Friday, December 13, 2013

இயற்கையின் குரலே...ஓசை!


"மேற்கு தொடர்ச்சி மலையும், அதன் காடுகளும், அங்குள்ள உயிரினங்களும் இயற்கை அன்னை நமக்கு அளித்திருக்கும் அரிய வரங்கள். அவற்றை நாம் இழந்து விடக்கூடாது. அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் இடம் பெறச் செய்ய வேண்டும். அதற்கான பணியைத்தான் நாங்கள் செய்து வருகிறோம்,'' என்கிறார் காளிதாசன்.
இயற்கை பாதுகாப்புக்காக ஓங்கி குரல் கொடுக்கும் "ஓசை' அமைப்பின் நிறுவனர் இவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோவையில் இயங்கி வரும் "ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பு, வனம் மற்றும் வன உயிர்களின் பாதுகாப்பு குறித்தும், சுற்றுச்சூழலின் மகத்துவம் பற்றியும் மாணவ, மாணவியர் மற்றும் பொது மக்கள் மத்தியில் ஏராளமான செய்திகளை எடுத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறது.
கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், அரசு ஊழியர்கள் என பல ஆயிரம் பேர், இவ்வமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டு, சூழலைக் காக்கப் போராடி வருகின்றனர். மாதந்தோறும் "சூழல்-சந்திப்பு' என்ற பெயரில் சூழல் சொற்பொழிவையும், ஆண்டுதோறும் "உயிர் நிழல்' என்ற கானுயிர் புகைப்படக் கண்காட்சியையும் இவ்வமைப்பு நடத்தி வருகிறது.

No comments:

Post a Comment