Friday, December 13, 2013

சிங்கங்கள் வாழ்ந்த சிங்கை!

ஒரு காலத்திலே சிங்காநல்லூரிலும், ராமநாதபுரத்திலுமாக இணைந்து சுற்றிய "இருவர்'தான், பிற்காலத்தில் இந்த தமிழ்நாட்டையே அடுத்தடுத்து ஆண்டார்கள். அந்த இருவரில் ஒருவரான கருணாநிதி, தன்னுடைய "நெஞ்சுக்கு நீதி' முதல் பாகத்தில் இப்படி எழுதுகிறார்...

"கோவை சிங்காநல்லூரில் பத்து ரூபாய்க்கு ஒரு வீடு பிடித்துக் கொண்டு நானும் என் மனைவியும் தங்கியிருந்தோம். அந்த குருவிக் கூட்டுக்குள்ளே உட்கார்ந்து கொண்டு, நான் எழுதிக் குவித்தவை ஏராளம்,''
அதே கருணாநிதி, கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, கோவை பொதுக்கூட்டத்தில் பேசியது: "கோவை நகரம், நான் அரசியலுக்காக வந்து போகும் இடமல்ல; என் வாழ்வில் இடம் பெற்ற முக்கியமான இடம். கோவை என்றால் கொள்கை வீரர்களின் கோட்டை; என்னைத் தாலாட்டிய தொட்டில்; நான் விளையாடிய தாழ்வாரம்; என்னைப் படிக்க வைத்த, கலை உலகுக்கு அறிமுகம் செய்த மண்; இதே ஊரில்தான், 1945க்கு முன் நானும், எம்.ஜி.ஆரும் ஒரே வீட்டில் குடியிருந்தோம். பிளேக் நோய் பரவி வந்த நிலையில், சிங்காநல்லூரில் குடியிருந்த நான், ராமநாதபுரத்தில் இருந்த அவர் வீட்டுக்கு குடிமாறினேன்,''.
கோவையில் தானும், எம்.ஜி.ஆரும் வாழ்ந்த நாட்களை கருணாநிதி நினைவு கூரும்போதெல்லாம், அரசியல் எதிர்பார்ப்புகளைத் தாண்டிய ஒரு நெகிழ்வையும், ஏக்கத்தையும் அவரிடம் பார்க்க முடியும். தனது முதல் மனைவி பத்மாவதியுடன் கருணாநிதி, சிங்காநல்லூரில் வசித்த போது, ராமநாதபுரத்தில் குடியிருந்தார் மக்கள் திலகம்.

No comments:

Post a Comment