Friday, December 13, 2013

இன்று வரை ஆட்சியாளர்கள்


கொங்கு மண்டலத்தின் தலைமைப்பீடமாக அறியப்படும் கோவைக்கு, 1799ம் ஆண்டில் முதல் கலெக்டராக நியமிக்கப்பட்டவர் வில்லியம் மெக்லியாட். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியில் மேஜர் ஆக பணியாற்றிய இவர் தான், கோவைக்கும், மலபார் பிராந்தியத்துக்கும் கலெக்டராக பணியாற்றினார்.
மைசூர்ப் போரில் திப்பு சுல்தானை வென்ற பிரிட்டிஷ்காரர்கள், அவரது ஆளுகையின் கீழ் இருந்த பகுதிகள் அனைத்தையும், மைசூரின் முன்னாள் மன்னரான உடையாரிடம் ஒப்படைத்தனர். ராஜ்யத்தை மீட்டுக் கொடுத்த கம்பெனியாருக்கு, கோவை, மலபார் உள்ளிட்ட பகுதிகளை சன்மானமாக வழங்கினார், மைசூர் மன்னர்.
அப்படி வழங்கப்பட்ட பகுதியில், நேரடியாக ஆட்சி செய்வதிலும், வரி வசூலிப்பதிலும் பிரச்னைகள் இருந்தன. எனவே, தங்களது ராணுவத்தில் மேஜராக பணியாற்றிய மெக்லியாடை கலெக்டராக அனுப்பி வைத்தனர், கிழக்கிந்திய கம்பெனியினர்.
அவரது நிர்வாகம், வரி வசூலை தீவிரப்படுத்த மேற்கொண்ட செயல்பாடுகள், விவசாயிகள் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான நடவடிக்கை ஆகியவற்றில் தவறுகள் நிறைய இருந்ததாக, அதுபற்றி பிற்காலத்தில் ஆய்வு செய்த அதிகாரிகளே குறிப்பிட்டுள்ளனர்.
பரப்பளவு அதிகமாக இருந்தபடியால், 1799ம் ஆண்டில் வருவாய் நிர்வாகத்துக்கு ஏற்ப, இரு பகுதிகளாக கோவை பிரிக்கப்பட்டது. இந்த இரு பகுதிகளும், 1804ல் ஒரே கலெக்டரின் ஆளுகையின் கீழ் இருந்தன. அப்போது கோவையின் கலெக்டராக பதவி வகித்தவர், ஹென்றி சலிவன் கிரீம் என்ற எச்.எஸ்.கிரீம்; அவர், கோவையில் பதவி வகித்தது 15 மாதங்கள் மட்டுமே.
மெக்லியாட், கிரீம் இருவருக்கும் இடைப்பட்ட காலத்தில், காக்பர்ன், ஹெப்பர்ன் ஆகியோர், சிறிது காலம் (1801ம் ஆண்டு) கலெக்டராக பொறுப்பு வகித்துள்ளனர். 1799ல் சிறிது காலம் ஹர்டிஸ் என்பவரும் கலெக்டராக பணியாற்றியுள்ளார்.
மலபார் பிராந்தியத்தில் பழசி ராஜா உடன் பிரிட்டிஷார் மோதிக்கொண்ட காலத்தில், கலெக்டராக இருந்த மெக்லியாட் அங்கு சென்றிருக்கலாம், அப்போது மற்றவர்கள் கலெக்டராக பொறுப்பு வகித்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த 1990ல் கோவையில் துணை ஆட்சியராக பயிற்சி பெற்ற ராஜேந்திரன் என்பவர், கோவை வனக்கல்லூரி, வேளாண் பல்கலை என பல இடங்களிலும் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு, கோவை மாவட்டத்தில் கலெக்டர்களாக இருந்தவர்களின் பட்டியலைத் தயாரித்தார். அவரது பட்டியலின்படி கணக்கிட்டால், தற்போதுள்ள கருணாகரன், இந்த மாவட்டத்தின் 174வது கலெக்டர்

No comments:

Post a Comment