Friday, December 13, 2013

பெருமை மிகு பேரூர் பட்டீஸ்வரர்!


கோயம்புத்தூரின் தாய் நகரம் என்று பேரூரைச் சொல்வார்கள். நொய்யல் நுரைத்து ஓடிய பேரூரின் கரையிலே வீடு கண்ட பேரூர் பட்டீஸ்வரர், கொங்கு மண்ணுக்குச் செல்வச் செழிப்பை வாரிக் கொடுக்கும் வள்ளல் தெய்வம். மேலைச் சிதம்பரம் என்று அழைக்கப்படும் இக்கோவிலுக்கு சைவ சமய குறவர்களான நால்வரில் அப்பரும், சுந்தரரும் நேரில் வந்து தேவாரம் பாடியுள்ளனர்.
அருணகிரி நாதரின் திருப்புகழில் இக்கோவிலைப்பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கச்சியப்ப முனிவர் பேரூர் புராணத்தில் இக்கோவிலைப்பற்றி பாடியுள்ளார். இப்புராணம் 2,220 ம் பாடல்களை கொண்டதாகும். கொங்கு நாட்டை ஆண்ட மன்னர்கள் பலர் இக்கோவிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர்.
கொங்கு சோழர்களின் கல்வெட்டுகளும், ஹொய்சாள மன்னர்களின் கல்வெட்டுகளும் இந்த கோவிலில் அதிகம் காணப்படுகின்றன. கி.பி 11ம் நூற்றண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரை பேரூரை ஆட்சி செய்த கொங்கு சோழர்கள் இக்கோவிலின் அர்த்த மண்டபத்தையும், மகா மண்டபத்தையும் கட்டியுள்ளனர்.
இக்கோயிலின் திருப்பணியில் முக்கிய பங்கெடுத்த மன்னர் கொங்கு சோழதேவன் ஆவார். கி.பி.1207 - 1255 ம் ஆண்டு காலத்து கதவுகள், தூண்கள் இக்கோவிலில் உள்ளன. சுந்தரபண்டியன் காலத்தில் கோவிலின் மதில் சுவர் கட்டப்பட்டது.
மதுரை திருமலை நாயக்க மன்னரின் மைத்துனரான அனகாத்திரி என்பரால் கி.பி. 17 ம் நூற்றாண்டில் இக்கோயிலின் கனக சபை கட்டப்பட்டது. கனக சபைக்கு முன்புறம் உள்ள புது மண்டபம், நாட்டுக்கோட்டை நகரத்தாரான சோமசுந்தரத்தின் திருப்பணியால் உருவாக்கப்பட்டது. கோவிலின் திருமண மண்டபம் மத்திபாளையம் தீனம் பாளையத்தவர்களால் கட்டப்பட்டது.
கோவிலின் எதிரிலுள்ள தெப்பக்குளம் தெற்கணாம்பி அரசர்கள் வழி வந்த மாதையன் என்பவரால் கி.பி. 15 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். கோவில் கருவறையில் பட்டீஸ்வரர், லிங்க வடிவில் காட்சி தருகிறார். இக்கோவிலின் இறைவியாக வீற்றிருந்து பச்சை நாயகி அம்மன் காட்சி தருகிறாள். அம்மன் சன்னதி முன் துர்க்கை அம்மன் சன்னதி உள்ளது. கனக சபையில் நடராஜர் காட்சி தருகிறார்.
கனகசபையில் காணப்படும் எட்டுத்தூண்களில் காணப்படும் யானையுரி போர்த்திய மூர்த்தி, அக்கினி வீரபத்திரர், ஊர்த்துவ தாண்டவர், நர்த்தன கணபதி, ஆறுமுகப்பெருமான், ஆலங்காட்டு காளி, அகோர வீரபத்திரர், பிச்சாடனர் ஆகிய எட்டு சிற்பங்களும் காண்போரை வியக்க வைக்கும் கலை எழிலோடு காட்சி தருகின்றன. இச்சிற்பங்கள் பல புராணச்செய்திகள் புதைந்திருக்கின்றன. 
நாயக்கர் கால சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதோடு, உலோகத்தினால் வார்க்கப்பட்டது போன்ற பளபளப்பும், நுண்ணிய வேலைப்பாடும் கொண்டதாக உள்ளன. 
மதுரை மீனாட்சி சுந்தரரேஸ்வரர் ஆலயத்திலுள்ள ஆயிரம் கால் மண்டபச் சிற்பங்களோடு ஒப்பிடும் அளவிற்கு சிறப்பானதாக கூறப்படுகிறது.
இந்த கனகசபைச் சிற்பங்கள் மதுரை நாயக்க மன்னர் ஆட்சியில் நமக்கு கிடைத்த மரபு வழிச் செல்வமாகும். துர்க்கை அம்மன் சன்னதி முன் உள்ள சிங்கத்தின் வாயினுள், சுழலும் கல் உருண்டை ஒன்று உள்ளது. இது ஒரு சிற்ப வினோதமாகும். கோவிலின் எதிரில் உள்ள தெப்பக்குளம் அளவில் சிறியதாக இருந்தாலும், 16 கோணங்களில் அழகிலே மிளிர்கிறது.
சிறந்த இறை வழிபாட்டு தலமாக விளங்கும் பேரூர் பட்டீஸ்வரர் சுவாமி கோவில், இந்த மண்ணின் அழிக்க முடியாத வரலாற்று ஆவணமும் கூட.

No comments:

Post a Comment