Friday, December 13, 2013

கோவையின் குலம் காக்கும் வேலய்யா...!


தமிழிலும் கொங்குத் தமிழுக்கென்று ஓர் உயர்ந்த இடமுண்டு. அந்த கொங்கு மண்ணிலே தமிழ்க் கடவுளான முருகன் வீற்றிருக்கும் உயர்ந்த மலைதான், மருதமலை. அரிய மூலிகைகளையும், அற்புதமான மரங்களையும் கொண்ட குளுமையான இந்த மலைக்கு "மருந்து மலை' என்றும் ஒரு பெயருண்டு.
ஒலி எழுப்பும் தன்மையுடைய மரங்களும் மருதமலையின் இயற்கைச்சூழலில் அமைந்துள்ளதாக பேரூர்ப்புராணத்தில் சொல்கிறார் கச்சியப்ப முனிவர். கடல் மட்டத்திலிருந்து 600 அடி உயரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள இந்த மலையில்தான், சுப்ரமணியரின் அருட்சுடர் பரவும் அற்புத திருக்கோவில் அமைந்துள்ளது.
மலையடிவாரத்தில், இடப்பகுதியில் "வள்ளியம்மன் திண்டு' உள்ளது. அங்கே வழிபட்டு விட்டு, 600 படிகளைக் கடந்தால், சிரசில் கண்டிகையுடன், பின்பக்கம் குடுமியுடன், கோவணங்கொண்டு வலது கரத்தில் தண்டேந்தி, இடது கரத்தைத் திருவரையில் அமைத்துப் புன்முறுவல் சிரிப்புடன் அருள் தருவார் திருமுருகன்.
பழங்காலத்தில் இவ்விடத்தில் அருவுருவத் திருமேனியாக வள்ளிதெய்வானை முருகப்பெருமானை அமைத்து வழிபட்டனர். திருமேனிகளின் அடையாளமாக மூன்று ஓங்கார வடிவக் கற்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்ச்சித்தர் மரபில் பல்வேறு காலத்தில் பல்வேறு சித்தர்கள் இங்கு வழிபாடு செய்துள்ளனர்.
பாம்பாட்டிச் சித்தர் இன்றளவில் சமாதி நிலையில் இருந்து வழிபடும் தலமாக இது அமைந்துள்ளது. மருதமலையில் மருததீர்த்தம், சரவணப்பொய்கை, கன்னிகை தீர்த்தம், பாம்பாட்டி சுனை, அனும தீர்த்தம் ஆகிய பலவகை தீர்த்தங்கள் உள்ளது.
பேரூர்ப்புராணத்தை இயற்றிய கச்சியப்ப முனிவர் படைத்த 36 படலங்களில், ஒன்றுதான் மருதவரைப் படலம். மருதமலை முருகப்பெருமானை நேரில் கண்டு வணங்கி, சித்தர்கள், முருக பெருமானை வழிபட்ட முறையினை உலகத்தமிழர்களுக்கு எடுத்துரைத்தவர். மலர் அர்ச்சனை, திருவிளக்கேற்றல், திருவமுது, திருமஞ்சனம் என இதிலே பல வழிபாடுகள் விளக்கப்பட்டுள்ளன.
முருகனுக்கான திருவிழாக்கள்: சூரசம்ஹார விழா, தைப்பூசவிழா, ஆடிக்கிருத்திகை விழா ஆகியவை ஆண்டுக்கு ஒரு முறையும், மாதம்தோறும் கிருத்திகை, வளர்பிறை சஷ்டி, விசாகம் நாட்களில் முருகனுக்கு சிறப்பு வழிபாடுகளும் வெகு சிறப்பாக நடக்கின்றன. குளுகுளு கோவைக்கு வருவோர் பெரும்பாலும், திருமுருகனைத் தரிசிக்காமல் திரும்புவதே இல்லை.

No comments:

Post a Comment