Friday, December 13, 2013

செம்மொழி மாநாடு..சில நினைவுகள்

வெறும் தொழில் நகரமாக அறியப்பட்ட கோவை நகரம், கடந்த ஆண்டில் நடந்த செம்மொழி மாநாட்டால் சர்வதேசத்திலுள்ள தமிழர்களும் அறிந்த நகரமானது; உலகத்தமிழ் மாநாடு, கோவையில் நடத்தப்படும் என்று கடந்த 2009ல் அறிவித்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. அவசர கதியில் அதனை நடத்த ஒப்புதல் தரவில்லை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.

அதனால், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவதாக மாற்றி வாசித்தார் கருணாநிதி. கடந்த ஆண்டு, ஜூன் 23லிருந்து 27 வரை ஐந்து நாட்களுக்கு அமர்க்களமாக நடந்தது இந்த மாநாடு. ஆய்வரங்கம், எழிலார் பவனி, தமிழர் மாண்பை விளக்கும் கண்காட்சி என செம்மொழி மாநாடு, கோவை மக்களுக்குத் தந்த இனிய அனுபவங்களை என்றுமே மறக்க முடியாது.
அதையும்விட மகிழ்வூட்டிய மற்றொரு செய்தி, இந்த மாநாட்டையொட்டி கோவைக்குக் கிடைத்த மேம்பாட்டுப் பணிகள். கோவையிலும், சுற்று வட்டாரப் பகுதிகளிலும் பல நூறு கோடி ரூபாய்க்கு சாலைகள், நடைபாதைகள், பூங்காக்கள் என ஏராளமான வளர்ச்சிப்பணிகள் நடந்தன; ரயில் நிலையமும், விமான நிலையமும் புதுக்கோலம் பூண்டன.
எட்டுத்திக்கிலும் ஏ.ஆர்.ரஹ்மானின் "செம்மொழியான தமிழ்மொழியாம்' எதிரொலித்தது. பல லட்சம் பேர் குவிந்தனர்; கோவையே குதூகலித்தது. சிறையுள்ள இடத்திலே செம்மொழிப் பூங்கா, காந்திபுரத்திலே பல அடுக்கு மேம்பாலம் என பல அறிவிப்புகளும் வெளியாகின; எதுவுமே நடக்கவில்லை. தமிழ் வளர்ச்சிக்காக அறிவித்த திட்டங்களும் காற்றிலே கரைந்து போயின.
ஆட்சி மாறியதால் காட்சி மாறியது; செம்மொழி மாநாட்டால் தமிழ் வளர்ந்ததோ இல்லையோ, கொஞ்சம் வளர்ந்தது கோவை; அவசர கதியில் நடந்த வேலைகளில் பல கோடி ரூபாய் "துட்டு' பார்த்து, சில அரசியல்வாதிகளும், பல அதிகாரிகளும் தங்களை வளர்த்துக் கொண்டார்கள். மாநாடு நடந்த கோவையில் கூட, ஒரு தொகுதியையும் தி.மு.க., கைப்பற்றாதது இதன் வெளிப்பாடுதான்.

No comments:

Post a Comment