Friday, December 13, 2013

வியப்பை விதைக்கும் வேளாண் பல்கலை!

கோவையின் சிறப்புகளைப் பட்டியல் போட்டால், முதல் வரிசையில் இடம் பிடிப்பது, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம். தமிழகத்தின் ஒரே வேளாண் பல்கலை, இங்கே இருப்பது கோவைக்கு இன்னுமோர் பெருமை. சிந்தையை ஈர்க்கும் சிவப்புக் கட்டடம், இச்சை கொள்ள வைக்கும் பச்சைப் பசுமை என இதன் புறத்தோற்றமே, நம்மை புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும்.
உட்புறத்திலே, வேளாண் துறையை அடுத்த கட்டத்திக்கு எடுத்துச் செல்வதற்கான ஆயிரமாயிரம் ஆராய்ச்சிகள்...தொடர்கின்றன. இத்தகைய பெருமைக்குரிய வேளாண் பல்கலை, நடப்பட்டு, உரமிடப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்ட வரலாறு இது.

இந்தியாவை பலநூறு ஆண்டுகள் தன் பிடிக்குள் வைத்திருந்த ஆங்கிலேயர்கள், நமது நாட்டை வளங்கொழிக்கும் விவசாய பூமி என்பதை உணர்ந்தனர். 
வேளாண் துறையில் ஆராய்ச்சிகளைச் செய்வதற்கு ஓர் ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்க சென்னை மாகாண கவர்னர் சர்.ஆர்தர் லாலி முடிவு செய்தார்.
ஆர்தர் லாலியின் முயற்சியால் வேளாண் வளர்ச்சி குறித்த நுணுக்கங்களை கற்பிக்கும் வகையில், 1896ல் சென்னை சைதாப்பேட்டையில் "மெட்ராஸ் வேளாண் கல்லூரி' நிறுவப்பட்டது. அவர் கோவைக்கு வந்தபோது, கோவையின் தட்ப வெப்பநிலை, இடவசதி, விவசாயிகளின் ஈடுபாடு உள்ளிட்ட பலவிதமான சாதக அம்சங்களைப் பற்றி அறிந்தார்.
மருதமலை சாலையிலுள்ள சிறிய பரப்பில் வேளாண் கல்வி நிலையத்தை உருவாக்க அவர் முடிவு செய்தார். அவரது உத்தரவிற்கிணங்க, 1906ல் ஜி.எஸ்.டி.,ஹேரிஸ் எனும் கட்டிடக்கலைஞரால், ச்ணஞ்டூணிண்ச்ணூச்ஞிஞுணடிஞி வடிவத்தில் வேளாண் பல்கலைக் கட்டட வடிவம் உருவாக்கப்பட்டது. கட்டுமானப் பணி, அதற்கு அடுத்த ஆண்டில் துவங்கி, 1909-ல் நிறைவுற்றது.
இக்கட்டிடம் ஆங்கிலேயர்களின் கட்டிட வடிவமைப்பை சார்ந்தது. அடுத்தடுத்துள்ள இரு கட்டிடங்களும் 54 அடி இடைவெளியில், "லாபி' மூலம் இணைக்கப்பட்டன. நான்கு மூலைகளிலும் கட்டைகளும், கற்களும் கொண்டு பலம் வாய்ந்த கட்டடமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை 1909 ஜூலை 14 அன்று ஆர்தர் லாலி திறந்து வைத்தார்.
இதற்கு முதலில், "மெட்ராஸ் அக்ரிகல்ச்சர் காலேஜ்' என்றுதான் பெயர் சூட்டப்பட்டது. சரித்திரச் சிறப்பு வாய்ந்த இந்த கட்டடத்தைக் கட்டிய லாலியின் நினைவாக, அந்த சாலைக்கு ஆர்தர் லாலியின் பெயர் வைக்கப்பட்டது. பேச்சுவழக்கில் "லாலி ரோடு' என்று கோவை மக்களால் அழைக்கப்படுகிறது.
இரண்டு வருட சான்றிதழ் படிப்புடன் துவங்கியது இக்கல்லூரி. சுதந்திரத்துக்கு முந்தைய ஆண்டு வரையிலும், தென்னிந்தியாவின் ஒரேயொரு வேளாண் ஆராய்ச்சிக்கழகமாக கோவையிலிருந்த "மெட்ராஸ் வேளாண் கல்லூரி' விளங்கியது. அதே ஆண்டில்தான், இளங்கலை பட்டப்படிப்பு துவக்கப்பட்டது; 1958 ல் முதுகலை படிப்பும் துவங்கியது.
கோவையைத் தொடர்ந்து மதுரையிலும் 1965 ல் வேளாண் கல்லூரி துவங்கப்பட்டது. அந்தக் கல்லூரியும், மெட்ராஸ் வேளாண் கல்லூரியும் கடந்த 1970ல்"மெட்ராஸ் வேளாண் கல்லூரி'கீழ் இயங்க துவங்கின. இவ்விரண்டு வேளாண் கல்லூரிகளையும் உள்ளடக்கி, 1971ல் தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம் என அந்தஸ்து வழங்கப்பட்டது.
குறைந்த பரப்பில் துவங்கப்பட்ட கோவை வேளாண் கல்லூரி, தற்போது ஆயிரம் ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இதில் 13 இளநிலை பட்டப்படிப்புகள், 25 விதமான முதுகலை மற்றும் பி.எச்.டி., படிப்புகளை ஆண்டுக்கு 3,693 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இதன் இப்போதைய துணைவேந்தர் முருகேச பூபதி.
விவசாயிகளிடம் மாற்று சிந்தனையை உருவாக்கவும், வேளாண் வளர்ச்சிக்கு உரமூட்டவும் எழில்மிகு கட்டடத்தை எழுப்பிய ஆர்தர் லாலி, இந்த நாளிலே நிச்சயமாக நினைவு கூரப்பட வேண்டியவர். 
நூறாண்டுகளைக் கடந்தும், அழகுடனும், கம்பீரத்துடனும் நிற்கும் அந்த கட்டடம், ஆர்தர் லாலியின் தொலைநோக்கை இன்னும் பல தலைமுறைகளுக்கு எடுத்துச்சொல்லும்.

No comments:

Post a Comment