Friday, December 13, 2013

நாடு போற்றிய ஜி.டி.நாயுடு



கோயம்புத்தூர்க்காரர்கள் என்றால், வெளிநாட்டு தொழிலதிபர்கள் கொஞ்சம் பொறாமையாய்ப் பார்ப்பார்கள். அதற்குக் காரணம், இங்குள்ளோரின் தொழில் நுட்ப அறிவு. முதலாம் ஆண்டில், இங்கே யாராவது கண்காட்சிக்கு ஓர் இயந்திரத்தைக்கொண்டு வந்தால், அடுத்த ஆண்டிலே அதை விட சிறப்பான இயந்திரத்தை, குறைவான விலைக்கு தரமாக இங்கே செய்து விடுவார்கள்.
இன்றுள்ள தொழில் நுட்ப வேட்கைக்கு, அன்றே நாற்று நட்டவர் ஜி.டி.நாயுடு. நாடறிந்த விஞ்ஞானியான ஜி.டி.நாயுடுவின் பெயரிலுள்ள அருங்காட்சியகம், நாளைய தலைமுறையையும் வியக்க வைக்கும் விஞ்ஞானக் கூடமாக விளங்குகிறது. தொழில் நுட்பம் வளராத காலத்தில் ஜி.டி.,நாயுடு கண்டுபிடித்த கருவிகள், உபகரணங்கள் பிரமிக்கதக்கவை.
கோவை-அவிநாசி சாலையில் பிரெசிடென்ட் ஹால் வளாகத்தில் ஜி.டி.நாயுடு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. ஒரு நூற்றாண்டு கால தொழில்நுட்ப வரலாறுகள், இங்கே காட்சிக்கு உள்ளன. சின்ன திருப்பு உளி போன்ற கைக்கருவிகள் தொடங்கி, நவீனகால தொழில்நுட்பங்களான வானொலி, தொலைக்காட்சி வரை அதன் காலவரிசைப்படி அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
பழைய கால வால்வு ரேடியோ, படிப்படியாக டிரான்சிஸ்டர், டேப்-ரிக்கார்டர் என்று தொழில் நுட்பம் வளர்ந்த காலத்தை நம் கண் முன்னே காட்டுகிறது இந்த காட்சியகம். சிலவற்றைப் பார்த்தால் இதுதானே என்று அலட்சியமாக தோன்றும்; ஆனால், ஜி.டி.,நாயுடு அவற்றை சேகரித்த காலத்தை கவனத்தில் கொள்ளும்போது அதன் உண்மையான மகத்துவம் புரியும்.
ரேடியோ, ரேடியோவுடன் இணைந்த ரெக்கார்ட் பிளேயர், உலகின் முதல் டயர் ரேடியோ (வானொலி நிலையத்தின் பெயர் தமிழில் இருக்கும்), ஸ்பூன் டைப் டேப் ரிக்கார்டர், ஆட்டோமேடிக் போனோகிராப் மெஷின் (காசு போட்டால் பாடும் கருவி), 1971ல் தயாரித்த உலகின் மிகச்சிறிய கால்குலேட்டர் என்று அங்குள்ள ஒவ்வொரு பொருளும் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்.
லங்காஷயர் எனும் ஆங்கிலேயர் பயன்படுத்திய காரை, ஜி.டி.நாயுடு வாங்கினார். அதுதான், கோவையில் முதல் முதலாக பதிவான காராகும்; அதன் பதிவு எண்: சி03 (எவ்ளோ ஈஸியா ஞாபகம் வச்சுக்கலாம்!). ஜி.டி.நாயுடுவின் தொழிற்சாலையில் தயாரான இந்தியாவின் முதல் மோட்டாரையும் அங்கே பார்க்க முடியும்.
எந்த வசதிகளும் இல்லாத சாதாரண கிராமத்தில் பிறந்து, மூளையை மட்டுமே மூலதனமாக கொண்டு முன்னேறி, தொழிற்புரட்சியை எதிர்கொண்டு சாதனைகள் படைத்த ஒரு மாபெரும் மனிதரின் சாதனைகளுக்கு சாட்சியாக திகழ்கிறது இந்த அருட்காட்சியகம்.

No comments:

Post a Comment