர்களில் பலவும் இன்றைக்கு இல்லை. இன்றைய "கென்னடி' தியேட்டரின் அன்றைய பெயர் "லைட் ஹவுஸ்'. நாஸ் தியேட்டரின் அன்றைய பெயர் பேலஸ்.
திரைப்படங்களுடனான ஆத்மார்த்தமான உறவுகள் முறிந்து போன இந்நாளில், பல திரையரங்குகள் "ஷாப்பிங் மால்'களாகவும், துணிக்கடைகளாகவும் உருமாறிவிட்டன. சுவாமி (எடிசன்), முருகன்(டைமண்ட்) ,அருள், ராஜா, ஸ்ரீபதி, ரெயின்போ, சிவசக்தி, கீதாலயா இருதயா என, இழுத்து மூடப்பட்ட திரையங்குகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
"ஹவுஸ் புல்' போர்டு தொங்க 
விடாமல் மூடப்படுகிற திரையரங்குகள் ஒவ்வொன்றும் நமது இதயங்களில் இனம் புரியாத ஒரு கணத்தை இறக்கி வைக்கத் தவறுவதில்லை.

கோவைக்கிழார் என்ற மாமனிதர்!


ஒரு சாராருக்கு சாதகமாக எழுதப்பட்ட சரித்திரங்களால், நாடாண்டவர்கள் நடுத் தெருவுக்கு வந்ததுண்டு. உலக வரலாறை வாசித்தவர்களுக்கு இந்த உண்மை புரியும். கோவைக்கிழார் என்கிற மனிதர் இல்லாமல் போயிருந்தால் கோவையின் வரலாறுக்கும் அப்படிப்பட்ட அபாயம் நேர்ந்திருக்க வாய்ப்புண்டு.
யார் இவர்? 1888 நவம்பர் 30ம் நாள், மருதாசலம்-அங்கம்மாள் தம்பதியர் கோவைக்கு கொடுத்த கொடைதான் இராமச்சந்திரன் செட்டியார் என்கிற கோவைக்கிழார். செல்வச் செழிப்பு மிக்க, கல்வியின் முக்கியத்துவத்தை <<உணர்ந்த குடும்பத்தில் பிறந்ததால், அக்காலத்திலேயே பி.ஏ. முடித்து சட்டக்கல்வியும் பயின்று வழக்குரைஞர் ஆனார்.
சைவத்தில் இவருக்கு இருந்த ஆர்வத்தால் அன்றைய இராசதானியின் அறநிலைய வாரியம், இவரை ஆணையராக நியமித்தது. கோவில் வரலாறு வெளியிடுதல், கல்வெட்டு ஆராய்ச்சி, திருமடங்களில் தமிழ்க் கல்லூரிகள் துவங்குதல் உள்ளிட்ட பணிகள் இவரது காலத்தில் நடந்தன.
எழுத்தின் மீது தீராக் காதல் கொண்ட கோவைக் கிழார், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, உருது, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய எட்டு மொழிகளில் புலமை பெற்றவர். பேரூர் தமிழ்க் கல்லூரி துவங்கியதில் இவருக்கும் பங்குண்டு. பின்னாளில் இவர் அக்கல்லூரியின் முதல்வராகவும் இருந்தார்.
கோவையின் விரிவான வரலாறை முதன் முதலில் எழுதியவர் கோவை கிழார்தான். கோவையின் வரலாறு குறித்து எழுதுவோர்க்கு இவர் எழுதிய ""இதுவோ எங்கள் கோவை'' புத்தகம்தான் "பைபிள்' எனலாம். இந்நூலில், கொங்கு நாடு என்றொரு நாடு இருந்ததை நிறுவும் கோவை கிழார், கொங்கு நாட்டின் எல்லைகள், பரப்பு, பிரிவுகள், அமைப்பு குறித்து இதில் தெளிவுற விளக்குகிறார்.
இந்நாட்டு, மக்கள், வணிபம், சமூகம் உள்ளிட்ட முக்கிய தகவல்களை சங்க இலக்கியங்களின் துணையோடு இந்நூல் தெளிவுபடுத்துகிறது. கங்கர்கள், பல்லவர்கள், குறுநில மன்னர்கள், ராஷ்டிர கூடர்கள், சேரர்கள், சோழர்கள் என கொங்கு மண்ணை ஆண்ட மன்னர்கள் குறித்தும் கோவை கிழார் இந்நூலில் விவரிக்கிறார்.
சோழர்களைத் தொடர்ந்து, கொங்கு சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர பேரரசு என வரிசையாக ஆண்டவர்கள் குறித்த தகவல்களும் இவரது புத்தகங்களில் கிடைக்கின்றன. 19 மற்றும் 20ம் நூற்றாண்டு என பகுத்து, விரிவானதொரு கொங்கு நாட்டு வரலாறை, இலக்கியம் மற்றும் கல்வெட்டு ஆதாரங்களோடு நிறுவியவரும் இவரே.
இம்மண் பலராலும் ஆளப்பட்டிருக்கிறது; அவர்களைப் பற்றிய தகவல்களையும் அதற்கான ஆதாரங்களையும் தேடி கோவை வரலாறு எழுதுவது மிவும் கடினமான பணியாகும். பல்கலைக் கழகங்களும் பல அறிஞர்களும் கூடி செய்ய வேண்டிய பணியைத் தனியொரு ஆளாக நின்று செய்து முடித்தவர் இவர். கோவை வரலாறை எழுதவே தன் வாழ்நாளின் பெரும்பகுதியை இதற்காகவே செலவிட்ட ஒரு மாமனிதனை இந்த கோவை தினத்தில் நினைவு கூர்வது நமது கடமை.