Friday, December 13, 2013

கோவைக்கிழார் என்ற மாமனிதர்!


ஒரு சாராருக்கு சாதகமாக எழுதப்பட்ட சரித்திரங்களால், நாடாண்டவர்கள் நடுத் தெருவுக்கு வந்ததுண்டு. உலக வரலாறை வாசித்தவர்களுக்கு இந்த உண்மை புரியும். கோவைக்கிழார் என்கிற மனிதர் இல்லாமல் போயிருந்தால் கோவையின் வரலாறுக்கும் அப்படிப்பட்ட அபாயம் நேர்ந்திருக்க வாய்ப்புண்டு.
யார் இவர்? 1888 நவம்பர் 30ம் நாள், மருதாசலம்-அங்கம்மாள் தம்பதியர் கோவைக்கு கொடுத்த கொடைதான் இராமச்சந்திரன் செட்டியார் என்கிற கோவைக்கிழார். செல்வச் செழிப்பு மிக்க, கல்வியின் முக்கியத்துவத்தை <<உணர்ந்த குடும்பத்தில் பிறந்ததால், அக்காலத்திலேயே பி.ஏ. முடித்து சட்டக்கல்வியும் பயின்று வழக்குரைஞர் ஆனார்.
சைவத்தில் இவருக்கு இருந்த ஆர்வத்தால் அன்றைய இராசதானியின் அறநிலைய வாரியம், இவரை ஆணையராக நியமித்தது. கோவில் வரலாறு வெளியிடுதல், கல்வெட்டு ஆராய்ச்சி, திருமடங்களில் தமிழ்க் கல்லூரிகள் துவங்குதல் உள்ளிட்ட பணிகள் இவரது காலத்தில் நடந்தன.
எழுத்தின் மீது தீராக் காதல் கொண்ட கோவைக் கிழார், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, உருது, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய எட்டு மொழிகளில் புலமை பெற்றவர். பேரூர் தமிழ்க் கல்லூரி துவங்கியதில் இவருக்கும் பங்குண்டு. பின்னாளில் இவர் அக்கல்லூரியின் முதல்வராகவும் இருந்தார்.
கோவையின் விரிவான வரலாறை முதன் முதலில் எழுதியவர் கோவை கிழார்தான். கோவையின் வரலாறு குறித்து எழுதுவோர்க்கு இவர் எழுதிய ""இதுவோ எங்கள் கோவை'' புத்தகம்தான் "பைபிள்' எனலாம். இந்நூலில், கொங்கு நாடு என்றொரு நாடு இருந்ததை நிறுவும் கோவை கிழார், கொங்கு நாட்டின் எல்லைகள், பரப்பு, பிரிவுகள், அமைப்பு குறித்து இதில் தெளிவுற விளக்குகிறார்.
இந்நாட்டு, மக்கள், வணிபம், சமூகம் உள்ளிட்ட முக்கிய தகவல்களை சங்க இலக்கியங்களின் துணையோடு இந்நூல் தெளிவுபடுத்துகிறது. கங்கர்கள், பல்லவர்கள், குறுநில மன்னர்கள், ராஷ்டிர கூடர்கள், சேரர்கள், சோழர்கள் என கொங்கு மண்ணை ஆண்ட மன்னர்கள் குறித்தும் கோவை கிழார் இந்நூலில் விவரிக்கிறார்.
சோழர்களைத் தொடர்ந்து, கொங்கு சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர பேரரசு என வரிசையாக ஆண்டவர்கள் குறித்த தகவல்களும் இவரது புத்தகங்களில் கிடைக்கின்றன. 19 மற்றும் 20ம் நூற்றாண்டு என பகுத்து, விரிவானதொரு கொங்கு நாட்டு வரலாறை, இலக்கியம் மற்றும் கல்வெட்டு ஆதாரங்களோடு நிறுவியவரும் இவரே.
இம்மண் பலராலும் ஆளப்பட்டிருக்கிறது; அவர்களைப் பற்றிய தகவல்களையும் அதற்கான ஆதாரங்களையும் தேடி கோவை வரலாறு எழுதுவது மிவும் கடினமான பணியாகும். பல்கலைக் கழகங்களும் பல அறிஞர்களும் கூடி செய்ய வேண்டிய பணியைத் தனியொரு ஆளாக நின்று செய்து முடித்தவர் இவர். கோவை வரலாறை எழுதவே தன் வாழ்நாளின் பெரும்பகுதியை இதற்காகவே செலவிட்ட ஒரு மாமனிதனை இந்த கோவை தினத்தில் நினைவு கூர்வது நமது கடமை.

No comments:

Post a Comment