Friday, December 13, 2013

கோவில்களால் அமைந்த கோவன்புத்தூர்!

அறிவியல் தொழில் நுட்பத்துக்குப் பெயர் பெற்ற கோயம்புத்தூர், ஆன்மிக பூமியாகவும் திகழ்கிறது. இங்குள்ள கோவில்களே இதற்கு சாட்சி...
காவல்தெய்வம்: கோவையின் காவல் தெய்வமாகக் கருதப்படும் கோனியம்மன் கோவில் திருவிழா, இந்த நகரின் தலை சிறந்த விழாவாகும். கோவன்புத்தூரை ஆட்சி செய்த கோவனுக்கு குலதெய்வம் கோனியம்மன் என்பது வரலாறு. இக்கோவில் தோற்றுவிக்கப்பட்டு, 900 ஆண்டுகள் இருக்கும் என்று சொல்கின்றன சில சரித்திரச் சான்றுகள்.
கோட்டை ஈஸ்வரன் கோவில்: கோவையில் உள்ள இந்து கோவில்களில் மிகப் பழமையானதாக கருதப்படுவது கோட்டை ஈஸ்வரன் கோவில் ஆகும். கரிகாலசோழதேவன் என்ற மன்னனால் கி.பி. 9ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோவில் இருந்த பகுதியில் பெரிய கோட்டை ஒன்று இருந்துள்ளது;
கி.பி. 1809ல் கோவை மாவட்டத்தின் முதல் ஆட்சியரான காரே என்ற ஆங்கிலேயர், இக்கோவிலுக்கு அருகில் இருந்த இடிந்த கோட்டையை அப்புறப்படுத்தி, கோவிலை செம்மைபடுத்தி குட முழுக்கு விழா நடக்க உதவியதாக ஒரு தகவல் கூறுகிறது. அக்காலத்தில், சங்கீஸ்வரா என்று அழைக்கப்பட்ட இக்கோவில் பிற்காலத்தில் மருவி சங்கமேஸ்வரா என்று அழைக்கப்பட்டது.
கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் கரிவரத பெருமாள் கோவில், கோனியம்மன் கோவில் ஆகிய மூன்றும் அமைந்த நகர் பகுதியே ஆதியில் உருவான கோவன் புத்தூர் கிராமம் எனப்படுகிறது.
ராஜவீதி முடியும் இடத்தில் மேற்கு பகுதியில் பெருமாள் கோவிலும், அதை அடுத்து யோக ஆஞ்சநேயர் கோவிலும் உள்ளன. யோக ஆஞ்சநேயர் கோவில் முன்பாக ராகவேந்திரா சுவாமியின் நினைவு மண்டபம் உள்ளது. கோவையின் மற்றொரு பிரபல கோவிலான தண்டு மாரியம்மன் கோவில், 200 ஆண்டுகளுக்கு முன் உருவானது.
மருதமலை சுப்ரமணியர் கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், பூளமேடு கரிவரதராஜ பெருமாள் கோவில், ரேணுகா தேவி கோவில், ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் சிலையைக்கொண்ட புலியகுளம் முந்தி விநாயகர் கோவில் என கோவை நகரில் கோவிலுக்கும் பஞ்சமில்லை; ஆன்மிக நிகழ்வுகளுக்கும் குறைவில்லை.

No comments:

Post a Comment