Friday, December 13, 2013

கோவையும் தமிழ்ச் சினிமாவும்

தமிழகத்தின் முதல்வராக இருந்த ஒருவர்... முதல்வராக இருக்கும் போதே, கோவை ராமநாதபுரத்தில் இருந்து நஞ்சுண்டாபுரம் வரை நடந்தே சென்றார் என்கிற செய்தியை உங்களால் நம்ப முடிகிறதா? தமிழகமே கொண்டாடிய... இன்றைக்கும் கொண்டாடுகிற அந்தத் தலைவர் அன்றைக்கு நடந்தது அரசியல் காரணங்களுக்காக அல்ல; வேறெதற்கு?
இந்த கேள்விக்கான விடைக்குப் போகும் முன், கோவையில் வளர்ந்த சினிமாத்துறை குறித்து கொஞ்சம் பார்ப்போம்...
கோவையை புறக்கணித்து விட்டு, தமிழ் திரைப்பட வரலாறை எப்போதுமே எழுத முடியாது. "டூபாண்ட்' என்னும் பிரெஞ்சுக்காரரிடம் வாங்கிய ஊமைத் திரைப்படத்தை, தமிழகத்தின் பல ஊர்களுக்கும் அறிமுகப்படுத்தியவர் சாமிக்கண்ணு வின்சென்ட். ஆங்காங்கே "டெண்ட்' அமைத்து "படம் காட்டிய ' அவர், நிரந்தரமாக அமைத்த திரையரங்கம்தான் "டிலைட்'.
இந்த திரையரங்கம் அமைந்த பின்னரே, கோவையில் பட்சிராஜா மற்றும் சென்ட்ரல் திரையரங்குகள் உருவாயின. 1952 தேர்தலுக்குப் பின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த முதல்வர்களில் ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், பன்னீர் செல்வம் ஆகியோரைத் தவிர மற்றவர்கள் திரைத்துறையில் இருந்து வந்தவர்கள்தான்.
அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜானகி ஆகிய நான்கு முதல்வர்களை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியதில் கோவை, புலியகுளத்தில் இருந்த பட்சிராஜா ஸ்டுடியோ மற்றும் சிங்காநல்லூரில் இருந்த சென்ட்ரல் ஸ்டுடியோ இரண்டுக்கும் பெரும் பங்குண்டு. 
எம்.ஜி.ஆர் - அஞ்சலிதேவி நடித்த "மர்மயோகி', சென்ட்ரல் ஸ்டுடியோவிலும், எம்.ஜி.ஆர் - பானுமதி நடித்த "மலைக்கள்ளன்', பட்சிராஜாவிலும் உருவானவை.
தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.ராஜகுமாரி, அண்ணா, ஏ.பி.நாகராஜன், எம்.ஆர்.ராதா, கண்ணதாசன், எம்.ஜி.ஆர்., சிவாஜி, கருணாநிதி உள்ளிட்டோர், கோவை மண்ணில் கால் வைத்த பின்னர்தான் மாபெரும் வெற்றியைப் பெற்றனர்.
இன்றைக்கு திரையுலகில் வெற்றி பெற்ற பாக்கியராஜ், சுந்தர்ராஜன், மணிவண்ணன், சுந்தர்.சி, பாலசேகரன், ஆர்.வி. உதயகுமார், கவுண்டமணி உள்ளிட்டோர் கோவை மண்ணுக்குச் சொந்தக்காரர்களே. இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக, தமிழ் திரைத்துறையில் மிகவும் வெற்றி பெற்ற ஒரு தயாரிப்பாளராக வலம் வந்தவர்தான் சாண்டோ சின்னப்ப தேவர்.
"பூஜையன்றே அனைத்து கலைஞர்களுக்கும் முழு சம்பளம், சொன்ன தேதியில் ரீலீஸ்' இவ்விரண்டு தாரக மந்திரங்களும் திரையுலகில் இவருக்கு மிகப்பெரிய மரியா தையைத் தேடித் தந்தன. 
எம்.ஜி.ஆரை வைத்து 12 படங்கள் தயாரித்த இவர், எம்.ஜி.ஆருக்கு உற்ற நண்பராகவும் இருந்தார். தீவிர முருக பக்தரான இவர் 1978ல் மறைந்தார்; அப்போது முதல்வராக இருந்தவர் எம்.ஜி.ஆர். ராமநாதபுரம் முதல் நஞ்சுண்டாபுரம் வரை நடந்த முதல்வர் யார் என்று இப்போது தெரிகிறதா?.

No comments:

Post a Comment